குடியுரிமை திருத்த சட்டம்: சென்னையில் அச்சத்தால் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் இஸ்லாமியர்கள்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வந்தால் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள், குடிமக்களாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள் என்ற அச்சம் நிலவுவதால், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

குடியுரிமைக்கான ஆதாரங்களில் முக்கியமான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் கேட்கப்படும் என்றும் அந்தச் சான்றிதழ் இல்லாதவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதுவரை பிறப்புச் சான்றிதழ் வாங்காதவர்கள் மற்றும் சான்றிதழில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை திருத்த வேண்டிய பலர், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது.

படக்குறிப்பு,

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வந்தவர்களில் ஒரு பகுதியினர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வேண்டி, ஒவ்வொரு மாதமும், அதிகபட்சம் 200 முதல் 250 பேர் விண்ணப்பிப்பார்கள். தற்போது விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800ஆக உயர்ந்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். அதாவது வழக்கமான எண்ணிக்கையைவிட இது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம்.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் செலவிட்ட இரண்டு மணிநேரத்தில், பல இஸ்லாமியர்கள், ஒருவித பயத்துடன் தங்களது ஆவணங்களைப் பதிவுசெய்ய வந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்ற பீதியும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

76 வயதான அப்துல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதுவரை எந்த அரசு அலுவலகத்திற்கும் சென்றதில்லை என்றும் தனது மகன்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும் வருத்தத்தோடு கூறினார்.

''நான், என் அப்பா, முன்னோர்கள் என எங்கள் குடும்பம் நீண்டகாலமாக சென்னையில் வசித்துவருகிறது. ஆனால் என்னிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை. என் இளைய மகனுக்கு 40 வயதாகிறது. அவனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தேன். என்னை முகாமுக்கு அனுப்பினால் பரவாயில்லை, என் மகன் அவன் குழந்தைகளோடு வாழவேண்டும். அவனுக்காக சான்றிதழ் வாங்கவந்தேன். என் மனைவியையும் அழைத்துவந்தேன்,''என்கிறார் அப்துல்.

அப்துல் மற்றும் அவரது மனைவி பிபிசி தமிழிடம் பேசும்போது, மூன்று மாத காலமாக நிம்மதி இல்லை என்றும் பயத்தில் இருப்பதாகவும் கூறினர். ''நான் முஸ்லிம். வாழ்நாளில் என் மத அடையாளம் ஒருபோதும் எனக்கு பிரச்சனையாக இருந்ததில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் எங்களை போல முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்கிறார்கள். பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வேறு என்ன ஆவணங்கள் கேட்பார்கள் என பலரிடம் விசாரித்து வருகிறேன்,'' என்றார் அப்துல்.

படக்குறிப்பு,

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வந்த மற்றொரு பகுதியினர்.

தளர்ந்த நடையுடன், முகத்தில் வியர்வையோடு விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் அப்துல் கொடுத்தார். அவரது மகனின் பிறப்புச் சான்றிதழ் கொடுப்பதில் சிக்கல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தபோது, கண் கலங்கினார். அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி செலுத்தினார்.

அப்துலை போல நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பிறப்புச் சான்றிதழ் கேட்டுவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் 80 வயது இஸ்லாமியர் ஒருவர் தமக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டி வந்ததாக தெரிவித்தனர்.

''குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என கேள்விப்பட்டதால், பலரும் விண்ணப்பிக்கிறார்கள். 1875 முதல் சென்னை மாநகராட்சியில், பிறப்பு பதிவு செய்யப்படுகின்றது. 1991ல் இருந்து கணினி வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆவணங்கள் ஏதும் இல்லாதவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவது சிரமம். விண்ணப்பித்தவர்கள், கொடுத்த தகவல்களை வருவாய் துறை அதிகாரி நேரில் சென்று அவரை பற்றி விசாரித்து, சான்றிதழ் கொடுக்கவேண்டும் என விதிகள் உள்ளன,'' என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர்தான், சான்றிதழ் வழங்கமுடியும் என்ற நிலையில், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்படும்போது, ஆவணங்கள் கேட்டால் என்ன செய்வது என பதற்றத்துடன் இருப்பதாக விண்ணப்பித்தவர்கள் கூறுகின்றனர். முடிந்தவரை, விரைவாக சான்றிதழ் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: