மதராசாவில் அதிகரிக்கும் இந்து மாணவர்கள்- காரணம் என்ன?

  • பிராபகர் மணி திவாரி
  • பிபிசி ஹிந்தி சேவைக்காக
மதராசா

பட மூலாதாரம், SANJAY DAS/BBC

மதக் கல்வி நிறுவனமாக அறியப்படும் மதராசா என்றால் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பெறும் சூழல்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மதராசாவில் இந்த நிலை மாறி வருகிறது. அங்கே இஸ்லாமியர் அல்லாத மாணவர்கள் படிப்பதைக் காணலாம். அது மட்டுமில்லாமல் அங்கே இஸ்லாமியர் இல்லாத மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் திங்களன்று நடந்த மதராசா போர்டு தேர்வு ஒரு புது சாதனையைப் படைத்தது. இந்த தேர்வில் கலந்து கொண்ட 70 ஆயிரம் மாணவர்கள் அதாவது 18 சதவீதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். மதராசா போர்ட் நடத்தும் இந்த தேர்வு 10ஆம் வகுப்பு தேர்வுக்கு சமமானது. 2019ஆம் ஆண்டு இந்த தேர்வு 12.77% இந்து மாணவர்கள் எழுதினர். மேற்கு வங்கத்தில் 6000க்கும் அதிகமான அரசிடம் உதவி பெறும் மதராசாக்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மதராசா தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் உயர்ந்து வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர் அல்லாத மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரை மதராசாவில் அதிக எண்ணிக்கையில் சேர்கிறார்கள் என மேற்கு வங்க மதராசா கல்வி போர்டின் தலைவர் அபூ தாஹேர் கம்ரூதீன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாங்குடா, புருலியா மற்றும் பீர்பூம் போன்ற மாவட்டங்களில் உள்ள நான்கு பெரிய மதராசாக்களில் இஸ்லாமியர் அல்லாத மாணவர்களே அதிகம் சேர்கிறார்கள் என்றார். 10ஆம் வகுப்பில் இருக்கும் பாடத்தை ஒட்டி இங்கே ஆசிரியர்கள் கற்பிப்பதே இதற்கு காரணம் எனக் கூறுகிறார் கம்ரூதீன்.

பட மூலாதாரம், Sanjay das/bbc

மேலும் அவர், அதிகம் சேர்வது மட்டுமில்லாமல் அவர்கள் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஈடாக நல்ல மதிப்பெண்களையும் பெறுகிறார்கள் என்கிறார்.

பர்தவான் மாவட்டத்தில் உள்ள மதராசாவில் படிக்கும் 14 வயதான சேன், "மதராசாவில் எங்களை மத்த்தின் அடிப்படையில் வேறுபடுத்துவது கிடையாது" என்கிறார்.

மேற்கு வங்கத்தில் உயர்நிலை பள்ளி கல்வித்துறை ஆவணங்களின்படி, மதராசாவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இது போன்ற மதராசாக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் மதராசாக்களுக்கு ஏற்கனவே சில சிறப்புகள் உள்ளன. இதில் முக்கியமானதொன்று என்றால் இங்கே மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கையும் இருக்கிறது.

கடந்த ஆண்டு மதராசா போர்டில் தேர்வு எழுதியவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு நடந்த தேர்வில் பர்துவான் மாவட்டத்தில் கேதுர்கிராமில் உள்ள அகர்டாங்கா மதராசாவில் இந்து மாணவிகளான சாத்தி மோதக், அர்பிதா சாஹா மற்றும் பாபியா சாஹா ஆகிய மூவரும் 90 சதவீதத்திற்கு அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.

இந்த மதராசாவில் மொத்தம் 751 மாணவர்கள் இருக்கின்றனர். இதில் 45 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர். இந்த ஆண்டு தேர்வு எழுதும் 68 பேரில் 23 பேர் இந்துக்கள்.

பட மூலாதாரம், Sanjay das /bbc

1925ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பள்ளியில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த பகுதியில் வேறு எந்த பள்ளியும் இல்லாத காரணத்தினால் இந்து மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள். இங்கே படிப்பவர்களைப் பார்த்து மூன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்து மாணவர்கள் இங்கேதான் அதிகம் படிக்கிறார்கள் என அகர்கண்டா மதராசாவில் பயில்விக்கும் ஆசிரியர் மொஹம்மத் ரஹ்மான் கூறியுள்ளார்.

பர்தவான் மாவட்டத்தில் ஓர்கிராம் சதுஷ்பல்லி மதராசாவில் 1320 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 65 சதவீதம் பேர் இந்துக்கள்.

இங்கு இந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவது ஏன்?

கல்வி பயில்விக்கும் விதமும் பள்ளி சூழலுமே இங்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம்.

விவசாயி ரமேஷ் மாஜியின் இரண்டு மகள்களும் சதுஷ்பல்லி மதராசாவில் படிக்கின்றனர். இந்த பகுதியில் வேறு அரசு பள்ளிகளும் உள்ளன. ஆனால் மதராசாவில் கற்பிக்கும் விதம் மற்றும் பள்ளியின் சூழல் நன்றாக இருப்பதால் தன் இரண்டு மகள்களையும் இங்கே அனுப்புவதாக கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Sanjay das/ bbc

மேற்கு வங்கத்தின் வடக் சோமன் மண்டல் என்னும் விவசாயி தன்னுடைய முதல் மகனை அங்கிருக்கும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு சீட் கிடைக்காததால் அவரை அருகில் உள்ள மதராசாவில் சேர்த்துள்ளார். அந்த சூழ்நிலை பிடித்து போனதால் தன்னுடைய முதல் மகனையும் அரசு பள்ளியிலிருந்து மதராசாவுக்கு மாற்றினார்.

அவர் கூறியபோது, "அரசு பள்ளியில் பாடத்திற்கு தகுந்த ஆசிரியர் இல்லை. புவியியல் ஆசிரியர்கள் கணிதமும் அறிவியல் ஆசிரியர்கள் வரலாறும் கற்பித்து கொண்டிருந்தனர். இதனால் அங்கே நிர்வாகமும் சரியில்லை. ஆனால் மதராசாவில் பாடமும் சிறந்த முறையில் சொல்லித்தருகிறார்கள் நிர்வாகமும் நன்றாக உள்ளது. இதனால் தான் என் முதல் மகனை நான் மதராசாவில் சேர்த்தேன்" என்றார்.

முன்னேறி வரும் மதராசா கற்பிக்கும் முறை

மதராசா கல்வித்துறை தலைவர் அபூ தாஹேர் சோமன் மண்டல் கூறியதை விளக்கினார். "மதராசாவில் முன்னிருந்ததைப் பார்க்கும்போது இப்போது கற்பிக்கும் முறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதனாலேயே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பர்துவான் மதராசாவின் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளது", என அபூ தாஹேர் கூறியுள்ளார்.

மேலும் அவர் மாநிலத்தில் உள்ள மதராசாவில் இந்து மாணவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Sanjay das/bbc

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் பிபிசி கேட்டபோது, அவர், இந்த மதராசாவில் இந்து மாணவர்கள் அதிகம் படிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் அரசு பள்ளியில் குறைந்த இடங்களே இருப்பது. மற்றொன்று உயர்நிலை பள்ளி கல்வித்துறையிலிருந்து இந்த மதராசாக்களுக்கு மானியம் கிடைப்பது. இதைத் தவிர இவர்கள் மதராசாவிற்கான நன்கொடையும் கேட்பார்கள். இதுவே ஏழை மாணவர்கள் மதராசாவை நோக்கி செல்ல காரணம் என கூறினார்.

வடக்கு 24-பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள மதராசாவில் ஆங்கிலம் கற்பிக்கும் அமிதாப் மண்டல் கூறுகையில், அரசு பள்ளியில் சீட்டுகள் குறைந்து இருப்பதுடன், மதராசாவில் கட்டணமும் குறைந்து இருப்பது மாணவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும் அரபிக் மொழியில் இந்து மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கலை போக்க அரசு வழிவகை செய்துள்ளது எனவும் கூறினார்.

மதராசா போர்டின் தலைவர் கம்ருதீன் கூறியபோது, "நாங்கள் மதராசாவையும் சாதாரண பள்ளியைப்போல் மாற்றிவிட்டோம். மாணவ மாணவிகள் சேர்ந்துதான் படிப்பர். இங்கே படிக்கும் மாணவர்களுக்கு அரசும் கல்வி உதவி செய்கிறது. இங்கே படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர்கின்றனர்", என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: