டெல்லி கலவரம்: இறந்த போலீஸ்காரர் ரத்தன்லால் குடும்பம் வைக்கும் கோரிக்கை என்ன?

  • பூமிகா ராய்
  • பிபிசி ஹிந்தி சேவை
குடும்பத்துடன் ரத்தன்லால்

பட மூலாதாரம், DHEERAJ BARI

படக்குறிப்பு,

குடும்பத்துடன் ரத்தன்லால்

பிப்ரவரி 24 திங்களன்று காலை 11 மணி அளவில் டெல்லி போலீஸ் தலைமைக் காவலர் ரத்தன்லால் தம் உயரதிகாரியான கோகுல்புரி உதவி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார்.

சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு, செவ்வாயன்று காலை 11 மணிக்கு, ரத்தன் லாலின் வீட்டு சூழல் பழைய மாதிரி இல்லை. நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஏனெனில் திங்கள்கிழமை நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையில் நடந்த வன்முறை ரத்தன்லாலை கொன்றுவிட்டது.

வட கிழக்கு டெல்லியில் சாந்த் பாக், பஜன்புரா, ப்ருஜபுரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் போன்ற பகுதிகளில் நடந்த போராட்டத்தில் ரத்தன்லாலை சேர்த்து இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ரத்தன்லால் வீட்டுக்கு சென்றதும் அவரின் உறவினரான திலீப் மற்றும் மனீஷிடம் பேசினோம். ரத்தன்லால் குறித்து அவர் மனைவிக்கு இன்னும் கூறவில்லை என அவர்கள் கூறினர்.

ஆனால் வீட்டிற்குள் பூனம் கதறி அழும் சத்தத்திலிருந்து அவருக்கு உண்மை தெரிந்துவிட்டது தெரிகிறது.

கடந்த சனிக்கிழமைதான் அவரின் 16வது திருமணநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

ரத்தன்லால் 1998ல் டெல்லி காவல்துறையில் பணிக்கு சேர்ந்து ராபர்ட் வதேராவின் செயலகத்தில் பணியாற்றினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ரத்தன்லால் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றார்.

பட மூலாதாரம், DHEERAJ BARI

படக்குறிப்பு,

ரத்தன்லால் மனைவியுடன்

ரத்தன்லாலின் சகோதரர் முறையில் இருப்பவர் திலீப். அவர் சராய் ரோஹில்லாவின் அருகில் வசித்து வருகிறார். நேற்று குழந்தைகள் சிறப்பு வகுப்புகளுக்கு சென்றதும் தொலைக்காட்சியில் பூனம் இந்த செய்தியைப் பார்த்துள்ளார். அப்போதுவரை தொலைக்காட்சியில் ரத்தன்லாலுக்கு குண்டடி பட்டுள்ளது என மட்டுமே செய்திகள் வந்தது. அவரின் புகைப்படம் காண்பிக்கவில்லை. பிறகு அருகில் வசிப்பவர்கள் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டனர். அப்போதிலிருந்து இப்போதுவரை தொலைக்காட்சி போடவில்லை.

ரத்தன்லாலின் உறவினர் மணீஷ் பாண்டே கூறுகையில், "டெல்லியில் நடக்கும் கலவரம் குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால் இவரின் பணி அந்த பகுதியில் என்பது எங்களுக்கு தெரியாது. முதலில் தொலைக்காட்சியில் செய்தியைப்பார்த்தபோது ரத்தன்லால் என்னும் பெயரை மட்டுமே கூறினர். பின்னர் சமூக வலைதளத்தைப் பார்த்துதான் அது இவர்தான் என நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போதுவரை நாங்கள் அவர் மனைவிக்கு கூறவில்லை" என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் சீகரில் இருந்து வந்தவர்தான் 44 வயதான ரத்தன்லால். மூன்று சகோதரர்களில் முதலாமானவர். அவரின் இரண்டாவது சகோதரர் தினேஷ் கிராமத்தில் வண்டி ஓட்டுகிறார். மூன்றவது சகோதரர் பெங்களூருவில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார். ரத்தன்லாலின் தாய் சந்தரா தேவி தினேஷுடன் கிராமத்தில் வசிக்கிறார்.

ரத்தன்லாலின் தாய்க்கும் இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என திலிப் கூறுகிறார்.

பட மூலாதாரம், DHEERAJ BARI

ரத்தன்லாலுக்கு மூன்று குழந்தைகள். 11 வயதில் பரி என்ற மகள், 8 வயதில் கனக் என்ற மகள், 5 வயதில் ராம் என்ற மகன். மூவரும் கேந்திரிய வித்யாலாவில் படித்து வருகின்றனர். வீட்டில் ஆட்கள் சேர சேர குழந்தைகளை பக்கத்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இவர்களில் பரிக்கு மட்டுமே தன் தந்தை இறந்துவிட்டார் என தெரியும்.

ரத்தன்லாலின் உறவினர்களுடன் பேசியபோது, அவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அந்த வீடு அம்ருத் நகரில் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டுக்கு பெயிண்ட் கூட அடிக்கவில்லை.

இப்போது அந்த வீட்டிற்கு வெளியில் 50 ஜோடி செருப்புகள் இருக்கின்றன. வீட்டின் கதவிற்கு அருகில் ஒரு கரும்பலகை உள்ளது. அதில் குழந்தைகள் ஏதோ வரைந்துள்ளனர். ஒரு பழைய கணினி ஒன்று இருக்கிறது. வீட்டினுள் பூனம் பக்கத்தில் சில பெண்கள் உட்கார்ந்துள்ளனர்.

பூனம் கதறி அழுகிறார். மயங்கி விழுகிறார். தொலைக்காட்சியைப் பார்த்ததிலிருந்து அவர் எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடச் சொன்னால் ரத்தன்லாலுடன் இணைந்து சாப்பிடுகிறேன் எனக் கூறுகிறார்.

ரத்தன்லால் குறித்து அனைவரும் நல்ல விதமாகவே கூறுகின்றனர். அவரின் பெயரை விட அவரின் மீசையை வைத்தே அவரை பலரும் அடையாளம் சொல்கின்றனர்.

பட மூலாதாரம், BHUMIKA RAI/BBC

படக்குறிப்பு,

ரத்தன்லால் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள்

மணீஷ் கூறுகையில், இதற்கு முன்பு டெல்லியில் ஷாஹீன்பாக் மற்றும் சீலாம்பூரில் போராட்டம் நடந்தபோது அங்கே அவர் பணியில் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது சாதாரணமாக போலீஸ் வேலையில் நடப்பதுதான். மற்றவர்களை போல அவர் கிடையாது. வேலை சம்பந்தப்பட்டவற்றை அவர் வீட்டுக்குள் கொண்டு வர மாட்டார்.

ரத்தன்லால் புன்னகையுடன் இருப்பார் என அவரின் பக்கத்துவீட்டுக்காரர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நேற்று இரவு 11 மணிக்கு தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி சில செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள் . இதை எப்படி செய்ய முடியும் என கூறினார்.

"டெல்லி போன்ற நகரத்தில் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பாரகள்"என்றார்.

பட மூலாதாரம், DHEERAJ BARI

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தாங்கள் ரத்தன்லால் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்போவதில்லை என்று கூறினர்.

ரத்தன்லாலை தியாகியாக அறிவிக்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசுப் பணி தர வேண்டும் , குழந்தைகள் படிக்க உதவி செய்ய வேண்டும் இதுவே அவர்களின் கோரிக்கை.

ஆனால் இதுவரை ரத்தன்லாலுக்கு என்ன நடந்தது என அவர்களுக்கு தெரியவில்லை. பிணக்கூறாய்வு அறிக்கையும் இன்னும் வரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: