தமிழக அரசியல்: மாநிலங்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும்?

தமிழக மாநிலங்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும்?

பட மூலாதாரம், Hindustan Times / getty images

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு நிறைவுக்கு வருகிறது.

இதில் மகாராஷ்ட்ரா, ஒதிஷா, தமிழ்நாடு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

ஆந்திரா, தெலங்கானா, அசாம், பிஹார், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் மேகாலயா மாநிலத்தைச் சே்ர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 12ஆம் தேதியும் நிறைவுக்கு வருகிறது.

இதில் தமிழ்நாட்டில் சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), கே. செல்வராஜ் (அ.தி.மு.க.), திருச்சி சிவா(தி.மு.க.), எஸ். முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.), ரங்கராஜன் (சி.பி.எம்.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.) ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது.

இந்த 55 இடங்களுக்குமான தேர்தல் மார்ச் 26ஆம் தேதியன்று நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.வாக்குகளைப் பதிவுசெய்ய ஊதா நிறப் பேனா பயன்படுத்தப்படும். ஐந்து மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கி, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.கவிற்கும் தி.மு.கவிற்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும்.

சி.பி.எம்மைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன், அ.தி.மு.கவின் ஆதரவில்தான் மாநிலங்களவை உறுப்பினரானார் என்பதால், காலியாகும் ஆறு இடங்களில் ஐந்து இடங்கள் அ.தி.மு.கவுக்குச் சொந்தமானவை.

இப்போது அந்த ஐந்து இடங்களில் இரண்டு இடங்களை இழக்கிறது அ.தி.மு.க. கடந்த முறை ஒரு இடத்தை மட்டுமே பிடித்த தி.மு.க. இந்த முறை, கூடுதலாக இரண்டு இடங்களைப் பெறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :