டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை - பொருளாதார ரீதியில் இந்தியாவுக்கான லாபம் என்ன? - விரிவான தகவல்கள்

  • நிதி ராய்
  • பிபிசி வணிக செய்தியாளர்
Trump Modi

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தைப் பிப்ரவரி 24 ஆம் தேதி தலைநகர் புதுடெல்லியில் தொடங்குகிறார். உலகில் அதிகபட்ச வல்லமை மிக்க மனிதரை வரவேற்பதில் அரசியல் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களுக்காக இந்தியா உற்சாகம் கொண்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதால் இந்தப் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமானஅளவுக்கு மினி வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இருந்தபோதிலும், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், தேர்தல்களுக்கு முன்னரோ அல்லது பிறகோ ஒப்பந்தம் உருவாக்க இருப்பதால், எதிர்காலத்துக்கு `பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை' காத்திருப்பில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைத்திஜெர் இந்தியாவுக்கான வருகையை ரத்து செய்துவிட்டார். இரு தரப்பிலும் தீர்வு காணப்படாத பிரச்சனைகள் இருப்பதால், கடந்த வாரம் அவர் தனது பயணத் திட்டத்தை ரத்து செய்தார்.

``எங்களுக்கு இந்தியாவின் தரப்பில் நல்ல உபசரிப்பு இல்லை. ஆனால் நான் திரு. மோதியை மிகவும் விரும்புகிறேன்'' என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகள் கடந்த மூன்று ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சை என்ன?

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளராக அமெரிக்கா இருக்கிறது. இருதரப்பு சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகம் 142.6 பில்லியன் டாலர்கள் என்ற அதிகபட்ச நிலை 2018ல் எட்டப்பட்டது. அமெரிக்காவின் 9வது பெரிய சரக்கு வர்த்தக பங்காளராக இருக்கும் இந்தியாவுடன் 2019ல் 23.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகத்தில் அச்சமான சூழ்நிலை தொடர்ந்து அதிகரித்துக் வருகிறது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்து வருகிறது என்றாலும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையில் 10ல் ஒரு பங்கிற்கும் குறைவான அளவில் தான் இருக்கிறது என்றாலும், அமெரிக்காவின் கோபத்தில் இருந்து இந்தியா தப்பவில்லை.

இந்தியாவிலிருந்து வரும் எஃகு பொருட்களுக்கு 25 சதவீத வரியும், அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிப்பதாக டிரம்ப் அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இந்தியா - அமெரிக்கா இடையில் `வர்த்தகப் போர்' தொடங்கியது. சில மாதங்கள் கழித்து அது அமலுக்கு வரும் வரையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா வற்புறுத்திக் கொண்டிருந்தது. பதில் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக வெளிப்படையாகப் பேசிய அமெரிக்க அதிபர், இந்தியாவை ``உலகின் வரிவிதிப்பின் ராஜா'' என்று வர்ணித்தார்.

அமெரிக்காவில் உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 28 வகையான பொருட்களுக்கு 2019 ஜூன் 16 ஆம் தேதியிலிருந்து கூடுதல் வரி விதித்து இந்தியா பதில் நடவடிக்கை எடுத்தது. இந்தப் பிரச்சனையை அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் பார்வைக்குக் கொண்டு சென்றது.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்ட நிலையில், மின்னணு வணிகம் விரிவாக்கத்தின் காரணமாக, இந்தியர்களுக்கான எச் 1பி விசா ஒதுக்கீட்டை 15 சதவீத அளவுக்குக் குறைப்பது பற்றி சில காலம் அமெரிக்கா பரிசீலனை செய்தது. இந்தியாவின் கட்டண விதிப்பு மற்றும் கட்டண விதிப்பு அல்லாத வர்த்தகத் தடைகள் குறித்து பிரிவு 301 ன் கீழ் ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தது.

இந்த வணிக பேரத்தை தொடங்கும் வகையில் இந்தியாவின் வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்கப் பிரதிநிதி ராபர்ட் லைத்திஜெர் ஆகியோர் 2019 நவம்பர் 13 ஆம் தேதி சந்தித்துப் பேசினர். நவம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து ஒரு குழு இந்தியாவுக்கு வந்து, இந்த உத்தேச ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர் லைத்திஜெர் இப்போது ட்ரம்ப்புடன் வரும் அமெரிக்க குழுவில் இடம் பெற மாட்டார் என்று அமெரிக்கா அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க பால் பொருட்கள் மற்றும் கோழிப்பண்ணை பொருட்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திட்டங்களை மேம்படுத்த இந்தியா சில முன்மொழிவுகளை வைத்த போதிலும், இந்த மாத ஆரம்பத்தில் லைத்திஜெர் இந்தியாவுக்கான பயணத்தை ரத்து செய்துவிட்டார். தொழில் வர்த்தக விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் எந்த அளவுக்கு தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை இது காட்டுகிறது.

அதிபர் டொனால்ட் பயணத்துக்கு முன்னதாக, வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் நியாயமற்ற மானியத்துடன் கூடிய ஏற்றுமதிகளால் அமெரிக்க தொழில் துறைக்கு ஏதும் பாதிப்பு உள்ளதா என்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்ற விதிவிலக்கு ரத்தாகிவிட்டது.

ஜி 20 நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற்றிருப்பதாலும், உலக வர்த்தகத்தில் 0.5 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான அளவு பங்கு வகிப்பதாலும், அந்தப் பட்டியலிலிருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. வளரும் நாடுகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் முன்னுரிமை ஆதாயங்களின் கீழ் பொதுமைப்படுத்திய முன்னுரிமை முறைமையை (ஜி.எஸ்.பி.) மீண்டும் பெறுவதற்கு இந்தியா முயற்சிக்கும் நிலையில் இது பின்னடைவை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்த வரையில் ஜி.எஸ்.பி. அந்தஸ்து முக்கியமானது. ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் சில பொருட்கள் வரி எதுவும் இல்லாமல் அமெரிக்க சந்தைகளில் நுழைய முடியும். ஆனால் 2019 ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து இந்தச் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகத் தடைகள் தங்களுடைய ஏற்றுமதியைப் பாதிக்கின்றன என்று அமெரிக்க பால்பொருள் மற்றும் மருத்துவ உபகரண தொழில் துறையினர் கூறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டது.

இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ``இரண்டு நாடுகளுக்கும் இடையில் கசப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளன'' என்று மத்திய தொழில் வணிகத் துறையின் முன்னாள் செயலாளர் திரு. அஜய் துவா பிபிசியிடம் தெரிவித்தார்.

``டிரம்ப் நிர்வாகம் வரிகளை உயர்த்தியதால், வீட்டு உபகரணங்கள், இயந்திரவியல் மற்றும் மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், ஸ்டீல் மற்றும் ஆட்டோ பாகங்கள் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கச் சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியிடுவது சிரமமானது. இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் இருந்து பாதாம் மற்றும் வால்நட், வாஷிங்டனில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்வது அதிக அளவில் பாதிக்கப்பட்டது'' என்று அமெரிக்கா - இந்தியா திட்டமிடல் பங்களிப்பு அமைப்பின் (USISPF) தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் முகேஷ் ஆக்கி பிபிசியிடம் கூறினார்.

நாம் எதை விரும்புகிறோம்?

ஜி.எஸ்.பி முன்னுரிமை மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்றும், எச் 1பி விசாவுக்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.

பட மூலாதாரம், Getty Images

தங்களுடைய பால் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கருவிகள் மீதான மேல் வரியைக் குறைக்க வேண்டும் என்றும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.

பிபிசியிடம் பேசிய டாக்டர் முகேஷ் ஆக்கி, ``பாதி விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் ஏற்பட்டாலே, எதிர்கால தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடித்தளமாக இருக்கும். நமது பொருளாதாரங்களை அதிக பயனுள்ளதாக பிணைக்கும் வகையில் களங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதாக அது இருக்கும். எனவே தொழில் துறையின் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆமாம், இந்த ஒப்பந்தம் நம்முடைய ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கும் பெரிய உத்வேகம் தருவதாக இருக்கும். இரு தரப்பிலும் தற்காப்பு நிலை எடுப்பது உகந்ததாக இருக்காது - இதுவரையில் நாம் எட்டியுள்ள உண்மையான முன்னேற்றங்களைத் தடுப்பதாக அது அமைந்துவிடும்'' என்று கூறினார்.

அடிப்படை விஷயம் / இது ஏன் சிரமமாக உள்ளது?

பல விஷயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதல் போக்கில் உள்ளன. ``ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீதும், மின்னணு மற்றும் ஐ.டி.ஏ. பொருட்கள் மீதும் வரிகள் அதிகரித்திருப்பது, மருத்துவ உபகரணங்களுக்கு விலை கட்டுப்பாடு வைத்திருப்பது, பால் பொருட்கள், டேட்டா பயன்பாடு ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பு போன்ற விஷயங்களில் அமெரிக்கா கவலை கொண்டிருக்கிறது'' என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் சம்மேளனத்தின் டைரக்டர் ஜெனரல் திரு அஜய் சஹாய் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் உள்ள பால் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை இந்திய சந்தையில் விற்க விரும்புகின்றனர். ஆனால் அங்கு பசுக்களுக்கு தீவனத்தில் அவர்கள் மாமிச உணவும் தருகிறார்கள். அது இந்திய நுகர்வோரின் மத உணர்வுகளுக்கு எதிரானது. எனவே, அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னதாக, அவை சுத்தமானவை என்று அமெரிக்க அரசு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் இரு தரப்புக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் காஷிஷ் பர்பியானி பிபிசியிடம் தெரிவித்தார்.

``விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக ஆக்கப் போவதாக அரசு கூறிவரும் நிலையில், இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆயத்தமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பாதிப்பை விவசாயிகள் தான் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக வேளாண்மை, பால் பண்ணை & கோழிப் பண்ணை உற்பத்தி பொருட்கள் அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு ரூ.42,000 கோடி மதிப்புக்கு இறக்குமதி செய்யப்படும்'' என்று ராஷ்ட்ரீய கிசான் மகா சங்கம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த உத்தேச ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த அமைப்பு நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்தியுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி சமர்ப்பித்த மத்திய பட்ஜெட்டில், மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு அரசு மேல்வரி (செஸ்) விதித்துள்ளது. ஏற்கெனவே இந்த விஷயம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது.

``மருத்துவ உபரணங்கள் மீது புதிய ஆரோக்கிய மேல்வரி விதிப்பு மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் மீது சமூக நல சர்சார்ஜ் விதிப்பு போன்ற கொள்களைகள் குறித்து நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம். மற்ற நாடுகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நோயாளிகளுக்கு கிடைக்காமல் போவது போன்ற, விரும்பியிராத விளைவுகள் இதனால் ஏற்படும். இதனால் ஆரோக்கியத்துக்கான செலவுகள் அதிகரிக்குமே தவிர, குறையாது'' என்று மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சங்கத்தின் (AdvaMed) துணைத் தலைவர் அப்பி பிராட் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

எனவே செஸ் குறித்த பட்ஜெட் அறிவிப்பு புதிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதயத்துக்கான ஸ்டன்ட்கள் மற்றும் மாற்று மூட்டுகள் மீதான விலை கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்புவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

`பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை' முன்னெடுத்துச் செல்ல ட்ரம்ப் முடிவு செய்திருந்தாலும், அதற்கான வாய்ப்பு உருவாகவில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வரவிருக்கும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக சலுகைகள், இரு தரப்பு வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள உரசல்களை சரி செய்ய உதவியாக இருக்காது. இருந்தபோதிலும், கடந்த 2 - 3 ஆண்டுகளில் மோசமாகிவிட்ட உறவுகளில் மென்மை நிலையை ஏற்படுத்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்புகளுக்கும் ஆதாயங்களை அதிகரிக்கச் செய்வதற்கான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ``வரவிருக்கும் வர்த்தகச் சலுகைகள் அமெரிக்க வேளாண்மைப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொருட்கள் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்ற ஆதாயங்களை உருவாக்கலாம். இந்தியாவுக்கு ஜி.எஸ்.பி. ஆதாயங்களை பகுதியளவுக்கோ அல்லது முழுமையாகவோ மீண்டும் அளிப்பதற்கான பரிவர்த்தனையாக அது இருக்கலாம்'' என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் காஷிஷ் பர்ப்பியானி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: