'ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசரணைக்கு நேரில் ஆஜராவதை தவிர்க்க முடியாது'

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசராணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்துள்ளார்.

முதல் முறை சம்மனுக்கு அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறிய வழக்கறிஞர் அருள்வடிவேல், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அருள்வடிவேல், ''ரஜினியை போல பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்ற அவரின் வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை. காவல் துறையினரின் உதவியோடு அதனை சரி செய்யமுடியும். ஆனால் தற்போது அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலையில் ஈடுபட்டுள்ளதால், வரமுடியவில்லை என தெரிவித்திருந்தார்.கேள்விகள் என்னவாக இருக்கும் என்றும் என்ன விதமான பதில்களை தரவேண்டும் என அவர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கான விளக்கங்களை அவரது வழக்கறிஞரிடம் அளித்துள்ளோம்,''என்றார்.

ரஜினியிடம் கேள்விகளின் சாராம்சம் எழுத்துபூர்வமாக சொல்லப்பட்டாலும், அவர் நேரில் வந்து ஆஜராவதை தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார் அருள்வடிவேல்.

சீலிடப்பட்ட கவரில் ரஜினிக்கு கேள்விகள்

முன்னதாக ரஜினிக்கான கேள்விகள் ஒரு சீலிடப்பட்ட கவரில் வழங்கப்பட்டுள்ளது என ரஜினியின் வழக்கறிஞர் இளந்திரையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 2018 மே மாதம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

"சமூக விரோதிகளே காரணம்"

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை, அரசியல் கட்சியினர், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடிக்குச் சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பிற்கு பின்னர், ''தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தால் எந்த முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்" என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு "சமூக விரோதிகளே காரணம்" என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்தை விசாரணை ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

சமூக விரோதிகளே காரணம் என ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை ஆணையம் முன்னர் நேரில் ஆஜராகி விளக்கம் தெரிவிக்கவேண்டும் என ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனிடையில், தூத்துக்குடியில், ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தான் நேரில் வந்தால், தனது ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, கேள்விகளை தனது வழக்கறிஞரிடம் எழுத்துவடிவில் தரவேண்டும் என்றும் ரஜினி ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: