இந்து மகா சபா தலைவர் கைது: பெண் நிர்வாகி பாலியல் புகார் - நடந்தது இதுதான்

சித்தரிப்புக்காக

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "பெண் நிர்வாகி பாலியல் புகார் - இந்து மகா சபா தலைவர் கைது"

பெண் நிர்வாகியின் பாலியல் புகார் மற்றும் பண மோசடி வழக்கில் 'இந்து மகா சபா' அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

அகில இந்திய இந்து மகா சபா' என்ற அமைப்பின் தலைவராக ஸ்ரீகண்டன் செயல்படுகிறார். இந்த அமைப்பின் பெண் நிர்வாகி நிரஞ்சனி, கடந்த ஜனவரி மாதம், ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

இந்த புகாருக்கு ஸ்ரீகண்டன் சார்பில் அவரது மனைவி பதிலடி புகார் மனு ஒன்றை கொடுத்தார். நிரஞ்சனி கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் ஸ்ரீகண்டன் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

ஸ்ரீகண்டன்

மேலும், சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவரும் ஸ்ரீகண்டன் மீது ரூ.14 லட்சம் மோசடி புகார் கொடுத்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்கும், ரூ.14 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பிக்கேட்டதாகவும், அதை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகாரின் பேரிலும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதை அறிந்ததும் ஸ்ரீகண்டன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்த ஸ்ரீகண்டன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்குப்பின் அவரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

தினமணி: பான் - ஆதார் கார்டை இணைத்துவிட்டீர்களா?

பட மூலாதாரம், Getty Images

வரும் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டையுடன் (வருமான வரி நிரந்தர கணக்கு எண்) ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி இறுதி நாள் என்று வருமான வரித்துறை கெடு நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், பான் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பான் அட்டை வைத்திருப்பவா்கள் அனைவரும், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாா் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையெனில், அவா்களது பான் அட்டை மதிப்பற்ாகி விடும். அதுமட்டுமன்றி, ஆதாரை இணைக்க தவறியவா்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

வருமான வரித் துறை சட்டத்தின் 272 பி- பிரிவின் படி, மதிப்பற்ற/செயலற்ற பான் அட்டை வைத்திருப்பவா்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின்படி, ஆதாா் எண்ணை இணைக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பான் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்காதவா்கள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மேலும் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடும். அவா்கள், பான் அட்டையை அடையாள அட்டையாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ரூ. 50,000 -க்கும் அதிகமான பணப் பரிமாற்றத்துக்கு பான் அட்டையை பயன்படுத்தும்போது, அவா்கள் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

அறிவிக்கப்பட்ட தேதிக்குள் ஆதாரை இணைக்காதவா்களின் பான் அட்டை ஏப்ரல் 1-ஆம் தேதி மதிப்பற்ாகி விடும். எனினும், ஆதாரை இணைத்தவுடன் அவா்களது பான் அட்டை செயல்பட தொடங்கி விடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்?"

பட மூலாதாரம், Getty Images

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக அமைச்சர் கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக அமித்ஷாவிடம் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு நடைபெற்ற அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் பழனிசாமியை பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் முஸ்லிம் அமைப்புகளும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.டெல்லி ஷாகின் பாக் போல சென்னை வண்ணாரப்பேட்டையில் 17 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தெலங்கானா, ஆந்திரா, பிஹார் ஆகிய மாநிலங்களை ஆளும் கட்சிகள், என்ஆர்சியை ஏற்க மாட்டோம் என்றும், 2010-ல் நடந்தது போலேவே என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அந்தந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதைப் பின் பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர அதிமுக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப் படுகிறது. நேற்று முன்தினம் விருது நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, என்பிஆர் விவகாரத்தில் ஆந்திரா, தெலங் கானாவை பின்பற்றப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென டெல்லி சென்ற தமிழக அமைச் சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அரைமணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள், அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கியுள்ளனர். பழைய முறைப்படி என்பிஆர் நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர இருப்பது குறித்தும் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு நடந்த அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் பழனிசாமியை பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சந்தித்துப் பேசினார். என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர் மானம் கொண்டுவர திட்டமிட்டுள் ளது பற்றியும், மாநிலங்களவை தேர்தல் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு தேமுதிக பிடிவாதம் பிடித்து வரும் நிலை யில், பாஜகவும் ஓர் உறுப்பினர் பதவியை கேட்பதாக கூறப்படு கிறது. அது குறித்தும் முதல்வரிடம் முரளிதர ராவ் பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''சிறு பான்மையின மக்களின் முழு இதயத்துடிப்பாக தமிழக அரசும் அதிமுகவும் இருக்கின்றன. அத னால், முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு 100 சதவீதத்துக்குமேல் தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் மீண்டும் இணைந்தால், '16 வயதினிலே' மாதிரி நல்ல படம் கிடைக்கலாம். என்பிஆர் தொடர்பாக முதல்வர் கோரியுள்ள திருத்தத்துக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' : பாஜகவை முந்திய காங்கிரஸ் எம்பிக்கள்

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்த துறை ரீதியிலான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் 95 எம்பிக்கள் ஒரு கூட்டத்தில்கூட கலந்து கொள்ளவில்லையென துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையின் கீழ் இயங்கிவரும் 8 துறை ரீதியிலான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் தொடர்பான பணிகளை ஆய்வு செய்த அவர் திங்கள்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மக்களவையை சேர்ந்த 166 எம்பிக்களும், மாநிலங்களவையை சேர்ந்த 78 எம்பிக்களும், மொத்தம் 244 பேர் இந்த குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள சூழலில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, வணிகம் உள்ளிட்ட துறைகள் துறை ரீதியிலான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்ளவேண்டும்.

110 பாஜக எம்பிக்கள் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள நிலையில் ,கூட்டங்களில் பங்கேற்கும் அவர்களின் வருகை பதிவேடு 58 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் 32 காங்கிரஸ் எம்பிக்கள் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களின் வருகை பதிவேடு 62 சதவீதமாக உள்ளது என்ற தஃவாவும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று துறைகள் வரிசையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் தான் அதிக வருகை பதிவாகியுள்ளதாக வெங்கையா நாயுடு மேலும் தெரிவித்துள்ளார்.

சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பங்கேற்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கூட்டங்களை தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 100ஆக இருந்தது. அது நடப்பாண்டில் 106ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: