கோவை பள்ளி: "என் மகளுக்கு நடந்தது, நாளை மற்ற தலித் சிறுமிகளுக்கும் நடக்கும்" - கழிவறையை சுத்தம் செய்த சிறுமியின் தாய்

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், AHMET YARALI / getty images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து, தலைமை ஆசிரியை குமரேஸ்வரி செவ்வாய்கிழமை முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கிறார் சிறுமியின் தாய் மகேஸ்வரி.

'நாங்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓர் மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகள் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு எனது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் அழுதவாறு, உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தாள். அவளிடம் நான் விசாரித்த போது, பிப்ரவரி 11ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறையை தலைமை ஆசிரியர் குமரேஸ்வரி சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக கழிவறையை சுத்தம் செய்து வருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமன்றி, சாதியைச் சொல்லியும் எனது மகளை தலைமை ஆசிரியர் திட்டியுள்ளார்' என்கிறார் மகேஸ்வரி.

இச்சம்பவம் குறித்து தெரியவந்த மகேஸ்வரி, மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் சிலருடன் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்றுள்ளார் என அலட்சியமாக பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

'எனது மகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பிப்ரவரி 13ஆம் தேதி அன்று பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அதற்கும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த ஆசிரியை எனது மகள் உட்பட பலரை சாதிய ரீதியாக திட்டியுள்ளார். எனது மகளை மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார். குப்பைகளை கைகளால் எடுத்ததால், மகளின் கைகளில் எறும்புகள் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இன்று எனது மகளுக்கு நேர்ந்தது, நாளை பள்ளியில் படித்து வரும் மற்ற தலித் சிறுமிகளுக்கு நடக்கும்' என்கிறார் மகேஸ்வரி.

சாதியின் பெயரால் அவமானப்படுத்திய தலைமை ஆசிரியை குமரேஸ்வரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் சிறுமியின் தாய் மனு அளித்துள்ளார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியை குமரேஸ்வரி, முன்னர் பணிபுரிந்த கவுண்டம்பாளையம் மற்றும் பன்னீர்மடை அரசு பள்ளிகளிலும் மாணவர்களிடம் அராஜகமாக நடந்துகொண்டார் என மாவட்ட கல்வித்துறையினரிடம் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தலைமை ஆசிரியர் குமரேஸ்வரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, விசாரனை நடத்தப்பட்டு தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியை குமரேஸ்வரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு, வியாழக்கிழமை முதல் மகேஸ்வரியின் மகள் மீண்டும் பள்ளிக்குச் சென்றுவருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: