கமல் ஹாசன்: "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்"

கமல்

பட மூலாதாரம், Getty Images

தினமணி - ’பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’

படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தியன் - 2 படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

"நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பணியாற்றிய அவர்களின் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவர்கள் திரும்ப வரப்போவதில்லை என்கிற யதார்த்தத்தையும் உணரும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது."

"அந்த விபத்து நடந்தபோது சிலமீட்டர் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது," என்று கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இனிவரும் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் (என்னையும் சேர்த்து) இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும் என்று கமல் தெரிவித்துள்ளார்" என விவரிக்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் - ’அம்மா அகாடமியில் பயிற்சி’

பட மூலாதாரம், Getty Images

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வெழுதி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு `அம்மா ஐஏஎஸ் அகாடமி` என்ற பயிற்சி மையத்தின் மூலம் சென்னை, கோவையில் இலவசப் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

''ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சியை அளிக்க 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொருட்டு 'அம்மா ஐஏஎஸ்அகாடமி' பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் ஆளுமைத் தேர்வும், ஒரு நாள் சிறப்பு வகுப்பும் நடத்தப்பட உள்ளது.

மாதிரி ஆளுமைத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில் www.ammaiasacademy.com -ல் பெற்றுக்கொள்ளலாம்," என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இனிப்புகளின் தேதி

பட மூலாதாரம், Getty Images

அனைத்து இனிப்புக் கடைகளும் இனி விற்கப்படும் இனிப்பின் தயாரிப்பு தேதி, மற்றும் அந்த உணவின் தரம் மாறாமல் இருக்கும் தேதி(best before dates) ஆகியவை நிச்சயமாக குறிப்பிட்டுருக்கப்பட்டிருக்க வேண்டும் என இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

பாக்கெட்டில் இல்லாத இனிப்புகளுக்கு அந்த இனிப்பு வைக்கப்பட்டிருக்கும் தட்டில் அதற்கான தயாரிப்பு தேதி மற்றும் தரம் மாறாமல் இருக்கும் தேதி குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :