தங்க சுரங்கம் வதந்தி: “3000 டன் தங்கம்” - உத்தர பிரதேச சோனபத்ர நகரத்தின் கதை இதுதான்

  • சமீரத்மாஜ் மிஷ்ரா
  • பிபிசி இந்தி
சோன்பத்ரா

பட மூலாதாரம், SONBHADRA.NIC.IN

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் பரவியது.. இது குறித்து மாநில அரசுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தகவல் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது . ஆனால் இதனை மறுத்துள்ளது இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம்.

160 கிலோ தங்கம் மட்டுமே

சோன்பத்ராவில், கடந்த பதினைந்து ஆண்டுகளாக தங்கத்தைத் தேடி புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த அணி பூமியில் தங்க புதையல் இருப்பதை உறுதிப்படுத்தியது. சில தினக்களுக்கு முன்பு 3000 டன் தங்கம் கிடைத்துள்ளது என தகவல் பரவியது.

இது இப்போதுள்ள மொத்த இந்திய கைருப்பைவிட பல மடங்கு அதிகம் என்றும் பலர் உற்சாகத்துடன் வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிர்ந்தனர்.

ஆனால், 3350 டன் தங்கம் எல்லாம் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று கூறி உள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "வட மாநிலங்களில் பல இடங்களில் நாங்கள் தங்கத்திற்கான தேடுதலையும், ஆய்வையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால், அதன் முடிவுகள் எதுவும் நம்பிக்கைதருவதாக இல்லை. உத்தர பிரதேச சோன்பத்ர மாவட்டத்தில் நாங்கள் 1998 -99 மற்றும் 1999 - 2000 ஆகிய காலக்கட்டங்களில் நாங்கள் ஆய்வு நடத்தி உள்ளோம். அந்த ஆய்வு முடிவுகளை உத்தர பிரதேச மாநில சுரங்கத்துறையிடம் அளித்துவிட்டோம். அதில் 52806 டன் தாதுக்கள் அங்கு இருப்பதாக நாங்கள் தெரிவித்து இருந்தோம். அதாவது ஒரு டன் தாதில் 3.03 கிராம் தங்கம் மட்டுமே இருக்கும்," என்று கூறி உள்ளது.

இதனை கணக்கிட்டால் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

சரி, தங்கம் இருப்பதாக பரவிய சோன்பத்ர மாவட்டத்தின் வரலாற்றையும், அதன் புவியியலையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சோன் நதியின் காரணமாக பெயர்

சோன்பத்ரா மாவட்டத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி, நான்கு மாநிலங்களை எல்லையாகக் கொண்ட இந்தியாவின் ஒரே மாவட்டம் இதுதான்.

சோன் நதி

பட மூலாதாரம், SONBHADRA.NIC.IN

இந்த மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பிகார் மாநிலத்தின் எல்லை மாவட்டமாக உத்தர பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தொழில்துறை பகுதி.

பாக்சைட், சுண்ணாம்பு, நிலக்கரி, தங்கம் போன்ற பல கனிம பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. இங்கு அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதால் சோன்பத்ர மின்ஆற்றலின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது.

சோன்பத்ரவுக்கு ஏன் சோன்பத்ர என்று பெயரிடப்பட்டது, அது தங்கத்துடன் தொடர்புடையதா என்ற கேள்விக்கு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பிரபாகர் உபாத்யாய் பதிலளிக்கிறார். சோன் நதி இங்கு ஓடுவதால் இந்த இடத்திற்கு சோன்பத்ரா என்று பெயர் வந்தது. ஆனால் இந்த நதியின் பெயரின் காரணம் என்ன தெரியுமா? இந்த நதியில் தங்கம் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்ததால் மட்டுமே சோன் நதி என்று பெயர் வந்தது.

சோன் நதி மட்டுமல்ல, மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவின் சில நதிகளின் மணலில் தங்க படிமங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தங்க ஆறு ஓடுகிறதா?

பிபிசியிடம் பேசிய டாக்டர் பிரபாகர் உபாத்யாய், "இந்த நதியின் கரையோரங்களில் தங்கத்தை வடிகட்டும் (தங்கத்தை பிரித்தெடுக்கும்) பணிகளை பலரும் மேற்கொள்கின்றனர். இங்குள்ள பாறைகளின் அமைப்பின்படி, அவை உடைந்து நொறுங்கி ஆற்றின் போக்கில் செல்லும்போது இந்த நதிகளின் கரையில் தங்கம் படியும் என்பதால், தங்கத்தை வடிகட்டி எடுக்கும் போக்கு அதிகரித்தது. இந்த நதிகளில் தங்கம் இருப்பது பெருமளவில் கண்டறியப்பட்டதால், இங்கு இருக்கும் பாறைகளில் தங்கம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பழங்குடியினர் தற்போது வரை தங்கத்தை வடிகட்டும் பணியை செய்து வருகின்றனர்" என்று கூறுகிறார்.

பேராசிரியர் பிரபாகர் உபாத்யாயின் 'பண்டைய இந்தியாவில் சுரங்கம் மற்றும் தாதுக்கள்' புத்தகத்தில் தங்கம் தோண்டும் கருவிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

பட மூலாதாரம், PRO. PRABHAKAR UPADHYAY

படக்குறிப்பு,

பேராசிரியர் பிரபாகர் உபாத்யாயின் 'பண்டைய இந்தியாவில் சுரங்கம் மற்றும் தாதுக்கள்' புத்தகத்தில் தங்கம் தோண்டும் கருவிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியர் ஜே.என். பால் கூறுகையில், சோன்பத்ரவுக்கு சோன் நதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கும் தங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, சோன் ஆற்றில் தங்க படிமங்கள் கிடைத்தன என்பதும் உண்மை அல்ல.

"தங்கத்தை எடுக்கும் பணிகள் இங்கு செய்யப்பட்டதாக என்று கூறப்படுகிறது, ஆனால் இது வெறும் கதைதான். இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை" என்கிறார் முன்னாள் பேராசிரியர் ஜே.என்.பால்.

கங்கை நதியின் சமதளப் பகுதிகளான ஆக்ரா மற்றும் குவாலியர் போன்ற இடங்கள் தொடங்கி பிகார் மற்றும் வங்காளத்தின் முழுப் பகுதியும் இரும்புத்தாது பெல்ட் என்று அழைக்கப்படுகிறது

தொல்பொருள் ஆய்வுத் துறை

இந்தப் பகுதிகளில் இரும்புச்சத்து ஏராளமாக இருப்பதாகப் பேராசிரியர் உபாத்யாய் கூறுகிறார். கங்கையைச் சுற்றியுள்ள பகுதியில் இரும்புத்தாது கிடைப்பதால் இந்தப் பகுதிகள் நகரமாக விரிவடைந்துள்ளன.

mine

பட மூலாதாரம், Supratim Bhattacharjee/getty Images

பேராசிரியர் உபாத்யாயின் கருத்துப்படி, "சோன்பத்ரவில் சோன்கோர்வா என்ற ஒரு இடம் இருக்கிறது. தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ள பலரும் அங்குப் பல இடங்களில் தோண்டியிருக்கிறார்கள். அதன் எச்சங்களை இன்னும் அங்குக் காணமுடிகிறது. ஆனால் இந்த இடங்களில் ஆழமாக நிலம் தோண்டப்படவில்லை. சுமார் 20 அடி வரை தோண்டி, அதில் கிடைத்த தங்கத்துடன் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அந்தப் பகுதியில் நிறைய தங்கம் இருப்பதற்கான அறிகுறிகள் எப்போதுமே காணப்படுகிறது."

தொல்பொருள் ஆய்வுத் துறை அந்த பகுதியில் ஆழமாக தோண்டிப் பார்த்திருக்கிறது. ஆனால் அதில் கிடைத்த தங்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று பேராசிரியர் உபாத்யாய் கூறுகிறார். அதாவது, கடின உழைப்பு மற்றும் செலவுக்குப் பிறகு அங்கிருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு போதுமானதாக இல்லை, அதே நேரத்தில் தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்காக செய்யப்படும் செலவு மிகவும் அதிகமாக இருந்தது. எனவே, பொருளாதார ரீதியில் பயனில்லை என்பதால் இந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

தங்க பேப்பர் வெயிட்

உபாத்யாய் கூறுகிறார், "நான் அங்கு முனைவர் பட்ட படிப்பு (பி.எச்.டி) ஆராய்ச்சிக்காக சென்றேன். அங்கே பாறையின் எச்சங்களாக தங்கம் கலந்த கற்கள் காணப்பட்டன. நாங்கள் அதில் இருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்தோம். அதை ஒரு காகித எடைக்கல்லாக (பேப்பர் வெயிட்) பயன்படுத்துகிறோம்."

2005 ஆம் ஆண்டில் பேராசிரியர் பிரபாகர் உபாத்யாய் எழுதிய 'பண்டைய இந்தியாவில் சுரங்கம் மற்றும் தாதுக்கள்' என்ற புத்தகத்தில் சோன்பத்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கத்தைத் தவிர, வேறு சில தாதுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சோன்பத்ரா

பட மூலாதாரம், The Washington Post/getty images

சோன்பத்ரா மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. முதலில் பழங்குடிப் பகுதியாக இருந்தாலும், தற்போது இங்கு நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கலாசசாரமும் பழங்குடியினரின் கலாச்சாரம் தான். இப்போது சிமென்ட், மணல், வெப்ப மின் உற்பத்தி நிலையங்கள் என பலவிதமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, இங்கு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

யுரேனியம் உண்மைதான்

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாற்றுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜே.என்.பால் கூறுகையில், பண்டைய கால மக்கள் எவ்வாறு தங்கள் கலாச்சாரத்தை இங்கு வளர்த்தெடுத்தார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று. தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சிகளில், இங்கு பண்டைய நாகரிகம் செழிப்பாக இருந்ததும், இங்கு வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் தொடர்பான சான்றுகள் கிடைத்துள்ளன. அண்மைக்காலமாகத் தான் இங்கு தங்கம் எடுக்கப்பட்ட தாக சொல்லப்படுகிறது.

"அசோகரின் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன, எனவே அசோகரின் ஆட்சியில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது நிரூபணமாகிறது. மெளரிய மற்றும் குப்தர் காலத்தின் அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன. இருப்பினும், தங்கம் இங்கு கிடைப்பதாக சொல்வது முதன்முறையாக வெளிவந்துள்ளது" என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜே.என்.பால்.

Mine workers

பட மூலாதாரம், The Washington Post/getty images

நிலத்திற்குள் தங்கத்தைத் தவிர, யுரேனியமும் இருக்கலாம் என்று அதை நிரூபிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

1980 களில் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக சோன்பத்ரா பகுதிக்குச் சென்றதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜே.என்.பால் கூறுகிறார். அங்கு ஏதாவது தாது மற்றும் உலோகம் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தங்கம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இரும்பு இருப்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டன என்று பேராசிரியர் ஜே.என்.பால் கூறுகிறார்.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்

சோன்பத்ர மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மாவட்டத்தின் தெற்கே சத்தீஸ்கர் மாநிலமும், மேற்கில் மத்திய பிரதேச மாநிலத்தின் சிங்க்ராலி மாவட்டமும் உள்ளன. சோன்பத்ரா மாவட்ட தலைமையகம் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரில் உள்ளது.

விந்தியப் பிராந்தியத்தில் காணப்படும் பல குகை ஓவிய தளங்களுக்காக ஏற்கனவே சோன்பத்ர மாவட்டம் பிரபலமானது. கெய்மூர் மலைகளில் அமைந்துள்ள லக்கானியா குகைகள் பாறை ஓவியங்களுக்கு பெயர் பெற்றவை.

சோன்பத்ரா

பட மூலாதாரம், SONBHADRA.NIC.IN

இந்த வரலாற்று ஓவியங்கள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானவை என்றும் ஒரு சகாப்தத்தின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்குள்ள கோட்வா மலை அல்லது கோர்மங்கர் என்ற இடத்தில் இருக்கும் பண்டைய குகை ஓவியங்களுக்காக பிரபலமான தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் ரிஹந்த் அணை மற்றும் பர்கந்தரா அணை ஆகிய இரண்டு அணைகளும் உள்ளன. இங்குள்ள லோரி என்ற பாறை வரலாற்று சிறப்புமிக்க பெரிய பாறை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: