கொரோனா வைரஸ்: இரான் தீவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பு - கள நிலவரம் இதுதான்

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
கொரோனா வைரஸ்: இரான் தீவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பு - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

பவளப் பாறைகளின் சொர்க்கம் என்றழைப்படும் இரான் நாட்டின் கிஷ் தீவானது உலகின் மிகச் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இரானின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள கீஷ் தீவில், ஆண்டிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த தீவை, உலகின் தடையற்ற வர்த்தக மண்டலமாக(Free trade zone) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறப்புமிக்க இந்த கிஷ் தீவில் தான், தற்போது 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் தற்சமயம் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினாலான உயிரிழப்புகள் 3000-க்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில், இந்நோய் குறித்த அச்சம் உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் இருந்து வருகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பானது இரான் நாட்டிலும் அதிக அளவில் பரவியதின் காரணமாக, 500க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், இரான் அரசு பாதுகாப்பு நலன் கருதி, விமானம் மற்றும் கப்பல் சேவையை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து இரான் நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள உள்ள தீவுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பல வருடங்களாக நடுக்கடலில் மீன்பிடிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

ஆனால், தற்போது இரானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழல் காரணமாக, அவர்கள் அந்ததந்த பகுதிகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். அதிலும், இரான் நாட்டின் கிஷ் மற்றும் முகாம் என்ற தீவுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்த்தவர்கள், தீவுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த தீவுகள் மட்டுமின்றி, இரானின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சார்க், புஷேஹ்ர், சலூர் மற்றும் கங்கன் போன்ற பகுதிகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதே போன்று இருப்பதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இரான் கிஷ் தீவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்த்த வெற்றியரசன் என்பவரை, பிபிசி செய்தி குழுமம் தொடர்புகொண்டு, பிரச்சனைகள் குறித்து விளக்கம் கேட்டபோது, "இங்கே நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்தேன், என்னைப் போன்ற பலரும் இங்கே பல வருடங்களை வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடலூர், நாகை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலிருந்தும், அதே போன்று குஜராத், கேரளா என்ற பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களும் இங்கே இருக்கிறோம்.

இப்போது இரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரைக்குச் சென்றால் நோய் தொற்றிவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் அனைவரும் இந்த தீவிலேயே முடங்கியுள்ளோம். இதனால், எங்களால் இங்கிருந்து வெளியேற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் வேலைசெய்து வரும் நிறுவனமும் இங்கிருந்து இந்தியா செல்வதற்கு எங்களுக்கு உதவ இயலாது என்று கைவிரித்துவிட்டது. இதனால் அவர்கள், உங்கள் நாட்டின் உதவியை நாடி இங்கிருந்து செல்லுங்கள் என்கிறார்கள்.

தற்சமயம் எங்களிடம் இருக்கும் உணவு ஒரு வாரக்காலம் வரை வரும் என்பதால், அதுவரையிலும் எங்களால் சமாளித்துக் கொள்ளமுடியும். ஆனால், அவசர தேவைக்கு இங்கே மருத்துவ வசதிகள் கூட இல்லை. ஆகவே, எங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று வருவதற்கு முன்பே எங்களை இங்கிருந்து இந்தியா அழைத்துச் சென்றுவிட்டால், நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் நல்லபடியாக இருப்போம். இந்திய அரசு எங்களைக் கருத்தில் கொண்டு விரைவில் இந்த பகுதியில் இருந்து அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

இரானில் இருக்கும் வெற்றியரசன் மற்றும் அவருடன் இருக்கும் மீனவர்களை, மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டும் என்று வெற்றியரசனின் மனைவி சுபா மற்றும் தாய் அஞ்சலாட்சி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்களை இங்கே கொண்டுவருவது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, "இரானில் இருக்கும் வெற்றியரசன் மற்றும் உடனிருப்பவர்களை, இந்தியா அழைத்து வருவதற்கான மனுக்கள் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சம்பந்தப்பட்டதுறைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: