இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இந்திய மீனவர் கண் பார்வை இழக்கும் ஆபத்து - நடந்தது என்ன?

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
மீனவர்

பட மூலாதாரம், Getty Images

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று (19.02.2020) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் இந்தியா இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வரும் மீனவர்களை எல்லை தாண்டி வரவேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் வேறு பகுதிகளுக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 11 நாட்டிகல் தூரத்தில் சர்வதேச கடல் எல்லை அருகே கிங்சன் என்பவருக்கு சொந்தமான படகில் ஜேசு, முருகன்,மாரியப்பன், டிடிக்ராஜ்,மெக்கான்ஸ் ஆகிய மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக விசைபடகை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள் படகின் முகப்பு கண்ணாடியின் மேல் பட்டதில் கண்ணாடி உடைந்து படகில் இருந்த மீனவர் ஜேசு என்பவரது வலது கண்ணில் கண்ணாடி துகள்கள் பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த மீனவர் ஜேசுவை சக மீனவர்கள் அதிகாலை 2 மணியளவில் கரைக்கு கொண்டு வந்தனர்.

காயமடைந்த மீனவர் ஜேசுவிற்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.மேலும், இது குறித்து ராமேஸ்வரம் கடலோர காவல்படை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஸ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விசைப்படகை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் டிடிக்ராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில் 'நேற்று 19.02.2020 இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தோம் அப்போது இலங்கை கடற்படை எங்களது படகை நோக்கி மூன்று முறை சுட்டனர். இதனால் அச்சம் அடைந்த நாங்கள் எங்களது வலைகளை கடலில் வெட்டிவிட்டு விட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் நோக்கி வரதொடங்கினோம்.'

'அப்போது படகில் இருந்த மீனவர் ஜேசு கண்ணில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியது இதனால் சற்று நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ராமேஸ்வரம் அழைத்து வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தோம்' என்றார்.

துப்பாக்கிச்சூட்டியில் கண்ணில் காயம் அடைந்த மீனவர் ஜேசு மகன் டெரிமைஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் என் அப்பாவின் வலது கண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்துள்ளோம்'.

'மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கண்ணின் கரு விழியில் 4 எம்எம், கண் சதையில் 2 எம்.எம் உலோக துகள்கள் (METALLIC FOREIGN BODIES) இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த உலோக துகள்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படாவிட்டால் இடது கண் பார்வையும் சேர்ந்து இழக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறியதாக' தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'எனது அப்பாவின் வருமானத்தில் தான் எனது குடும்பம் இயங்கி வருகிறது. என் அப்பா கடலில் மீன் பிடித்து வந்தால் தான் எங்களுக்கு சாப்பாடு. அவர் பார்வை இழந்துவிட்டால் எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்' என்றார்.

'கண் அறுவை சிகிச்சைக்கு அரசு நிதி உதவி அளித்தால் மட்டுமே எங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியும். எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று என் அப்பாவிற்கு பார்வை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்' மீனவர் ஜேசுவின் மகன் டெரிமைஸ்.

ராமேஸ்வரம் மீனவர் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக பிபிசி தமிழிடம் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்தை குழு தலைவர் ஜேசுராஜா பேசுகையில் 'கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ந்தேதி இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார் அதன் பிறகு இன்று மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது' என்று கூறினார்.

'நம் எதிரி நாடு என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் துப்பாக்கியால் சுடுவதில்லை. ஆனால் நட்பு நாடான இலங்கை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது என தொடர்ச்சியாக செய்து வருகிறது'.

மேலும் ஜேசுராஜா கூறுகையில், 'கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் அவர்களின் இந்திய பயணம் முடிந்து சென்ற ஒரிரு நாட்களில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மீனவர்களான எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.'

எனவே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் மீனவர்களின் பாரம்பரிய தொழிலான மீன் பிடிதொழில் செய்து வாழ முடியும். இல்லையேல் மீனவர்கள் மாற்று தொழில் தேடி வெளி மாவட்டங்களுக்கு அகதிகளாக செல்வதை தவிர வேறு வழியில்லை' என்றார் ஜேசு ராஜா.

இது குறித்து பிபிசி தமிழ், ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 'ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளால் வாரம் இரு முறை மீனவர்கள் எல்லை தாண்டி செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது அதே போல், இந்திய கடற்படையினர் மீனவ கிராமங்களில் இலங்கை எல்லைக்குள் சென்றால் எவ்வாறான பிரச்சனைகளை மீனவர்கள் சந்திக்க நேரிடும் என்பது குறித்து விரிவான விளக்க கூட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும், சில மீனவர்கள் இரவு நேரங்களில் எல்லை தாண்டி சென்று விடுகின்றனர்.'

மேலும் 'நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அதனை தமிழக மீன் வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவருக்கு நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக கடலோர காவல் குழும போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்' என்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :