இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியன் 2

பட மூலாதாரம், Twitter

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

"நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Twitter

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கும் படங்களை எடுக்கும்போது கேமரா மேன் பெரிய லைட்கள் வைத்து காட்சியமைக்க நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, கிரேனில் லைட்களை கட்டச் சொல்லி ஒளிப்பதிவு செய்கிறார்கள். நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலும் அதுதான் நடந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த வகை கிரேன்கள் ஓரளவிற்கு தான் எடையைத் தாங்கும். இன்னும் லைட் வையுங்கள் என்று சொல்லும் போது லைட் மேன் என்ன செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

"அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதே கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்துள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஷூட்டிங்கிற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள். கிரேன் ஆப்ரேட் செய்பவர் இதற்கு மேல் எடை அதிகமானால் கிரேன் விழுந்துவிடும் என எச்சரித்ததாக அங்கே பணியில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன என்பது அங்கே இருந்தவர்களுக்குத் தான் தெரியும்."

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இது முதல்முறை அல்ல

சென்னை புறநகரிலுள்ள இந்த படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருவதாக செந்தில் குமார் குற்றஞ்சாட்டுகிறார்.

"எங்களுடைய லைட் மேன் ராமராஜனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிரேன் கால் மேல் விழுந்துள்ளது. இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் தான் அவர் இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவை லைக்கா நிறுவனம் தான் செய்கிறது. லைட் மேன் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. இனி அவருடைய வாழ்வாதாரம் என்னவாகும் என்பதே கேள்விக்குறி தான்" என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல என்றும், பெரும்பாலான சமயங்களில் இதுபோன்ற விபத்துகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போய்விடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

பட மூலாதாரம், Twitter

"சமீபத்தில் பிகில் படப்பிடிப்பின் போது, இதே மாதிரி அதிக அளவில் லைட் அமைக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரோப் அறுந்து விழுந்து எலக்ட்ரீஷியன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பிரபலமான நபர் இறந்திருந்தால் அந்த செய்தி பெரிய அளவில் வெளியில் பேசப்பட்டிருக்கும். தொழிலாளி இறந்துள்ளதால் அது வெளியே தெரியவில்லை. பிகில் படத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடாக என்ன செய்தார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை."

"கிட்டத்தட்ட 20 கிரேன் ஆப்ரேட்டர்கள் தற்போது விபத்து நடந்த இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொல்கிற வேலையை செய்வது தான் தொழிலாளர்களின் வேலை. காலையில் 5 மணிக்கெல்லாம் கிளம்பி ஷூட்டிங்கிற்கு லைட் கொண்டு சென்று மாலை ஷூட்டிங் முடியும் வரை இருந்துவிட்டு வரும் லைட் மேனிற்கு 850 ரூபாய் தான் சம்பளம். அந்த சம்பளம் கூட முழுவதுமாக வந்து சேரவில்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் லைட் மேன்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது" என்று செந்தில் குமார் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :