டிக்டாக் செய்து பொதுமக்களுக்கு தொல்லை - கல்லூரி மாணவர் கைது

டிக்டாக்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - டிக்டாக் செய்து கைதான இளைஞர்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செய்ததாக புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கண்ணன் எனும் அந்த மாணவரை டிக்டாக்கில் சுமார் 37,700 பேர் பின் தொடர்கின்றனர்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகளை நோக்கி அச்சுறுத்தும் வகையில் ஓடுவது, திடீரெனெ பொது இடங்களில் ஆடுவது, பாடுவது உள்ளிட்ட செயல்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து பொது மக்களுக்கு தொல்லை தரும் வகையில் டிக்டாக் காணொளிகளை பதிவு செய்வதால், அவரை பிடிக்க புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.

தினத்தந்தி - 10 ஆயிரம் பேர் மீது வழக்கு

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே புதனன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

படக்குறிப்பு,

சென்னையில் தமிழக சட்டமன்றத்தை நோக்கி செல்லும் போராட்டக்காரர்கள்.

சென்னை உயர் நீதிமன்ற தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர் காஜா மொய்தீன், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் என 39 பேர் மீதும், போராட்டத்தில் பங்கேற்ற 1,500 முஸ்லிம் பெண்கள் உள்பட 10 ஆயிரம் பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி - ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கிய மத்திய அரசு

பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான ரூ.19,950 கோடியை மத்திய அரசு வழங்கியது என தினமணி செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.19,950 கோடியை மத்திய நிதி அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை விடுவித்தது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.1,20,498 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.62,611 கோடி நிதி மத்திய அரசுக்கு கிடைத்தது. இதில், ரூ.41,146 கோடி மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. 2018-19-இல் ரூ.95,081 கோடி நிதி கிடைத்தது. அதில், ரூ.69,275 கோடி நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இழப்பீடாக அளித்தது. கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.47,271 கோடி நிதி ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு ஈட்டியது,'' என்று தெரிவித்தனா்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: