குடியுரிமை திருத்த சட்டம்: "சாவதற்காக போராட வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்?" - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

யோகி ஆதித்யநாத்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, நேற்று (புதன்கிழமை) நடந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "சாவதற்காகவே வீதிக்கு வந்து போராடினால், பின்பு அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்?" என்று தெரிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் யாரையும் சுடவில்லை. போராட்டக்காரர்கள் அவர்களே ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டனர். மக்களை சுடும் எண்ணத்துடன் ஒருவர் வீதிக்கு சென்றால், ஒன்று அவரோ அல்லது காவல்துறையை சேர்ந்தவர்களோ உயிரிழக்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.

எனினும் தற்காப்பு கருதி காவல்துறை துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் போராட்டக்காரர் ஒருவர் இறந்ததாகவும் உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் தியாகி கூறியுள்ளதாக சில ஊடங்ககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

"ஆசாதி (சுதந்திரம்) என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது. ஆசாதி என்றால் என்ன? நாம் ஜின்னாவின் கனவை நனவாக்குவதற்காக உழைக்க வேண்டுமா அல்லது காந்தியின் கனவை நோக்கி செல்ல வேண்டுமா?" என்று சுமார் ஒரு மணிநேரம் நீடித்த தனது உரையின்போது யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

"சட்டத்தை குறைத்து மதிப்பிடுபவர்களை பார்த்தால் எனக்கு வியப்பாகக இருக்கிறது. ஜனநாயக ரீதியிலான எந்த போராட்டத்தையும் ஆதரிப்போம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், ஜனநாயகத்தின் பின்னே ஒளிந்துகொண்டு வன்முறையை தூண்டினால், அவர்களது வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்," என்று உத்தரப்பிரதேச முதல்வர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: