டெல்லி வன்முறை: போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளரா? #FactCheck

  • கீர்த்தி துபே
  • பிபிசி செய்தியாளர்
டெல்லி வன்முறை: உண்மை கண்டறியும் ஆய்வு

பட மூலாதாரம், PTI

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 48 போலீஸ்காரர்களும் சுமார் 90 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், திங்களன்று வெளிவந்த ஒரு வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

வீடியோவில், ஒரு நபர் பகல் நேரத்தில் போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுடுகிறார். இந்த இளைஞனின் பின்னால் கற்களை வீசும் ஒரு கூட்டம் இருக்கிறது. சிவப்பு சட்டை அணிந்த இந்த இளைஞன், போலீஸ்காரரை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டியவாறே முன்னேறிச் செல்கிறான். கூட்டமும் அந்த இளைஞனுடன் முன்னோக்கி நகர்கிறது, துப்பாக்கியால் சுடும் ஓசை ஒலிக்கிறது.

இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ள த ஹிந்து பத்திரிகையாளர் செளரப் திரிவேதி, "ஒரு சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஜாஃப்ராபாத்தில் துப்பாக்கியால் சுடுகிறார். இந்த நபர் போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார். ஆனால் போலீஸ்காரர் உறுதியாக நின்றார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக திங்கட்கிழமையன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பி.டி.ஐ பத்திரிகையாளர் ரவி செளத்ரி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார், ஆனால் இந்த படத்துடன் இந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், என்டிடிவி, இவர் பெயர் ஷாருக் என்று குறிப்பிட்டுள்ளது. டெல்லி போலீசார் இவரை காவலில் எடுத்துள்ளனர். தகவல் தெரிந்து கொள்வதற்காக டெல்லி போலீசாரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை போலீசாரிடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு,

பி.டி.ஐ பத்திரிகையாளர் ரவி செளத்ரி எடுத்த புகைப்படம்.

இந்த வீடியோ வெளிவந்த பிறகு, ட்விட்டரில் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த நபர் குறித்த சர்ச்சைகள் தொடங்கியது. இந்தக் கூட்டம் CAAவுக்கு ஆதரவாக போராட்டம் நிகழ்த்துவதாக சொல்லப்பட்டது. இந்த இளைஞனின் பின்னால் நிற்கும் கூட்டத்தின் கைகளில் காவி நிறக் கொடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்த டெல்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான், "டெல்லியில் பாஜகவை சேர்ந்தவர்கள் கலவரம் செய்கின்றனர். துப்பாக்கியால் சுடும் ஆளுக்கு நிச்சயமாக கபில் மிஸ்ரா மற்றும் பாஜகவுடன் உறவு இருக்கிறது. அதனால்தான் அவர் டெல்லி போலீசார் மீது துப்பாக்கியால் சுடுகிறார். டெல்லி காவல்துறை கலவரக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

முகமது ஷாருக் CAA ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாரா? அவருக்குப் பின்னால் இருக்கும் கூட்டத்தின் கைகளில் காவி வண்ணக் கொடிகள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை பிபிசி கண்டுபிடிக்க முயன்றது.

தி ஹிந்து, ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் செளரப் திரிவேதி திங்களன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். அவரிடம் பிபிசி இந்த வீடியோ குறித்து பேசியது. "நான் மெளஜ்பூரிலிருந்து பாபர்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். ஜாஃபராபாத் மற்றும் மெளஜ்பூரின் எல்லையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாகனங்களில் தீ வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். கற்களையும் வீசிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பிலிருந்தும் கூட்டம் வந்துக் கொண்டிருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் இருந்த இடத்தில் நான் இருந்தேன். எனக்கு எதிரே இருந்த கூட்டம் சி.ஏ.ஏ.வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்களில் ஒருவர் முன்னால் வந்தார். அவரது கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்த்து. அவருக்கு பின்னால் இருந்த கூட்டம் கல்லெறிந்து கொண்டிருந்தது. அவர் முதலில் போலீசரிடம் துப்பாக்கியைக் காட்டி, அங்கிருந்து ஓடுமாறு எச்சரித்தார். ஆனால் போலீஸ்காரர் நின்றார். அதன் பிறகு அந்த இளைஞர் சுமார் எட்டு முறை சுட்டார்.

"எனக்குப் பின்னால் இருந்த கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தது" என்று செளரப் சொல்கிறார். அதாவது, இரு தரப்பினருக்கும் நடுவில் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். துப்பாக்கியால் சுட்ட இளைஞன் CAAவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.''

பட மூலாதாரம், VIDEO/SAURABH TRIVEDI THE HINDU

படக்குறிப்பு,

கூட்டத்தின் கைகளில் காவி நிறக் கொடிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது

இந்த சம்பவத்தின் சிறந்த தரமான வீடியோ செளரப்பிடம் இருந்து கிடைத்தது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, கைகளில் காவிநிறக் கொடியைக் கொண்டு செல்வதாக கூறப்படுவது உண்மையில் தள்ளுவண்டியில் காய்கறிகளும் பழங்களும் வைக்க உதவும் பிளாஸ்டிக் பெட்டிகள் என்பதை கண்டறிந்தோம். போராட்டக்காரர்கள் அவற்றை கேடயமாகப் பயன்படுத்தினார்கள்.

இருப்பினும், பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், முகமது ஷாருக்கின் குடும்பத்தினரை எங்களால் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

ஆனால் வீடியோவை ஆராய்ந்து பார்த்தப் பிறகும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி சொன்னதையும் வைத்தும் பார்க்கும்போது, முகமது ஷாருக் சிஏஏ-வுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதும், அவருக்குப் பின்னால் இருந்த கூட்டத்தின் கைகளில் இருப்பது காவி வண்ணக் கொடிகள் இல்லை என்பதும் தெளிவாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: