'டொனால்டு டிரம்பை வரவேற்க 70 லட்சம் பேர்' - நரேந்திர மோதியின் வாக்குறுதி நிறைவேறுமா?
- ராக்ஸி ககடேக்கர் சாரா
- பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகமதாபாத் நகர் முழுவதும் காணப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 70 லட்சம் பேரை பார்த்து கையசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் மக்கள் தொகைக்கு சமம். ஆனால் இது நடக்காது.
அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு லட்சம் பேர் மட்டுமே வருவார்கள் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதனால், இது அமெரிக்க அதிபருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
அமெரிக்காவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவில் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை தன்னை மில்லியன் கணக்கானவர்கள் வரவேற்பார்கள் என்பதனால் இந்த பயணம் குறித்து தான் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னை வரவேற்க 5 - 7 மில்லியன் (50 லட்சம் முதல் 70 லட்சம்) பேர் வருவார்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அகமதாபாத் போன்ற நகரில் ஒரே இடத்தில் 70 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எவராலும் கூற முடியாது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"பாஜகவின் தொண்டர்கள் இரவு பகலாக உழைத்தாலும் இந்த எண்ணிக்கையில் மக்கள் வரமாட்டார்கள்," என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் விமர்சகர் அர்ஜூன் மொத்வாடியா.
பட மூலாதாரம், KALPIT S BHACHECH
"அத்தனை பெரிய கூட்டம் சேர அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியை போன்று இந்தியாவில் புகழ்பெற்ற நபர் இல்லை," என்கிறார் அவர்.
அகமதாபாத் மாநகராட்சியின் தகவலின்படி அந்த நகரின் மொத்த மக்கள் தொகையே 68 லட்சம்தான். எனவே அந்த நகரின் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் மோதி உறுதியளித்துள்ளபடி 70 லட்சம் மக்கள் வருவது சாத்தியமில்லை.
அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் சில தினங்களுக்கு முன், "ஒரு லட்சம் பேர் டிரம்ப் மற்றும் மோதி மக்களை பார்த்து கையசைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"மொடேரா அரங்கத்தில் 1.10 லட்சம் மக்கள் வரை இருக்கலாம் அதற்கும் மேல் அரங்கத்தின் வெளியே மக்கள் இருப்பதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்," என அகமதாபாத் ஆட்சியர் கே.கே. நிராலா பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், SAM PANTHAKY/getty images
"மேலும் அரங்கத்தின் உள்ளே இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மாறாது. ஆனால், அரங்கத்திற்கு வெளியே அந்த எண்ணிக்கை மாறலாம். 15,000லிருந்து 30,000 பேர் அங்கு வரலாம். இந்த நிலையில் வேறேதும் தகவல்கள் இல்லை," என்கிறார் நிராலா.
இருப்பினும் இந்த எண்ணிக்கையை சேர்த்தாலும், மோதி டிரம்புக்கு உறுதியளித்த எண்ணிக்கை வராது.
"இந்த எண்ணிக்கையிலான மக்கள் நகர சாலைகளில் கூடுவது இயலாத ஒன்று," என அரசியல் விமர்சகர் மற்றும் ஆர்வலர் மனிஷி ஜனி தெரிவித்துள்ளார்.
"இதற்கு முன்பு ஒரு அரசியல் தலைவரை மக்கள் பார்க்க ஆவலாக இருந்தார்கள் என்றால் அது நேருவை பார்க்கத்தான். குழந்தையாக இருந்த நான் உட்பட பலர் அவரை காண கூடினர். ஆனால் இது அகமதாபாத்தில் மீண்டும் நிகழாது," என்கிறார் அவர்.
எங்கிருந்து மக்கள் வருவார்கள்?
பட மூலாதாரம், SAUL LOEB/getty images
அதிபர் டிரம்பை வரவேற்க மக்கள் சாலைகளில் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திலிருந்து காந்தி ஆசிரமம் மற்றும் காந்தி ஆசிரமத்திலிருந்து மொடேரா அரங்கம் ஆகிய பாதைகளில் இருபக்கங்களிலும் தடுப்புக் கம்பிகள் கட்டப்பட்டுள்ளன.
மக்களை ஒருங்கிணைக்கும் பணி மாநில அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவிடம் பிரித்தளிக்கப்பட்டுள்ளது
மாநில கட்சி தலைமை மற்றும் மாநில அரசு நிர்வாகம் மொடேரா அரங்கத்திற்கு மக்கள் வருவதற்கான பணிகளை பார்த்துக் கொள்ளும். அகமதாபாத் மாநகராட்சி மற்றும் நகரின் பாஜக தலைமை, டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சியில் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
அகமதாபாத் நகரில் 16 சட்டசபை தொகுதிகளும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. "ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் மக்களை சந்தித்து அவர்களை டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு அழைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்," என அகமதாபாத் மாநகராட்சியின் மேயர் பிஜால் பட்டேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், SAM PANTHAKY/getty Images
சுற்றுவட்டாரத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் இருக்கும் மக்களை உள்ளூர் பாஜக பணியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் டிரம்பின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உதவி செய்வர்.
இதைதவிர பாஜக தலைவர்கள் மாவட்ட பாஜக தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டனர்.
"மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் மக்கள் கலந்துகொள்ள ஊக்கமளிக்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்." என பாஜகவின் செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா பிபிசியிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: