விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

  • ஷுமைலா ஜாஃப்ரி
  • பிபிசி செய்தியாளார்
அபிநந்தன்

முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.

எரிகிற பந்து:

``நிலைமை பதற்றமாக இருந்தது. காலையில் இருந்து சில விமானங்கள் மேலே பறந்து செல்லும் சப்தம் கேட்டது'' என்று அவர் நினைவுகூர்ந்தார். ஒரு நாளுக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ஜெட் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்து பாலக்கோட் பகுதியில் குண்டுகள் வீசியது. இந்த இடம் காஷ்மீர் பகுதியின் சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் உள்ளது.

``எனவே அந்த நடவடிக்கை எதிர்பாராதது அல்ல. ஆனால் சுமார் 10 மணிக்கு நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அடுத்தடுத்து, இரண்டு பெரிய வெடி சப்தம் கேட்டது'' என்றார் ரசாக்.

``பேசுவதை நிறுத்திவிட்டு என்ன நடந்தது என்று பார்த்தேன். ஆனால் பிறகு உள்ளே வந்து மறுபடியும் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து, வானில் பெரிய புகை மூட்டம் தோன்றியதைப் பார்த்ததாக ரசாக் கூறினார். அது வேகமாக தரையை நோக்கி வந்தது, நெருக்கத்தில் வந்தபோது, ஆரஞ்சு நிற நெருப்பு பந்து ஒன்று தெரிந்தது. அது இன்னும் நெருக்கத்தில் வந்தபோது, சுடப்பட்டதில், தீ பிடித்த ஒரு விமானத்தின் சிதைந்த பாகம் என்று தெரிந்தது.

எரிந்து கொண்டிருந்த விமானம், ரசாக்கின் வீட்டில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் விழுந்தது. இருந்தபோதிலும், அது பாகிஸ்தான் விமானமா அல்லது இந்திய விமானமா என்று உறுதியாக தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

தாம் கண்ட காட்சியில் இருந்து மீள்வதற்கு அவர் முயன்றார். ஆனால் சில நொடிகளில் வேறொரு புறம் திரும்பியபோது, அந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள மற்றொரு மலைக் குன்றின் மீது ஒரு பாராசூட் இறங்கியதைப் பார்த்துள்ளார்.

அருகில் வசிக்கும் அப்துல் ரகுமான் என்பவரை அழைத்து, அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?

படக்குறிப்பு,

விமானத்தின் உடைந்த துண்டுகள்

பாராசூட்டை ஏற்கெனவே பார்த்துவிட்ட நிலையில், அது பாகிஸ்தானிய வீரராக இருக்கலாம் என்று கருதியதாக அப்துல் ரகுமான் கூறியுள்ளார். ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி அவர் ஓடியுள்ளார்.

``முதலில் பாராசூட் அங்கே விழும் என்று தான் நான் நினைத்தேன்'' என்று தன் வீட்டுக்கு எதிரே மலையில் இருந்த ஒரு மரத்தை அவர் காட்டினார்.

``ஆனால் பாராசூட்டை இயக்கியவர் திறமையாக அதன் போக்கை மாற்றி, மலையில் சமவெளிப் பகுதியில் தரையில் இறங்கினார்'' என்று அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

பாராசூட் இறங்கியபோது அதில் இந்தியக் கொடி இருந்ததைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார். சீக்கிரம் அங்கே சென்றதாகவும் கூறினார்.

அபினந்தன் என்னைப் பார்த்தார். இன்னும் அவருடைய உடலில் பாராசூட் இருந்தது. ஆனால் ஒரு பாக்கெட்டில் கை விட்டு ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தார்.

``துப்பாக்கி என்னை நோக்கி இருந்தது. இது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்று அந்த பைலட் கேட்டார்.''

``பாகிஸ்தான் என்று நான் சொன்னேன். எந்த இடம் என்று அவர் கேட்டார். குவில்லா என்று தெரிவித்தேன்'' என்று கூறிய அப்துல் ரகுமான் புன்னகைத்தார்.

பட மூலாதாரம், BBC Sport

படக்குறிப்பு,

அப்துல் ரகுமான்

``அவர் இதுபோல அமர்ந்தார்'' என்று அபினந்தன் அமர்ந்திருந்ததை அப்துல் ரகுமான் நடித்துக் காட்டினார்.

``பிறகு அவர் துப்பாக்கியை வயிற்றுப் பகுதியில் வைத்து விட்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு, ஜெய் ஹிந்த் என்று முழங்கினார். மறுபடியும் கைகளைத் தூக்கி காளி மாதாவுக்கு ஜெய் என்று முழங்கினார்'' என்று அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

``கொஞ்சம் தண்ணீர் தருமாறு என்னிடம் அவர் கேட்டார். தன்னுடைய பின்பகுதி ரொம்பவும் அடிபட்டிருப்பதாகக் கூறினார்'' என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கிராமத்தினர் அந்த இடத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். அவர்கள் "Pakistan ka matlab kia - lailha illallah" & "Pak Fouj Zindabad" என்று கோஷங்கள் எழுப்பினர்.

உஷாராகிவிட்ட அபினந்தன் தாம் அமர்ந்திருந்த நிலையை மாற்றிக் கொண்டார். ஒரு கையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு, கால் பகுதியில் ஒரு பாக்கெட்டை திறந்தார். ஒரு காகிதத்தை எடுத்து, கசக்கி, மாத்திரையை போல வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வேறொரு காகிதத்தை அவர் எடுத்தார். அது பெரியதாக இருந்தது. அதை அவரால் விழுங்க முடியவில்லை. அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்தார். பிறகு கீழ்ப் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினார் என்று அப்துல் ரகுமான் நினைவுகூர்ந்தார்.

``அவரைப் பிடிக்க நான் முயற்சி செய்தேன். ஆனால் அவரிடம் ஆயுதம் இருந்தது. எனவே அவரை விரட்டிக் கொண்டு நான் ஓடினேன். கிராமத்தினர் வேறு சிலரும் சேர்ந்து விரட்டினர்.''

முடிந்து போன ஓட்டம்

முதலில் புழுதியாக இருந்த பாதையில் அவர் ஓடியதாகவும், பிறகு திசையை மாற்றிக் கொண்டு புகை வந்த திசையை நோக்கி ஓடியதாகவும் அப்துல் ரகுமான் கூறினார். எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகத்தில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. கிராமத்தினர் சிலர் அவரை நோக்கி கற்களை வீசினர். ஆனால் அவர் ஓடிக் கொண்டே இருந்தார். ஓர் ஓடையின் அருகில் சென்றதும் அதில் குதித்தார். அதில் தண்ணீர் அளவு குறைவாக இருந்தது. சிறிது நின்று, தண்ணீர் குடித்தார்.''

அருகில் வசிக்கும் முகமது ரபீக்கிடம் சொல்லி துப்பாக்கி எடுத்து வரும்படி கூறினேன்.

அருகில் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக ரபீக் கூறினார்; அவர் வீட்டுக்கு விரைந்து சென்று துப்பாக்கி எடுத்துக் கொண்டு, ஓடையை நோக்கி ஓடி வந்தார்.

``நான் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர் ஒருவர் என்னிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு, அபினந்தனை சுட வேண்டாம் என்று கூறினார். அவரை காயப்படுத்தாமல், உயிருடன் பிடிக்க விரும்புகிறோம் என்று கூறினார். எனவே வானை நோக்கி இரண்டு முறை அவர் துப்பாக்கியால் சுட்டார்.''

நாங்கள் அந்த இடத்துக்குச் செல்வதற்குள், ராணுவத்தினர் வந்துவிட்டனர். ``ராணுவ வீரர் ஒருவரும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தண்ணீரில் குதித்து "Naara-e-Haidri, Ya Ali" என்று கூறிக் கொண்டு அவரைப் பிடித்தார்.''

``அபினந்தன் துப்பாக்கியை போட்டுவிட்டு, கைகளைத் தூக்கினார். ராணுவ வீரரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.'' ராணுவத்தினர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்'' என்று ரபீக் நினைவுகூர்ந்தார்.

விமானம் விழுந்த இடம்

படக்குறிப்பு,

விமானம் விழுந்த இடம்:

அபினந்தன் பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே கோட்லா பகுதியில் முகமது இஸ்மாயில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு தான் அபினந்தனின் சிதைந்த விமானத்தின் பாகங்கள் விழுந்தன.

நடு வானில் விமானம் வட்டமடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தபோது, பள்ளிக்கூடத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

``வீடுகள் இருந்த பகுதியை நோக்கி அது சென்றது. நல்லவேளையாக திறந்தவெளி பகுதியில் கடைசியாக விழுந்தது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை'' என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.

குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை முதலில் உறுதி செய்து கொண்டு, விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்துக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

``நான் அங்கே சென்றபோது, விமானம் அப்போதும் எரிந்து கொண்டிருந்தது. சிறிய வெடிப்புகளும் நிகழ்ந்தன. அதன் மீது இந்தியக் கொடி வரையப்பட்டிருந்ததை நான் பார்த்தேன்; சில மணி நேரங்களுக்கு விமானம் எரிந்து கொண்டிருந்தது.''

சிதைந்த பாகங்கள் அங்கே இரண்டு வாரங்கள் கிடந்தன. பிறகு அவற்றை ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த இடத்தில் இப்போதும் பெரிய பள்ளம் இருக்கிறது. சிதைந்த சில பொருட்களையும் அங்கே காண முடிந்தது.

பல வாரங்களாக அருகில் உள்ள மக்கள் அந்த இடத்தை வந்து பார்த்துச் சென்றதாக முகமது இஸ்மாயில் தெரிவித்தார்.

அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்த தருணம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: