தமிழ்நாடு: அம்மனுக்கு சேலையை சீதனமாக வழங்கிய முஸ்லிம்கள் - சமூக நல்லிணக்கம்

தமிழ் நாட்டில் கோயிலுக்கு சீதனம் வழங்கிய முஸ்லிம்கள் - சமூக நல்லிணக்கம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "கோயிலுக்கு சீதனம் வழங்கிய முஸ்லிம்கள்"

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள், பாரம்பரிய முறைப்படி சீதனம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் மாரியம்மன் கோயிலையொட்டி முஸ்லிம்கள் வழிபடும் பெரிய பள்ளிவாசல் உள்ளது. பழைமையான மாரியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களாக ராஜகோபுரம், விமான திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இக்கோயில் விழாவுக்கு முஸ்லிம்கள் சீதனம் வழங்குவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இடையில் சில காலம் இந்த வழக்கம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இஸ்லாமியர்கள் 30 பேர், அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக வழங்கினர். அதேபோல, கோயில் நிர்வாகம் சார்பில் முஸ்லிம்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்து தமிழ் திசை: "இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து: நடிகர் கமல்ஹாசன் நாளை நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்"

பட மூலாதாரம், Lyca

இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப் பின்போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியான விவகாரம் தொடர்பான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் 'ஈவிபி' பிலிம் சிட்டியில், நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடை பெற்றது. கடந்த 19-ம் தேதி இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போது, விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 3 பேர் உயிர் இழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து தொடர்பாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கினர். விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்ததாக இயக்குநர் ஷங்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

விசாரணைக்கு வந்து ஷங்கர் அளித்த அனைத்து தகவல்களையும், போலீஸார் வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர்.

விசாரணை முழுமையடைய வேண்டும் என்றால் கமல்ஹாசனி டம் விசாரிப்பது அவசியம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர். அதன் தொடர்ச்சியாக நாளை (3-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அவரிடம் எங்கு வைத்து விசாரிக்க வேண்டும், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்ற பட்டியலையும் போலீஸார் தயார் நிலையில் வைத்துள்ளனர்.தினத்தந்தி: "மதுரை எய்ம்ஸ் எப்போது?"

பட மூலாதாரம், Getty Images

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரத்தில் அமையும்" என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது, "மத்திய மந்திரிசபை கூட்டத்தின் போது தமிழகத்தின் சிறப்புகளை பற்றி பிரதமர் மோதி பேசியிருக்கிறார். தமிழ் மொழி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் ஆகியவை மோதொக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்.

மோதி 2-வது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற போது 100 நாள் செயல்திட்டத்தை வடிவமைத்தார். அப்போது அவர், 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது புதிய இந்தியா உருவாக வேண்டும் என்றார். அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்து குறைபாடு இருக்கக்கூடாது. பெண்கள், முதியவர்கள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.

அதனால்தான் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மோதி அனுமதி அளித்தார். அதில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் கட்டப்படுகின்றன. இந்த 75 மருத்துவ கல்லூரிகளிலும் முதல் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, ராமநாதபுரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தது. நாங்கள் கேட்ட தகவல்களை விரைவாக கொடுத்து மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மூல காரணமாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் மோதி கடந்த ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன், எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரம் வாய்ந்ததாக அமையும். அதற்கான பணிகளை மத்திய அரசு முன்னின்று செய்யும்.

தமிழகத்தில் ஏற்கனவே 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 23 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. தற்போது கூடுதலாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்படுகின்றன. அதன்மூலம் தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கும்.

ஏழைகளுக்கும் உலக தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை என்பது அவர்களின் அடிப்படை உரிமை. மருத்துவ வசதி கிடைப்பதில் ஏழைகள், பணக்காரர்கள் பாகுபாடு இருக்க கூடாது.

இந்தியாவிலேயே சுகாதார துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதற்கு காரணமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுகிறேன். அனைவரும் நீண்ட வாழ்வு வாழ வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொண்டு உடல் நலத்தோடு இருக்க வேண்டும். மோடியின் ஆரோக்கிய இந்தியா திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நல்லதை சாப்பிடுங்கள், குறைவாக சாப்பிடுங்கள். உடல் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை"

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உற்பத்தியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: