டெல்லியில் டிரம்ப்: "பிரதமர் மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர்"

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் டொனால்டு டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லி வன்முறைகள் குறித்த கேள்விக்கு அது பற்றி இந்தியாதான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவர் தமது பேட்டியின்போது ஓரிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர் என்று தெரிவித்தார்.

மத சுதந்திரம் குறித்து தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாகவும் அவர் கூறினார்.

அது குறித்து அவர்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், "தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், அது குறித்து இந்தியாவுடன் நான் பேசவில்லை. அது இந்தியா தொடர்புடையது, அது குறித்து இந்தியாவே முடிவெடுக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசியதாகவும், அது தொடர்பாக சீனா கடுமையாக முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனை பல முனைகளிலும் முள்ளாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் இதில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் வருவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "அது பற்றி இன்று நாங்கள் நிறைய பேசினோம். (மோதி, இம்ரான்) இருவருடனும் தமக்கு நல்ல உறவு இருப்பதால் என்னால் முடிந்த அளவில் இதில் உதவ முடியும்" என்று அவர் குறிப்பிட்டார். மத்தியஸ்தமோ, உதவியோ தம்மால் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிக் கேட்டபோது அது பற்றித் தாம் பேச விரும்பவில்லை என்றும், மக்களுக்குத் தேவையானதை இந்தியா முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக முன்பு நீங்கள் தெரிவித்தீர்கள், ஆனால், அப்போது இந்தியா அதற்கு விரும்பவில்லை என்று அப்போதே தெரிவித்துவிட்டது. இப்போது உங்கள் நிலை என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, "அது பற்றி நான் ஏதும் சொல்லவில்லை. இந்தப் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த பேச்சு நீண்ட நாளாக சென்று கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் மோதியின் சில கொள்கைகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக இருப்பது குறித்து பிபிசி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், மத சுதந்திரம் பற்றி தாம் விவாதித்ததாகவும், முஸ்லிம்கள் குறித்து, கிறித்துவர்கள் குறித்து தாம் பேசியதாக குறிப்பிட்ட டிரம்ப், அதற்கு பிரதமர் மோதி ஒரு சக்திவாய்ந்த பதிலைத் தந்ததாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோதி மிகவும் அமைதியான மனிதர். ஆனால் மிக வலிமையானவர். பயங்கரவாதம் குறித்து சில கறாரான கருத்துகளைக் கொண்டுள்ளார். அவர் அதை சமாளிப்பார் என்றும் தெரிவித்தார் டிரம்ப்.

"ஐஎஸ் தலைவர் பாக்தாதியை கொன்றோம். இரான் தளபதி சுலேமானியை கொன்றோம். அபு ஹம்சா, பின் லேடன் என தீவிரவாதத்தை எதிர்த்து நான் செய்த அளவுக்கு வேறு யாரும் இதுவரை செய்தது இல்லை" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

"இந்தியாவில் வரி அதிகம்"

இந்தியாவில் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவுடன் வணிகம் செய்யும்போது அதிகபட்ச வரி செலுத்தவேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை அனுப்பும்போது ஏராளமான வரி செலுத்தவேண்டியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இருந்து பொருள்கள் அமெரிக்கா வரும்போது கிட்டத்தட்ட வரியே இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

வணிக ஒப்பந்தம் எட்டப்படவில்லை

தமது இந்தியப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக டிரம்ப் குறிப்பிட்டாலும், இந்தப் பயணத்தில் ஆயுதக் கொள்முதல், சுகாதாரம் தொடர்புடைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

விருந்து

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு மாலை டொனால்டு டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகை சென்றனர். அவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் வரவேற்றனர். ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்தில் டிரம்ப் மற்றும் மெனியா ஆகியோர் பங்கேற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: