டெல்லி வன்முறை: 12 மணி நேரம் தீயின் நடுவே குழந்தைகளுடன் தவித்த பெண்கள்

இந்திரா விஹாரில் உள்ள பெண்கள்

பட மூலாதாரம், Bushra sheikh

படக்குறிப்பு,

இந்திரா விஹாரில் உள்ள பெண்கள்

டெல்லியில் பல இடங்களில் நடந்த வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான் என்று கூறுகிறார் பிபிசியின் கீதா பாண்டே. வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை பாதிப்புகள் குறித்து அவர் மேலும் விவரிக்கிறார்.

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்து மற்றும் முஸ்லீம் என இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தங்க வீடு இல்லாமல் தவிக்க நேர்ந்தது.

டெல்லியில் இந்திரா விஹார் என்னும் பகுதியில் இருக்கும் பெரிய ஹாலில், வன்முறையால் வீடுகளை இழந்த பல பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கிருந்த விரிப்பில் உட்கார்ந்திருந்தனர். பல இளம் பெண்கள் கையில் குழந்தைகளுடன் காணப்பட்டனர். பல குழந்தைகள் குழுவாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த சத்திரம் ஒரு இஸ்லாமிய தொழிலதிபருக்கு சொந்தமானது. இடம்பெயர்ந்தவர்களுக்காக முகாமாக மாறியுள்ளது.

இந்த வன்முறையில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஷிவ் விஹார் என்னும் பகுதியில் இந்து கும்பலால் விரட்டப்பட்ட பெண்களே அந்த சத்திரத்தில் இருப்பவர்கள் அனைவரும்.

ஷிவ் விஹாரில் இருக்கும் வடிகாலின் ஒரு புறம் வசதியான இந்து மக்கள் அதிகமாகவும் அதே வடிகாலின் மற்றொரு புறம் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் சாமன் பார்க் மற்றும் இந்திரா விஹார் உள்ளது.

ஒரு சாலையால் பிரியும் இந்த குடியிருப்பு பகுதிகளில் தசாப்தங்களாக மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது.

செவ்வாய் மதியம் போல் முஸ்லீம் ஆண்கள் அனைவரும் இஜ்தெமா என்னும் ஒரு மதக் கூட்டத்திற்கு சென்றிருந்தபோது, இந்த நிலை ஏற்பட்டது என்கிறார் ஷிவ் விஹாரில் வசித்த நஸ்ரின் அன்சாரி என்பவர்.

பட மூலாதாரம், BUSHRA SHEIKH

படக்குறிப்பு,

நஸ்ரின்அன்சாரி மற்றும் அவரது தாய் நூர் ஜஹான் அன்சாரி

"அந்த இடத்தில் நாங்கள் 50-60 ஆண்களைக் கண்டோம். அவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது இதற்கு முன்பு அவர்களை நாங்கள் கண்டதில்லை" என்கிறார் நஸ்ரின். "அவர்கள் எங்களை பாதுகாக்க வந்துள்ளார்கள் என்றனர் மேலும் எங்களை வீட்டினுள் இருக்குமாறு கூறினர்" என்றார்.

அவர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தபோது அந்த ஆண்கள் தங்கள் பாதுகாப்புக்காக வரவில்லை என அந்த பகுதி பெண்கள் உணர்ந்தனர்.

நஸ்ரின் ஜன்னல் வழியே எடுத்த வீடியோவை பார்த்தபோது அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். கையில் மரக்கட்டைகள் வத்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிக் கொண்டும் அனுமன் சாலிசாவிலிருந்து சில வரிகளை சொல்லிக்கொண்டும் இருந்தார்கள் என்றார் நஸ்ரின்

எங்கள் பக்கத்து வீட்டு முஸ்லிம் பெண் எங்களை அழைத்து அவர் வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் என்றார் என கூறினார் நஸ்ரினின் தாய் நூர்ஜஹான் அன்சாரி.

"நாங்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது இன்னொருவரின் வீடும் அவரின் மருந்து கடையும் எரிவது தெரிந்தது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஷிவ் நகரிலிருந்து வெளியேறு மக்கள்

அவர்கள் மின் இணைப்பை சேதப்படுத்தியதாலும் வெளியே தூசியாக இருந்ததாலும் அந்த பகுதியில் இருள் சூழ்ந்தது என்றார் அவர்.

அதன்பின் எங்களை சுற்றி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளையும் சிலிண்டர்களையும் எறிந்தனர். இந்துக்களின் சொத்துகளுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. எங்களுக்கு இது போன்ற ஒரு நிலை வரும் என நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் முஸ்லிமாக பிறந்ததே எங்கள் தவறு என்கிறார் நூர்ஜஹான் அன்சாரி.

நாங்கள் ஒவ்வொரு முறை போலீஸுக்கு அழைத்த போதும் அவர்கள் ஐந்து நிமிடத்தில் அங்கே இருப்பதாக கூறினர் என்றார் நஸ்ரின்.

ஒரு கட்டத்துக்கு பிறகு தன் உறவினர்களை அழைத்து இந்த இரவுக்குபின் தாம் உயிருடன் இருக்க மாட்டோம் என எண்ணியதாக நஸ்ரின் தெரிவித்தார்.

அதன் பின் சில போலீஸார் இந்திரா விஹாரில் வாழும் முஸ்லீம் ஆண்களுடன் வந்தனர். 12 மணி நேர போரட்டத்திற்கு அதிகாலை 3 மணிக்கு அவர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இருக்கும் உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு காலில் காலணி எதுவும் அணியாமல் உயிரைக் காப்பாற்றி கொள்ள ஓடினோம் என்றார் நஸ்ரின்.

அந்த சத்திரத்தில் இருந்த பிற பெண்களும் இதே போன்ற நிகழ்வை நினைவு கூறுகின்றனர்.

நாங்கள் மாட்டிக்கொண்டோம். எரிப்பொருள் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகள் மற்றும் கற்கள் ஆகியன வெளியில் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் குடும்பத்துடன் நாங்கள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்தோம் என்கிறார் 19 வயதான ஷிரா மாலிக்.

படக்குறிப்பு,

ஷிரா மாலிக்.

அந்த இரவு வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய தங்களை எவ்வாறு நெருங்கினார்கள் என சில பெண்கள் கூறினர்.

ஒரு வயது குழந்தையின் தாய் ஒருவர் கூறுகையில், பல ஆண்கள் வீட்டுக்குள் புகுந்து தன் உடையை கிழித்ததாக கூறினார்.

30 வயதான ஒரு பெண் கூறுகையில், நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் என் பக்கத்து வீட்டில் வசித்த இந்து குடும்பத்தார்தான். என்றார்.

இந்த வன்முறை ஞாயிற்றுகிழமை மாலையில் ஷிவ் விஹாரிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் நடுவில் தொடங்கியதே ஆகும்.

பட மூலாதாரம், BUSHRA SHEIKH

படக்குறிப்பு,

இந்திரா விஹாரில் உள்ள பெண்கள்

சில மணி நேரங்களிலேயே அருகில் இருக்கும் ஷிவ் விஹார், சாமன் பார்க் ஆகிய நகர்களை வன்முறை பாதித்தது.

அந்த பகுதியில் சென்று பார்த்தால் வன்முறை சம்பவத்தின் ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் சிதறிய கற்கள், செங்கல் எரிக்கப்பட்ட வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் என காட்சியளித்தது அந்த பகுதி.

எப்போது நாங்கள் வீடு திரும்புவோம் என தெரியவில்லை என இந்திரா விஹாரில் வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

தன்னுடைய மூன்று குழந்தைகளும் வீட்டுக்கு எப்போது செல்வோம் என்று கேட்கின்றனர் என்கிறார் ஷபானா ரஹ்மான்.

''எங்கள் வீடு எரிந்து விட்டது. நாங்கள் எங்கே போவோம். என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். எங்களை யார் பார்த்துகொள்வார்கள். எங்களுடைய எல்லா ஆவணங்களையும் இழந்துவிட்டோம்'' என்கிறார் ஷபானா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: