டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்

  • ஃபைசல் முகமது அலி
  • பிபிசி செய்தியாளர், டெல்லியிலிருந்து
டெல்லி வன்முறை

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images

கிழக்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை சம்பவங்களை படம்பிடித்து, பதிவு செய்து கொண்டிருந்தபோது, எங்களுடைய செல்போன்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கிருந்து வெளியேற நாங்கள் முயற்சி செய்தோம். அப்போது, எங்களுக்கு அருகே கற்கள் பறந்து வந்து விழுந்தன. திடீரென ஒரு சந்தில் இருந்து ஓர் ஆண் வெளியே வந்தார். அவருடைய கையில் துணிகள் மாதிரி ஏதோ சுற்றியிருந்தது.

அவருக்கு துப்பாக்கி குண்டுக் காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், சாலையின் எதிர்புறம் உள்ள கட்டடத்தின் மீதிருந்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த பரபரப்புகளால் பிரதான சாலைக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டு விட்டது. எனவே நாங்கள் கும்பல் ஆக்ரோஷமாக இல்லாத பகுதிக்குச் செல்வதற்கு சிறிய பாதைகளைத் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.

கிழக்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை வன்முறை அதிகரிப்பது பற்றி செய்தி அளித்தபோது, இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது இது முதல்முறையல்ல.

நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பெட்டியின் மீது அமர்ந்திருப்பதைப் போன்ற நிலைமை டெல்லியில் நிலவுகிறது.

2 அல்லது 3 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கும் வகையில், 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள அந்தப் பகுதிக்கு காலையில் நாங்கள் சென்ற போது, ஒரு மார்க்கெட்டுக்கே ஒரு கும்பல் தீ வைத்திருந்தது.

காவல் நிலையத்தில் இருந்து இந்த இடம் வெறும் 500 மீட்டர் தொலைவுக்குள் தான் இருக்கிறது.

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images

இவற்றில் பெரும்பாலான கடைகள் முஸ்லிம் சமுதாயத்தினருக்குச் சொந்தமானவை என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார்.

டயர்கள் எரிவதால் ஏற்பட்ட நாற்றமும், புகையும் அங்கு என்ன நடக்கிறது என்பதை உணர்த்தின. முழு காட்சிகளையும் படமாக்குவது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

என்ன நடந்தது?

அங்கிருந்து அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, சில கடைகள் மீது கற்களை வீசிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் படம் பிடிப்பதைப் பார்த்ததும் எங்களை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். நாங்கள் பாலத்தின் மீது நின்றிருந்தாலும், கற்கள் எங்களை உரசிச் சென்றன. நாங்கள் வேகமாக திரும்ப வேண்டியதாயிற்று.

இடையிடையில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் கேட்டன.

பல இடங்களில் 100 முதல் 200 பேர் வரை கூட்டமாகச் சென்றனர். சிலர் மூவர்ணக் கொடிகளை ஏந்தியிருந்தனர். ஒன்றிரண்டு காவிக் கொடிகள் இருந்தன. ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம், ’அவர்கள் தேசத்தின் துரோகிகள் அவர்களை சுடுங்கள்’ என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளின் சாலைகள், சிறிய சந்துகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கைகளில் இரும்புக் கம்பிகள், தடிகள் போன்றவற்றை வைத்து அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

எதிர்தரப்பினர் தாக்க வந்தால் தடுப்பதற்காக அரண் அமைத்திருப்பதாக இரு தரப்பினருமே கூறுகின்றனர். நிறைய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், பல இந்துக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது போன்ற வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன.

இதையெல்லாம் யாரும் உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அரசு நிர்வாகம் இருக்கிறதா என்றே தெரியவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர் குல்ஷர் கூறினார். நாங்களே நேருக்கு நேராக அடித்துக் கொண்டு சாகட்டும் என்று அரசு விட்டுவிட்டதைப் போல இருக்கிறது என்றார் அவர்.

முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க வெளியில் இருந்து சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ராஜீவ் நகர் குடியிருப்போர் கமிட்டியின் பொதுச் செயலாளர் இஸ்லாமுதீன் கூறினார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் -ஒப்பீடு

1984ல் சீக்கியர்களுக்கு எதிராக பெருமளவில் நடந்த கலவரத்தைப் போல இப்போது இருக்கிறது என்று அவர் ஒப்பீடு செய்தார்.

அச்சுறுத்தும் வகையில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பேசிய போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்காது என்று இஸ்லாமுதீன் கூறினார்.

முன்னர் ஆம் ஆத்மி கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இப்போது பாஜகவில் சேர்ந்திருக்கும் கபில் மிஸ்ரா, ஜாப்ராபாத் செல்லும் சாலையை 3 நாட்களுக்குள் திறந்துவிட வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினருக்கு கெடு விதித்தார்.

அவர் இப்படி பேசிய பிறகு தான் வன்முறை வெடித்தது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/getty images

கபில் மிஸ்ராவின் பேச்சில் தமக்கு உடன்பாடு இல்லை என்று கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்றாலும், அவருக்கு எதிராக பாஜக சார்பிலோ அல்லது காவல் துறை சார்பிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மிஸ்ரா கூறிய வார்த்தைகள் தான் பல தெருக்களில் எதிரொலிக்கிறது.

"இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீங்கள் அந்தப் பகுதியைப் பார்க்க முடியாது," என்று, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கஜூரி காச்சி பகுதியை சுட்டிக்காட்டுகிறார், அந்தப் பகுதியில் கடையில் வேலை பார்க்கும் ரோஷண்.

"சிவில் சர்விஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பிருத்விராஜ், சுமார் 300 பேர் கொண்ட ஒரு கூட்டத்தை சுட்டிக் காட்டி, அவர்கள் பிரச்சனை செய்வதில்லை என காவல் துறையினருக்கு தெரியும் எனவே அவர்களை எதுவும் சொல்வதில்லை; முஸ்லிம்கள் தான் அப்படி செய்கிறார்கள்," என்றும் குறிப்பிட்டார்.

காச்சி பகுதியில் கும்பலைக் கலைக்க காவல் துறையினர் பல முறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதுபோன்ற அமைதியற்ற, மத அடிப்படையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளால் எல்லோரும் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் அதிகம் வாழும் சாந்த் பாக் பகுதியில் தாங்கள் இப்போதும் பாதுகாப்பாக உணர்வதாக ராஜேந்திர குமார் மிஸ்ரா போன்றவர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்களும், இந்துக்களும் திங்கள்கிழமை இரவு கோவில்களுக்கு அரணாக நின்றிருந்தனர். திங்கள்கிழமை அதிகாலையில் முஸ்லிம்களின் கல்லறை வளாகமான சாந்த் ஷா பகுதிக்கு சில விஷமிகள் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: