டெல்லி வன்முறை: போர்க் களமான தலைநகரம் - என்ன நடக்கிறது? - களத்தில் இருந்து BBC exclusive

  • ஃபைசல் முகமது அலி
  • பிபிசி செய்தியாளர், டெல்லியிலிருந்து
டெல்லி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை முதல் நடந்துவரும் போராட்டங்களின்போது 9 உயிரிழப்புகளும், ஏராளமான சேதங்களும் நடந்துள்ளன.

வட கிழக்கு டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இன்று (செவ்வாய்கிழமை) பகலில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்துவரும் கஜூரி கச்சி பகுதியில் கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஃபைசல் குறிப்பிட்டார்.

கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

முதலில் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கல்வீச்சு சம்பவங்கள் தொடங்கின.

தற்போது மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் முழக்கமிட்டு செல்கின்றனர். இந்த கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது

பஜன்புராவை சேர்ந்த பாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு பழைய நினைவிடம் அடித்து நொறுக்கப்பட்டு, அதனை தீ வைத்து கொளுத்தும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

இந்த நினைவிடத்துக்கு 10-15 மீட்டர்கள் அருகே ஒரு போலீஸ் உதவி மையம் உள்ளது. வன்முறை சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான கஜூரி காஸ் போலீஸ் நிலையத்தை சேர்ந்தது இந்த போலீஸ் உதவி மையம். அதனால் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இந்த போலீஸ் உதவி மையம் இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த நினைவிடத்துக்கு வெளியே உள்ள பூக்கடையொன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன

அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. உடைந்த செங்கல்கள், தெருவெங்கும் சிதறி கிடைக்கும் கற்களுக்கு மத்தியில் முற்றிலும் வித்தியாசமான ஓர் அமைதியான சூழல் காணப்படுகிறது.

வன்முறைகளுக்கு யார் காரணம்?

நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''திங்கள்கிழமை பகலில் இந்த வன்முறை தொடங்கியது. பெட்ரோல் பம்ப்களுக்கு சிலர் தீ வைத்தனர். சிலர் இந்த பகுதியில் உள்ள கடைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்'' என்று விவரித்தார்.

இந்த பகுதியை சேர்ந்த சிலர், நடந்த வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் வைக்கிறார்கள் என்று அவர்கள் விளக்கவில்லை.

முஸ்லிம்களை போலீசார் கொன்றதாக வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்தை சேர்ந்த ஓர் இளைஞர் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை சேர்ந்த ஒருவர், வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு நடத்தி, சேதங்களை ஏற்படுத்தியவர்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுடன் இருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 5-6 மணி நேரங்களுக்கு கல்வீச்சு நடந்ததாகவும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஆசாத் சிக்கன் என்ற கடையின் உரிமையாளரான புரே கான் கூறுகையில், கல்வீச்சு நடந்தபோது அதனை தடுக்க போலீசார் முயற்சிக்கவில்லை. எங்களால் வெளியே ஓடவும் முடியவில்லை. எங்கள் கட்டடத்தின் கீழே உள்ள பகுதிக்கு தீ வைக்கப்பட்டதால் நாங்கள் உடனடியாக மேல்மாடிக்கு சென்றோம்'' என்று கூறினார்.

இவரது வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி, ''எங்கள் வீட்டில் எதுவும் தற்போது இல்லை. எல்லாம் தீக்கிரையாகிவிட்டது'' என்று அழுகுரலில் கூறினார்.

சந்த்பாக் பகுதியில் வசித்துவரும் ஜாஹிட் என்பவர் கூறுகையில், ''இந்த பகுதியால் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பகுதியில் பெட்ரோல் குண்டுகள் எறிந்தவர்கள் அனைவரும் வேறு பகுதியில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களால் தான் இந்த வன்முறைகள் அரங்கேறின'' என்றார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ஆகியோரே இந்த வன்முறைகளுக்கு காரணம் என்று ஜாஹிட் குற்றம்சாட்டினார்.

வன்முறை தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் "ஜாஃபராபாத் மற்றும் சந்த்பாக் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்ப செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்," என்று கபில் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

""ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்," என்றும் அவர் கூறியிருந்தார்.

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா, கட்சியுடனான மோதலால் 2019இல் பாஜகவில் இணைந்தார்.

கோயிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்

சந்த்பாக் பகுதியில் உள்ள இந்து கோயில் ஓன்றை, வன்முறையில் இருந்து எந்த சேதமும் அடையாமல் காக்க அங்குள்ள இஸ்லாமியர்கள் பாதுகாத்து வருவதை அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினார்.

சூறையாடல் மற்றும் சேதங்களில் இருந்து இந்து கோயில்கள் மற்றும் கடைகளை பாதுகாக்க இரவிலும் இஸ்லாமியர்கள் தூங்காமல் விழிப்புடன் இருக்கின்றனர்.

மேற்கூறிய கோயில் அர்ச்சகரிடம் பேச பிபிசி எடுத்து கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.

இந்த பகுதியில் வாழ்ந்துவரும் சஞ்சய் தோமர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக சந்த்பாக் பகுதியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். நேற்று போல எந்த ஒரு நாளும் மோசமாக இருந்ததில்லை. தற்போதைய நிலை மனதில் வலியை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இங்குள்ள பிரதான சாலையில் இருக்கும் பாலாஜி ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக்கடை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இங்குள்ள மாருதி சுஸுகி ஷோரூம் ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது. எறிந்த நிலையில் உள்ள இந்த கடையை பார்த்தாலே எந்தளவுக்கு உக்கிரமான வன்முறை என்று புரியும்.

ஷோரூம் உரிமையாளரிடம் பேச பிபிசி முயன்றபோது, சீக்கிய மதத்தை சேர்ந்த அவர் இது குறித்து பேச மறுத்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: