சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவு செய்யப்பட்டது எப்படி? - ஒரு நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு
- ஓம்கார் கரம்பெல்கர்
- பிபிசி மராத்தி

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில தசாப்தங்களாக, மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை எந்தத் தேதியில் கொண்டாடுவது என்பது குறித்து வாதங்களும், பிரதிவாதங்களும் நடந்து கொண்டிருந்தன.
இந்து நாட்காட்டியின்படி பிறந்த நாளைக் கொண்டாடுவதா அல்லது தற்போது பயன்பாட்டில் உள்ள கிரெகோரியன் நாட்காட்டியின்படி பிறந்த நாளைக் கொண்டாடுவதா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் கொண்டாடம் குறித்து ஆண்டுதோறும் வாதங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
பிப்ரவரி 19 ஆம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை முதல்வர் உத்தரவ் தாக்கரே கொண்டாடுவார் என்று மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பராம் அறிவித்துள்ளார். ஆனால், அரசியல் கட்சி என்ற வகையில், சிவசேனை கட்சி, இந்து நாட்காட்டியின்படி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளது.
இந்த மாறுபட்ட கருத்துகளின் பின்னணியில், மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் எப்படி தீர்மானிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம்.
மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் 1630 பிப்ரவரி 19 என்று இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது - Falgun Vadya Trutiya, Shake 1551 Shukla Samvastar திதிக்கு உரிய நாளாக உள்ளது. முன்னர் Vaishakh Shuddha Dwitiya Shake 1549 திதி சிவாஜியின் பிறந்த திதியாகக் கருதப்பட்டு வந்தது. கிரெகோரியன் நாட்காட்டியின்படி அது 1627 ஏப்ரல் 6ஆம் தேதி வருகிறது.
(இந்தக் கட்டுரையில் Shake 1549 என வரும்போது அது கி.பி. 1627 என கொள்ள வேண்டும். shake 1551 எனும்போது அது கி.பி. 1630 என கொள்ள வேண்டும். ஷாலிவாகன் ஷேக் மற்றும் கி.பி. இடையில் 78 ஆண்டுகள் வித்தியாசம்.)
பட மூலாதாரம், Getty Images
லோகமான்ய திலகரின் பங்களிப்பு
லோகமான்ய கங்காதர திலகர் மற்றும் வி.கே. ராஜ்வடே ஆகியோர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த தேதியைக் கண்டறிய ஆரம்பத்தில் முயற்சி மேற்கொண்ட அறிஞர்களில் இடம் பெற்றிருந்தனர்.
சிவாஜி மகாராஜாவின் பிறந்த திதி பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில கருத்துகளை முன்வைக்க திலகர் முயற்சி செய்தார். கேசரி பத்திரிகையில் 1900 ஏப்ரல் 14ல் இதுதொடர்பான தலைப்பில் வெளியான கட்டுரையில் அவர் இதை விவரித்துள்ளார். மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் குறித்து முழு ஆதாரமான தகவல் இல்லை என்பது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று எழுத்தாளர்களின் முரண்பட்ட தகவல்கள் காரணமாக, இதுகுறித்து ஒருமித்த கருத்து ஏற்பட முடியாத நிலை இருந்தது.
டி.வி. ஆப்தே, எம்.ஆர். பரஞ்சபே ஆகியோர் தங்களுடைய `சிவாஜியின் பிறந்த தேதி' (Birth date of Shivaji) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புத்தகம் `மகாராஷ்டிரா வெளியீட்டு நிறுவனம்' 1927ல் வெளியிட்டது. தனது கட்டுரையில் சில விஷயங்களில் இதுபற்றி திலகர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், BOOK / BIRTH DATE OF SHIVAJI
அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
1)சிவாஜியின் சமகாலத்தவரும், அவரால் ஆதரிக்கப்பட்டவருமான கவிஞர் பூஷண் தன்னுடைய சிவ்-பூஷண் என்ற பாடலில் சிவாஜியின் பிறந்த தேதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
2)சிவாஜி இறந்து 15 ஆண்டுகள் கழித்து சபாசத் தனது குறிப்புகளை எழுதியுள்ளார். ஆனால், அதில் பிறந்த தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சிவாஜியும் அவருடைய தாயார் ஜிஜாபாயும் ஷாஹாஜி மகாராஜை காண பெங்களூருக்குச் சென்றபோது மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு 12 வயது என்று ஓர் இடத்தில் மட்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3)மல்ஹர்ராவ் ராம்ராவ் சிட்னிஸ் வரலாற்றில் ஷேக் 1549, விசாகம் இரண்டாவது பாதி ஒளிமிகுந்த வியாழக்கிழமை என்றும், அந்த ஆண்டு பிரபவ ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஆங்கில தேதிக்கு ஒப்பிட்டு கணக்கிட்டால் 1627 ஏப்ரல் 6ஆம் தேதி என வருகிறது. ஆனால் கணித கணக்கீட்டின்படி அந்த நாள் மாறுபட்டதாக இருக்கிறது. அது வியாழக்கிழமை என்பதற்குப் பதிலாக, சனிக்கிழமை என இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். சிவாஜியின் மறைவுக்கு 130 ஆண்டுகள் கழித்து சிட்னிஸ் தனது வரலாற்றுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதாவது தோராயமாக கி.பி. 1810ல் எழுதியுள்ளார்.
4)பேராசிரியர் பாரஸ்ட் வெளியிட்ட ராயரி பகர் என்ற வரலாற்று நூலில், அவர் பிறந்த ஆண்டு ஷேக் 1548 என ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் அது ஷேக் 1549 என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவாஜி ஷேக் 1602ல் (கி.பி. 1680) மறைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் பிறந்த ஆண்டு மட்டுமே நமக்குத் தெரிந்துள்ளது; தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
5)தார்-ல் உள்ள காலவரிசைப் பட்டியலின்படி, Kavyetihas-sangraha ஆசிரியரிடம் உள்ளதன்படி ஷேக் 1549, பிரபவ ஆண்டு, விசாகம் 5வது ஒளியின் பாதி, திங்கள்கிழமை பிறந்த தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் நட்சத்திரம் தவறாக உள்ளது.
6)சிவ-திக்விஜயம் (சிவாஜியின் வெற்றி) என்ற தலைப்பில் பரோடாவில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூலில் ஷேக் 1549, பிரபவ, வைஷாக் 2வது ஒளிமிகுந்த பாதி, வியாழன், நட்சத்திரம் ரோகிணி என உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல (சிட்னிஸ் கூற்றின்படி) இவையெல்லாம் அவற்றுக்குள்ளாகவே முரண்பட்டதாக உள்ளன.
7)பரோடாவில் வெளியிடப்பட்ட Shri-Shiva-Pratap-ம் ஷேக் 1549, ரக்டஷி என குறிப்பிடப்பட்டுள்ளது. ரக்டஷி என்பது 1546 ஷேக் என்ற ஆண்டின் பெயர் தானே தவிர 1549 அல்ல.
8)கவிஞர் புருஷோத்தம் எழுதிய சமஸ்கிருத கவிதையில் எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை.
9)Kavyetihas-sangraha என்ற சஞ்சிகை Marathi Samrajyachi Chhoti Bakhar (மராட்டிய சக்கரவர்த்தி பற்றிய சிறு குறிப்பு) என்ற இதழை வெளியிட்டுள்ளது. அதில் ஷேக் 1549, க்சயா, விசாகம், 5வது ஒளிமிகுந்த பாதி, திங்கள்கிழமை பிறந்த தேதி என குறிப்பிட்டுள்ளது. வருடத்தின் பெயர் தவறாக உள்ளது. அது பிரபவ என்று இருந்திருக்க வேண்டும்.
10)Bharatvarsha என்ற சஞ்சிகை சிவாஜி பற்றி Ekyannav Kalami Bakhar (91 பத்திகளில் குறிப்பு) என்று வெளியிட்டுள்ளது. அதன் 15வது பத்தியில், அவர் பிறந்த தேதி ஷேக், க்சயா, விசாகம், 5வது ஒளிமிகுந்த பாதி, திங்கள்கிழமை என உள்ளது. 1549 என்பதற்குப் பதிலாக 1559 என தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
11)Bharatvarsha என்ற சஞ்சிகை The Pant Pratinidhi Bakhar-யும் வெளியிட்டுள்ளது. அதில் 1549, வைஷாகாவின் 15வது பாதி ஒளிமிகுந்த திங்கள்கிழமை என குறிப்பிட்டுள்ளது. இது முழுக்க புதிய திதி ஆகும்.
இந்த ஆய்வின் போக்கை மாற்றிய ஜெதே காலவரிசைப் பட்டியல்
கிடைத்திருக்கிற தகவல்களின்படி, சத்ரபதி சிவாஜி ஷேக் 1549-ல் (1627ல்), விசாகத்தில் பிறந்தவர் என கருதப்பட்டு வந்தது. ஆனால் 1616ல் முக்கிய ஆவணம் கிடைத்த பிறகு நிலைமை மாறியது. இந்த ஆவணம் ஜெதே காலவரிசைப் பட்டியல் எனப்படுகிறது.
அந்தப் பட்டியலில் உள்ளபடி பார்த்தால், சிவாஜி பிறந்த நாள் ஷேக் 1551, சுக்ல சம்வாட்சர், பால்கன் 3வது இருள் பாதி, வெள்ளிக்கிழமை என்று திலகர்
குறிப்பிட்டுள்ளார். அதாவது கி.பி. 1630 பிப்ரவரி 19 என குறிப்பிட்டுள்ளார்.
ஜெதே காலவரிசைப் பட்டியல் என்பது என்ன?
ஆகவே ஜெதே காலவரிசைப் பட்டியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிவாஜியின் பிறந்த தேதி பற்றி அதில் நிறைய தகவல்கள் உள்ளன. அது 23 பக்க ஆவணம். தாளின் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளன. ஏறத்தாழ ஷேக் 1540 முதல் 1619 வரையில் காலவரிசைப் பட்டியல் விவரங்கள் அதில் உள்ளன. அதாவது 1618 முதல் 1697 வரையில்.
போர் என்ற மாகாணத்தில் காரி பகுதியை நிர்வகித்து வந்த டாயாஜிராவ் சர்ஜேராவ் என்கிற டாஜிசாகிப் ஜெதே என்பவர் இதை 1907 ஆம் ஆண்டு வாக்கில் திலகரிடம் கொடுத்திருக்கிறார். ஜெதே காலவரிசைப் பட்டியலை பல அறிஞர்கள் ஆய்வு செய்தனர். அதில் உள்ள பெரும்பாலான தகவல்கள் சரியானவை என அவர்கள் கண்டறிந்தனர்.
சிவாஜியின் மரணத்துக்கு 17 ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தில் இந்த காலவரிசை ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளன. நம்பகமான அதிகாரபூர்வ ஆவணங்களைக் கொண்டு அவை எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
டி.வி.ஆப்தே, எம்.ஆர். பரஞ்சபே ஆகியோர் சில உதாரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளனர்:
1)ஷேக் 1540, கார்த்திகை, 1வது இருள் பாதி ஔரங்கசீப்பின் பிறந்த தேதி என ஜெதே காலவரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதுநாத் சர்க்கார் அளிக்கும் தகவலின்படி இது சரியான தேதி.
2)நவ்ஷெர்கானுடனான போர் 1597ஜெஷ்டாவில் நடந்ததாக உள்ளது. அதுவும் சரியானது.
3)ஸ்ரீரங்கபூரை சிவாஜி மகாராஜா கைப்பற்றிய திதியும் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
4)சூரத் குறிப்பை நீக்கிய தேதி பற்றி ஜெதே பட்டியலில் உள்ள தேதி, சூரத்தில் நடந்த ஆங்கிலேய வணிகர்களின் கூட்ட நிகழ்வுகள் பற்றிய குறிப்பின் தேதியுடன் சரியாகப் பொருந்தியுள்ளது.
5)ஜெயசிங் உடனான ஒப்பந்தம் ஏற்பட்ட தேதியும் சரியாகப் பொருந்துகிறது.
1627 அல்லது 1630?
இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் சத்ரபதி சிவாஜியின் பிறந்த ஆண்டு 1627 அல்லது 1630 என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஷேக் 1549 என்பது 1627 ஆம் ஆண்டாக இருக்காது என்பதற்கு ஆப்தேவும், பரஞ்சபேவும் சில விஷயங்களை முன்வைக்கின்றனர்.
1)Port Paramanand- Shivbharat என்பது சிவாஜியின் வாழ்க்கை குறித்து கவிஞர் பரமானந்த என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டது. 1662 ஆம் ஆண்டு வரையில் சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேக் 1551, பால்கன், 3வது இருள் பாதி அவர் பிறந்த தேதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஜெதே காலவரிசைப் பட்டியல் தகவலுடன் ஒத்துப்போகிறது.
2)சிவாஜிக்கு மகுடம் சூட்டப்பட்ட போது ராஜ்யபிஷேக ஷாகவலி உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய பிறந்த தேதி ஷேக் 1551, சுக்ல சம்வட்சர், பால்கன், 3வது இருள் பாதி, வெள்ளிக்கிழமை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஷிவபூரில் இருந்த நிர்வாகியின் ஆவணங்களில் இருந்து கண்டறியப்பட்டது.
3)குஜராத்தி ஆவணங்களின் ஆசிரியர் ஏ.கே. போர்ப்ஸ் வைத்திருக்கும் - போர்ப்ஸின் சேகரிப்பு - ஆவணத்திலும் பிறந்த ஆண்டு ஷேக் 1551 என கூறப்பட்டுள்ளது.
4)ஜெதே ஷாகவலி - அவருடைய பிறந்த ஆண்டு 1551 என தெளிவாகக் குறிப்பிடுகிறது.
5)தாஸ்-பஞ்சயடன் ஷாகவலி - இந்த காலவரிசைப் பட்டியலில் சிவாஜி மகாராஜாவின் பிறந்த ஆண்டு ஷேக் 1551 என குறிப்பிடப்பட்டுள்ளது.
6)ஆர்னெஸின் வரலாற்றுக் குறிப்புகள் - இந்த ஆவணம் சத்ரபதி சிவாஜி 1629ல் பிறந்ததாகக் கூறுகிறது.
7)ஸ்பிரிங்கெல்ஸ் வரலாறு - இந்த ஜெர்மன் புத்தகம் 1791ல் வெளியிடப்பட்டது. அதில் சிவாஜி 1629ல் பிறந்தார் என கூறப்பட்டுள்ளது.
8)தஞ்சாவூர் கல்வெட்டு ஆவணம் - கி.பி 1803ல் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டின்படி, சிவாஜி பிறந்த ஆண்டு 1551 என குறிப்பிடப்பட்டள்ளது ஆனால் சம்வட்சர் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்ரபதிசிவாஜியின் ஜாதகம்
சிவாஜி 1630ல் பிறந்தார் என்பதற்கான மிக முக்கியமான ஆவணம் ஜோத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரை சேர்ந்த மோதலால் வியாஸ் என்பவர் மதிப்புமிக்க ஜாதகங்களை வைத்திருக்கிறார் என்று புனே நகரைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் அறிந்தார். அதில் சத்ரபதி சிவாஜியின் ஜாதகமும் இருப்பது தெரிய வந்தது.
பட மூலாதாரம், BOOK / BIRTH DATE OF SHIVAJI
சிவாஜி மகராஜாவின் ஜாதகம் ஜோத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது
மர்வாரிமொழியில் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: II சம்வட், 1686 பாகன வடி ஷுக்ரே யு. காட்டி 3019 ராஜா சிவாஜி ஜன்மா II சம்வட் 1686 பால்கன் வத்யா 3 (அதாவது பால்கன் வத்யா திருதியை ஷேக் 1551, கி.பி. 1630) என உள்ளது.
(சம்வட் காலண்டர் , நாம் இப்போது பயன்படுத்தும் கிரெகோரியன் காலண்டருக்கு 56 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. எனவே கிரெகோரியன் ஆண்டை கணக்கிட நாம் 56ஐ கழித்துக் கொள்ள வேண்டும்).
மாநில அரசாங்கம் 1966ல் அமைத்த கமிட்டி
சத்ரபதி சிவாஜியின் சரியான பிறந்த தேதி எது என்பதையும், எப்போது அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவது என்பதையும் முடிவு செய்ய மகாராஷ்டிர அரசு 1966ல் ஒரு கமிட்டியை நியமித்தது.
அந்தக் கமிட்டியில் மகாமஹோபாத்யாய டட்டோ வமன் பொட்டேடார், என்.ஆர். பாடக், ஏ.ஜி பவார், ஜி.எச். காரே, வி.சி. பெண்ட்ரே, பி.எம். புரந்தரே, மோரேஷ்வர் தீக்சித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சில காரணங்களால் முதலாவது கூட்டத்தில் ஏ.ஜி. பவார் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கூட்டத்தில், பால்கன் வத்யா திருதியை ஷேக் 1551 (1630 பிப்ரவரி 19) பிறந்த தேதியாக ஏற்பது என்று மகாமஹோபத்யாய, டி.வி. பொட்டேடார், ஜி.எச். காரே, வி.சி. பெண்ட்ரே, பி.எம். புரந்தரே, மோரேஷ்வர் தீக்சித் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆனால் விசாக ஷுத்த திவித்ய ஷேக் 1549 (1627 ஏப்ரல் 6) தான் சிவாஜியின் சரியான பிறந்த தேதி என்று என்.ஆர். பாடக் கூறினார். அதன்படி, எல்லா உறுப்பினர்களும் கமிட்டியிடம் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். என்.ஆர். பாடக் தனது மாற்று கருத்து அறிக்கையை அளித்தார்.
இரண்டாவது கூட்டத்தில் ஏ.ஜி. பவார் கலந்து கொண்டார். சிவாஜி மகராஜாவின் பிறந்த திதி பற்றி உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் கூறி, முன்பு குறிப்பிட்ட தேதியை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எனவே பிறந்த தேதி பற்றி முடிவு செய்யும் பொறுப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதியாக, ``வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை அல்லது வரலாற்றாளர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படாதவரையில், விசாகம் ஷுத்த திவித்ய ஷேக் 1549 (கி.பி. 1627) என்ற திதியை, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகக் கருதிக் கொள்ளலாம்'' என்று அரசு முடிவு செய்தது.
கஜானன் பாஸ்கர் மெஹென்டலே எழுத்துகள்
கஜானன் பாஸ்கர் மெஹென்டலே தன்னுடைய `ஸ்ரீ ராஜா சிவசத்ரபதி' என்ற பெரிய புத்தகத்தின் 16வது இணைப்பில் சிவாஜி மகராஜாவின் பிறந்த தேதி பற்றி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி அவர் அதில் குறிப்பட்டுள்ளார்.
பிரமோத் நவால்கருக்கு கோரிக்கை
1996 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்த மாற்றங்களை மெஹென்டலே தனது பிற்சேர்க்கைப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். பாரத் இதிகாச சன்ஷோதன் மண்டல் நிர்வாகி வி.டி. சர்லஷ்கர், பாரதீய இதிகாச சங்கலன் சமிதியின் மகாராஷ்டிர செயலாளர் சி.என். பர்ச்சுரே, வரலாற்று அறிஞர் நினாட் பெடேகர் ஆகியோர் 1996ல் அப்போதைய கலாச்சார அமைச்சர் பிரமோத் நவால்கரை சந்தித்தனர். பால்கன் வைத்ய 3 1551 ஐ சிவாஜி மகாராஜாவின் பிறந்த திதியாக ஏற்றுக் கொள்வதற்கு அரசு புதிய கமிட்டி அமைக்க வேண்டும் என அவர்கள் நவால்கருக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னர் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்ததாக அவர்களிடம் பிரமோத் நவால்கர் கூறினார். இப்போது சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாளை பால்கன் வைத்ய 3-ல் அரசு கொண்டாடுகிறது. இதுதொடர்பாக ஏதும் கருத்து கூற விரும்புபவர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அரசிடம் அறிக்கை தரலாம். அதன்படி பத்திரிகைகளில் அரசு அறிவிக்கை வெளியிட்டு, பிறகு முடிவெடுக்கும் என்று கூறினார்.
இந்த அறிவிப்பை ஏற்று பத்து அறிஞர்கள் தங்களுடைய கருத்துகளை அறிக்கையாக அளித்தனர். அவை அனைத்துமே பால்கன் வைத்ய திருதியை 1551 ஐ ஏற்கலாம் என்ற கருத்து கொண்டவையாக இருந்தன. மெஹென்டலேவின் `ஸ்ரீ ராஜா சிவசத்ரபதி' புத்தகத்தில் 647, 648, 649 ஆம் பக்கங்களில் இந்தத் தகவல்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 என்ற தேதி எப்படி இறுதி செய்யப்பட்டது?
சத்ரபதி சிவாஜியின் பிறந்த தேதி 1630 பிப்ரவரி 19 என எப்படி இறுதி செய்யப்பட்டது என்பது பற்றி மகாராஷ்டிர முன்னாள் பெண் எம்.எல்.ஏ.வான ரேகட்டாய் கேடெகர் பிபிசி மராத்தி பிரிவிடம் தெரிவித்தார். பாஜக - சிவசேனா முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்து இந்த விஷயத்தை அந்தப் பெண்மணி கவனித்து வந்துள்ளார்.
``முந்தைய கமிட்டியின் அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை முன்வைத்து நான் தீர்மானத்தை முன்மொழிந்தேன். மாநில சட்டப்பேரவை அதை நிறைவேற்றி, 1630 பிப்ரவரி 19ஆம் தேதியை பிறந்த தேதியாக ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு புதிய அரசில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வரானார். இந்த முடிவை செயல்படுத்துவதற்கு நான் எனது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டேன் விலாஸ்ராவ் தேஷ்முக் கூட்டணி அரசின் அமைச்சரவை இந்தத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளித்தது. அதையடுத்து அது அமலுக்கு வந்தது'' என்று அவர் விவரித்தார்.
அப்போதைய சமகாலத்தைய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது 1630 தான் அவருடைய பிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன, எனவே அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று வரலாற்று அறிஞர் ஜெய்சிங் பவார் பிபிசி மராத்தி செய்திப் பிரிவிடம் கூறினார்.
`யாருக்காவது புதிய ஆதாரங்கள் கிடைக்கலாம்'
``வலுவான புதிய ஆதாரம் எதுவும் கிடைக்காத வரையில், நாம் மௌனமாக இருந்து முந்தைய தேதியை பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும். சிவாஜி மகாராஜாவின் பிறந்த திதி பற்றி நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது'' என்று வரலாற்று அறிஞர் இந்திரஜித் சவந்த் கூறினார்.
``மகாராஷ்டிர சட்டமன்றம் எடுத்துள்ள முடிவின்படி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாள் கிரெகோரியன் காலண்டர்படி கொண்டாடப்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அந்த காலண்டர்படிதான் செய்யப்படுகின்றன. எனவே திதியை விட, கிரெகோரியன் காலண்டர் அடிப்படையில் சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட வேண்டும்'' என்று மற்றொரு வரலாற்று அறிஞர் ஸ்ரீமந்த் கோகடே கூறுகிறார்.
பல நூற்றாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகும், மன்னர் சிவாஜியின் பிறந்த நாளை எப்போது கொண்டாடுவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இன்றைக்கு சில இடங்களில், முந்தைய தேதியின்படி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அரசின் கொண்டாட்டம் புதிய தேதியின்படி நடைபெறுகிறது. சில இடங்களில் திதியின்படி அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: