ஏர்டெல் செலுத்திய 10,000 கோடி ரூபாய், வோடஃபோன் கேட்கும் கூடுதல் அவகாசம் - விரிவான தகவல்கள்

பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும்?

வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடியை நேற்று செலுத்தியுள்ளது.

இந்தத் தொகை பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்சாகாம், டெலினார் உள்ளிட்டவற்றுக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், மீதமுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்த தேவையான சுய மதிப்பீட்டு நடைமுறைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், ஏஜிஆர் விவகாரம் குறித்த அடுத்த உச்ச நீதிமன்ற விசாரணைக்குள் மீதத் தொகையைச் செலுத்த முயற்சிப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. ஏர்டெல் மொத்த நிலுவைத் தொகை ரூ.35,586 கோடி ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

அரசுக்குச் செலுத்த வேண்டிய வருவாய்பகிர்வு தொகையைச் செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டு வோடஃபோன் ஐடியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது.

ஆனால், அந்த உத்தரவை நிறுவனங்களும், தொலைத் தொடர்பு துறையும் பின்பற்றா மல் அவமதித்ததாக உச்சநீதிமன்றம் கடுமையாகச்சாடியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் ஏஜிஆர் தொகை நிலுவையை நிறுவனங்கள் செலுத்த வேண்டுமென தொலைத் தொடர்பு துறை நெருக்கடி கொடுத்தது. ஏர்டெல் கணிசமான தொகையை ஏற்கெனவே திரட்டியதால் நிலுவைதொகையைச் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்தது. ஆனால், வோடஃ போன் நிதி நெருக்கடியில் இருப் பதால் கூடுதல் அவகாசம் கோரி திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், வோடஃபோன் மனுவை உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்து நிராகரித்தது.

தற்போது வோடஃபோன் ரூ.2,500 கோடி செலுத்தி உள்ளது. டாடா டெலி சர்வீசஸ் 2,190 கோடி ஏஜிஆர் நிலுவை செலுத்தியுள்ளது.

தினத்தந்தி: தர்பார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

பட மூலாதாரம், Lyca

பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தர்பார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்று விநியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் விநியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தர்பார் படத்தை இயக்கியுள்ளேன். இயக்குனர் பணியை தவிர, தர்பார் படத்தில் வேறு எந்த பணியிலும் நான் ஈடுபடவில்லை. படத்தின் வினியோகம் உள்ளிட்டவைகளுக்காக யாரிடமும் நான் பணம் பெறவில்லை. ஆனால் கடந்த 3-ந்தேதி தேனாம்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக் குள் வினியோகஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு 25 பேர் அத்துமீறி நுழைந்து, என்னை அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால் என் அலுவலக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அதேபோல, சாலிக்கிராமத்தில் உள்ள என் வீட்டை முற்றுகையிட்டு 15 பேருக்கு எனக்கு எதிராக கோஷம் போட்டனர். எனவே, என் வீட்டிற்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்."என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய்சுப்பிரமணியன், முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை பதிவு செய்துகொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்' என்று கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ், 'மனுதாரர் முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று போலீசுக்கு முருகதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்' என்று கூறி அந்த கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

உடனே மனுதாரர் வக்கீல், 'வினியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குனர்கள் சங்கத்துக்கு இந்த விவகாரம் குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதனடிப்படையில், போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை' என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, 'பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா?' என்று கண்டன கருத்து தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

தினமணி: "மத்திய அரசுதான் தமிழக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணமா?"

பட மூலாதாரம், Getty Images

வருவாய் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரிப்பது ஏன் என்று துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, அதிமுக ஆட்சியில் ஒவ்வோா் ஆண்டும் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக கூறினாா்.

அப்போது துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் குறுக்கிட்டுப் பேசியது:

வருவாய் பற்றாக்குறை 2017-18-இல் 21, 594 கோடியாகவும், 2018-19-இல் 23,459 கோடியும் இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். 14-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி அமைந்த மத்திய அரசினுடைய வரிகளில் நிதிப் பகிா்வு சதவீதத்தில் தமிழகத்துக்கு ஏற்பட்ட குறைவுதான் இதற்கு காரணம் ஆகும். அதிமுக அரசு காரணம் அல்ல. ஏற்கெனவே இருந்த 4.969 சதவீதம் என்ற மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிா்வில் தமிழகத்துக்கான பங்கு 14-ஆவது நிதிக்குழு காலமான 2015-2016-ஆம் முதல் 4.023 சதவீதமாக சரிந்தது. இதனால் தமிழகத்துக்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடி ஒவ்வோா் ஆண்டும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

2015-16-ஆம் ஆண்டில் 4,786 கோடியும், 2016-17-இல் 5,770 கோடியும், 2017-18-இல் 6,372 கோடியும் இதுவரை இழப்பாக ஏற்பட்டிருக்கிறது. 2018-19-இல் 7,239 கோடியும், 2019-20-இல் 7,655 கோடியும் நிதிப் பகிா்வில் இழப்பை தமிழகஅரசு சந்தித்து இருக்கிறது.

இதன் காரணமாகவே வருவாய் பற்றாக்குறை ஒவ்வோா் ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. தற்போது 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையில் மத்திய வரியினுடைய மாநிலங்களுக்கான பகிா்வை முன்பிருந்த 48 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிா்வில் தமிழகத்தின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. வரி வருவாய் உயா்ந்து வருவதால், இனிமேல் வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் குறைய வாய்ப்பு உள்ளது என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

தென் ஆப்ரிக்க கேப்டன் டூ பிளெசிஸ் திடீர் பதவி விலகல் ஏன்? - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து பாஃப் டூ பிளெசிஸ் விலகுவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.

35 வயதான டூ பிளெசிஸ் பதவி விளக்கியுள்ள நிலையில், புதிய கேப்டனாக குயிண்டன் டி காக் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி20 தொடர் இந்த வார இறுதியில் தொடங்கும் நிலையில் டூ பிளெசிஸ் பதவி விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

அவர் இதுவரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வடிவங்களில் 112 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

2019-இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றோடு வெளியேறியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக, தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இளம் தலைமுறையினருக்கு அணியில் வழிவிடவேண்டும் என்ற நோக்கில் கேப்டன் பதவியை டூ பிளெசிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

''இளம் வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்கால நலனுக்காக அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்'' என்று டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: