பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்புவது தேசத் துரோகமா?

  • ரஜ்னீஷ் குமார்
  • பிபிசி செய்தியாளர்
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்களை எழுப்புவது தேசத்துரோகமா?

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 20 அன்று, பெங்களூரில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழங்கினார் 19 வயதான மாணவி அமுல்யா லியோனா. மேடையில் பேசிக் கொண்டிருந்த அமுல்யா, தனது பேச்சை முடிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை, மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 A-ன் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது காவலில் உள்ளார்.

அமுல்யா பேசும் அந்த முழு வீடியோவையும் பார்த்தபோது, தான் எழுப்பிய முழக்கம் குறித்து விளக்க முயற்சிக்கிறார் அவர் என்பது தெரிகிறது. ஆனால் அதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அது மட்டுமல்ல, அவர் எழுப்பிய 'பாரத் ஜிந்தாபாத்' என்ற முழக்கங்களைப் பற்றி யாரும் பேசவில்லை, புறக்கணித்துவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கப்பட்டது.

ஆனால், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற முழக்கம் எழுப்புவது தேசதுரோகம் என்றும், பாகிஸ்தான் முர்தாபாத் என்ற முழக்கம் எழுப்பினால் அது தேசபக்திக்கு ஒரு சான்று என்றும் சொல்லிவிட முடியுமா?

இது பற்றி கருத்து தெரிவிக்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, "பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்வது தேசத்துரோகம் அல்ல. தேசத்துரோகக் குற்றச்சாட்டு என்ன, அது ஒரு சாதாரண குற்றம் கூட இல்லை என்ற நிலையில், காவல்துறை எந்த அடிப்படையில் அவரைக் கைது செய்யதுள்ளது என்று தெரியவில்லை" என்று அவர் கூறுகிறார்.

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேண வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானை வெறுப்பதுதான் தேசபக்தி என்று நினைப்பவர்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கருதுவதில்லை. எந்த ஒரு நாடும், வெறுப்பை, விசுவாசத்திற்கு ஆதாரமாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. "

பட மூலாதாரம், Getty Images

தேசத்துரோகம் தொடர்பாக வேறு எப்போதெல்லாம் வழக்குகள் பதியப்பட்டன?

1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' மற்றும் 'ராஜ் கரேகா கால்சா' என்ற முழக்கங்களை எழுப்பிய பல்வந்த் சிங் மற்றும் பூபிந்தர் சிங் ஆகிய இரு ஊழியர்களை பஞ்சாப் அரசு கைது செய்தது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சண்டிகரில் உள்ள நீலம் திரையரங்குக்கு அருகே பல்வந்தும் பூபிந்தரும் இந்த முழக்கங்களை எழுப்பினார்கள்.

அவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ஏ இன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கை 1995 ஆம் ஆண்டு நீதிபதிகள் ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் நீதிபதி ஃபைசானுதீன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இப்படி ஓரிரு நபர்கள் முழக்கங்களை எழுப்புவது தேசத்துரோகம் அல்ல என்று அந்த அமர்வு தெளிவாகக் கூறியது.

"இப்படி இரண்டு நபர்கள் முழக்கம் எழுப்புவது என்பது, அரசாங்கத்திற்கும் இந்தியாவின் சட்டம் ஒழுங்குக்கும் அச்சுறுத்தல் அல்ல. இதில் வன்முறையையோ வெறுப்பையோ தூண்டும் எண்ணமும் இல்லை. இந்த வழக்கில், தேசத்துரோக குற்றச்சாட்டு என்பது முற்றிலும் தவறானது" என்று அந்த அமர்வு கருத்து தெரிவித்திருந்த்து.

விசாரணையின் போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 'இந்துஸ்தான் முர்தாபாத்' என்ற முழக்கங்களையும் எழுப்பியதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், 'இதுபோன்ற கோஷங்களை ஒரு சிலர் எழுப்புவதால் இந்திய அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை' என்றும் கூறியது.

சமூகத்திற்குள் யாராவது வெறுப்பைப் பரப்பும்போதுதான் தேசத்துரோக குற்றச்சாட்டு பதியப்படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அவர்களை கைது செய்வதில் காவல்துறை முதிர்ச்சியைக் காட்டவில்லை என்றும் கூறிய நீதிமன்றம், பதற்றமான சூழலில், இத்தகைய கைதுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் கூறியது.

"இதுபோன்ற சூழலில், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்போது பிரச்சனைகள் முடிவுக்குக் வருவதில்லை, மாறாக அது அதிகரித்துவிடும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பிறகு, பல்வந்த் சிங் மற்றும் பூபிந்தர் சிங் ஆகியோர் மீதான தேசத்துரோக வழக்கை நீதிமன்றம் கைவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கன்னையா குமார்.

கன்னையா குமார் மீது தேசத்துரோக வழக்கு

ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சிபிஐ கட்சியைச் சேர்ந்தவருமான கன்னையா குமார் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கன்னையா மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன போதிலும், இதுவரை காவல்துறை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யவில்லை.

இப்போது டெல்லி அரசு அதற்கு அனுமதி கொடுத்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். கன்னையா குமார் இந்திய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும், நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தின் தீர்ப்பை முன்னோடியாக கொண்டுதான் தீர்ப்பு வழங்கப்படும்.

பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி, அமுல்யா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்வது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவே இருக்கும் என்று கூறினார்.

"இது, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தெளிவாகக் காட்டுகிறது. இதில் தேசத்துரோக வழக்கு எங்கிருந்து வருகிறது? அந்த பெண் கூறிய முழக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனை சட்டத்தில் கூட எந்த விதியும் இல்லை என்ற நிலையில், தேசத்துரோகக் குற்றச்சாட்டு என்ன, வேறு எந்தவொரு கிரிமினல் வழக்கையும்கூட போட முடியாது" என்று நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

"அமெரிக்கா ஜிந்தாபாத் அல்லது டிரம்ப் ஜிந்தாபாத் என்று சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்னும்போது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்வதிலும் எந்த பிரச்சனையும் இல்லை" என்று நீதிபதி ரெட்டி கூறினார்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி அமுல்யாவுக்கு இந்த வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்கில் நீதிமன்றம் தன்னிச்சையாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும், இல்லாவிட்டால் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் நடக்காத போதும், பாகிஸ்தான் நமது எதிரி நாடு என்று அறிவிக்காத நிலையிலும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்வது குற்றமல்ல. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் சுமூகமாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான இராஜீய உறவுகள் இன்னும் தொடர்கின்றன என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று நீதிபதி ரெட்டி கூறுகிறார்.

கிரிக்கெட் தொடர்பாக சலசலப்பு

பட மூலாதாரம், Getty Images

2017 ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதற்காக 20 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தொடர்பானது. அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பிறகு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 15 பேர் மீதான இந்த வழக்கை நீக்க வேண்டியிருந்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விளையாட்டுப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானின் வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைவது தேசத்துரோகமா?

கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த டி 20 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் விளையாடின. இந்த போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. போட்டியின் பின்னர், ஆஸ்திரேலிய வீராங்கனைகள் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்கள்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் எஸ்.பி.எஸ் பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் விவேக் குமாரும் இருந்தார். அப்போது, ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி இந்திய பார்வையாளர்களைப் பாராட்டியதாகவும், இந்தியாவின் விளையாட்டைப் பார்க்க பெரிய அளவிலான மக்கள் வந்துள்ளதை பார்க்க மகிழ்சியாக இருப்பதாகவும் விவேக் கூறுகிறார்.

"இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய குடிமக்கள் பெரும் திரளாக வந்து போட்டிகளை ரசிக்கின்றனர். அவர்கள், 'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிடுவதை பார்க்கிறோம். அப்போது ஏன் தேசத்துரோகம் என்ற கேள்வியை எழுப்பவில்லை? இங்கே வாழ்ந்துக் கொண்டு, இந்தியாவை ஏன் புகழ்கிறீர்கள், வாழ்த்துகிறீர்கள் என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை, மாறாக எல்லோரும் அதை ரசிக்கிறார்கள். எந்த அணியை விரும்ப வேண்டும் என்பது ஒருவரின் சொந்த விருப்பம், யாருடைய வெற்றி ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும், யாருடைய தோல்வி அழ வைக்கும் என்பது தனிப்பட்ட உணர்வு. அதை யாரும், யார் மீதும் திணிக்க முடியாது" என்று விவேக் கூறுகிறார்.

மறுபுறம், 2018 நவம்பரில், இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை அதிகம் பிடிக்கும் என்று கூறினார். அதற்கு, பதில் கூறிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அந்த ரசிகரை "இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேறுங்கள்" என்று கூறினார்.

"ஜெர்மனியில் ஒரு சீக்கியர் கால்பந்து லீக்கிற்கு தேர்வு செய்யப்பட்டால் நமக்கு பெருமையாக இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் உலகின் பல கிரிக்கெட் அணிகளில் விளையாடுகிறார்கள், பல இந்தியர்கள் அவர்களிடம் இயல்பான பாசம் வைத்திருக்கிறார்கள். இந்திய பெண்கள் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஷோயிப் அக்தரை மிகவும் ரசித்திருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் மட்டுமா அவர்களின் ரசிகைகள்? இந்திய பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஃபவாத் கான். இந்தியாவின் தேசியவாதம் என்பது இது போன்ற சிறு விருப்பங்கள் மற்றும் தெரிவுகளுக்கும் மிகவும் மேலானது" என்கிறார் விவேக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

சட்டம் என்ன சொல்கிறது?

1962 இல், கேதார்நாத் சிங்குக்கு எதிராக பீகார் அரசு தொடுத்திருந்த தேசத்துரோக வழக்கில் ஐபிசியின் 124-ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. 1953 மே 26ஆம் நாளன்று பெகுசராயில் நடைபெற்ற பேரணியில் ஃபார்வர்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கேதார்நாத் சிங் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், பீகாரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார்.

"சி.ஐ.டி நாய்கள் சுற்றித் திரிகின்றன. பல அரசு நாய்கள் இந்தக் கூட்டத்திலும் அமர்ந்திருக்கலாம். பிரிட்டிஷ் அடிமைகளை தூக்கியெறிந்த இந்திய மக்கள், காங்கிரஸ் குண்டர்களை அரியணையில் அமர்த்தி விட்டார்கள். ஆங்கிலேயர்களை தூக்கி எறிந்ததைப் போலவே, நாங்கள் இந்த காங்கிரஸ் குண்டர்களை தூக்கியெறிவோம்" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, அரசாங்கத்திற்கு எதிராக வலுவான சொற்களைப் பயன்படுத்துவது தேசத்துரோகம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது. அரசாங்கம் செய்யும் தவறுகள், மாற்றங்கள் குறித்து எதிர்ப்பைக் காண்பிப்பது மற்றும் வலுவான சொற்களைப் பயன்படுத்துவது தேசத்துரோகம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. ஒருவர் வன்முறையையும் வெறுப்பையும் பரப்பாத நிலையில் தேசத்துரோக வழக்கு போடமுடியாது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

அரசாங்கத்தின் மீதான தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியது. இதுபோன்ற பேச்சினால் வன்முறை போன்ற சூழல் உருவாக்கப்படாத வரையிலோ அல்லது நிலைமையை மோசமாகாத வரையிலோ ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதை இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

தேசியவாதம் மற்றும் தேசத்துரோக அரசியல்

2014 ல் மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, இதுபோன்ற பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு, அவையே தேசியவாதத்தின் சான்றாக முன்வைக்கப்பட்டன. திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிக்கும். அப்போது திரையரங்குகளில் அனைவரும் எழுந்து நிற்பது கட்டாயமாக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கும்போது தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்திருக்க மறுத்த பலர் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. பிறகு, தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதிலிருந்து விருப்பம் என்று கூறப்பட்டது.

மக்களின் உணவு குறித்தும் விவாதங்கள் தொடங்கின. மாட்டிறைச்சி சாப்பிட்டதான சந்தேகத்தின் பேரில் ஆட்கள் அடித்து கொல்லப்பட்டனர். அதேபோல், என்ன பேசலாம், என்ன பேசக்கூடாது என்பதில் தொடங்கி, கருத்து மாறுபாடு காரணமாக கேள்வி எழுப்புவது தொடர்பாகவும் பிரச்சனைகள் எழத் தொடங்கின. அது மட்டுமல்ல, தேசியவாதம் என்பதை முழக்கங்கள் எழுப்புவது மற்றும் தேசியக் கொடி என்ற அளவில் மட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் 'தேசியவாதம்' என்ற சொல்லின் பொருளையும் அதன் நுணுக்கங்களையும் தெளிவாகக் கூறுகிறார் வரலாற்றாசிரியர் மிருதுலா முகர்ஜி.

தேசபக்தி குறித்து தாகூர் என்ன சொன்னார்?

அவர் கூறுகிறார், " காந்தி மற்றும் நேருவின் தேசியவாதத்திலிருந்து வேறுபட்டது ஹிட்லரின் தேசியவாதம். ஐரோப்பாவில் தேசியவாதம் என்ற கருத்து ஏகாதிபத்திய காலத்தில் வளர்ந்தது. யூதர்களாக இருந்தாலும் சரி, புராட்டஸ்டன்ட்டுகளாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவின் தேசியவாதத்தின் எதிரிகள் அவர்களுக்குள்ளேயே இருந்தனர். இதற்கு மாறாக, இந்தியாவில் தேசியவாதம் என்பது, வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வளர்ந்தது. இந்த தேசியவாதம் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்தது. பின்னர் அது காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதமாக மாறியது, அங்கு முதன்மை அடையாளம் இந்தியர் என்பதே, அதில் சாதி, மதம், மொழி என்பது முக்கியமானதாக இல்லை."

தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் தேசியவாதம் குறித்த கருத்துக்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. "தேசியவாதம் என்பது நமது இறுதி ஆன்மீக இலக்காக இருக்க முடியாது. எனது இலக்கு என்பது மனிதநேயம் மட்டுமே. கண்ணாடி வாங்குவதற்காக வைரத்திற்கான விலையை ஒருபோதும் கொடுக்க மாட்டேன். நான் வாழும் வரை, மனிதகுலத்தை ஒருபோதும் தேசபக்தி மேலோங்க விடமாட்டேன்" என்று தாகூர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டிஷ் அடக்குமுறை சட்டம்

1922 இல் 'யங் இந்தியா'பத்திரிகையில் பிரிட்டிஷின் அடக்குமுறை சட்டம் பற்றி,எழுதிய மகாத்மா காந்தி, "எந்தவொரு குறிக்கோளையும் அடைவதற்கு முன்பு கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியம்" என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

கருத்து சுதந்திரம் தான் வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்றும், அதை உறுதிப்படுத்தாமல் எந்த அரசியல் சுதந்திரத்தையும் அடைய முடியாது என்பதையும் காந்தி எப்போதுமே வலியுறுத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு, அரசிசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை ஆகியவை அடிப்படை உரிமைகளாக குறிப்பிடப்பட்டன.

கருத்துச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதையும் உள்ளடக்கியது, இதுவும் மிக முக்கியமானது. 'ஒவ்வொரு நபரும் ஒரே பாடலைப் பாட வேண்டும் என்பது ஜனநாயகத்தில் தேவையில்லை' என்று எஸ்.ரங்கராஜன் Vs பி ஜக்ஜீவன் ராம் வழக்கில், உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.

வரலாற்று ரீதியாக பார்த்தால், தேசத்துரோகம் தொடர்பான சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் காந்தி, பாலகங்காதர திலகர் உட்பட பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2017 ஏப்ரல் 22ஆம் தேதியன்று எம்.என். ராய் நினைவு சொற்பொழிவில் பேசிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, "அரசாங்கம் முழு நாட்டையும் சிறைச்சாலையாக்கியுள்ளது, மக்கள் கைதிகளாக மாறிவிட்டனர். சிறைக்குச் செல்வது ஒரு பெரிய இடத்திலிருந்து ஒரு சிறிய இடத்திற்கு மாறுவது மட்டுமே" " என்று 1908ஆம் ஆண்டில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, பால கங்காதர திலகர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

1922 ஆம் ஆண்டில், மகாத்மா காந்திக்கு தேசத்துரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை சிறையில் அடைக்க ஆங்கிலேயர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தினர். அடிமை இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட தேசத் துரோகச் சட்டம், இன்னும் சுதந்திர இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சட்டத்திற்கு இப்போது எந்த பொருளும் இல்லை என்று கூறுகிறார் துஷ்யந்த் தவே. "1950இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த உடனே இந்த சட்டம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சட்டத்தை தற்போதைய அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு அரசாங்கமும் தவறாகப் பயன்படுத்தியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அதன் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பினால் அது தேசத்துரோகம் மற்றும் தேச விரோதம் என்று அழைக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்,

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டம் சுதந்திர இந்தியாவில் இன்றும் அப்படியே உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை பிரிட்டிஷாரே 2009 இல் பிரிட்டனில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசருக்கும், ஆட்சிக்கும் எதிராக எழும் குரலைத் தடுக்க 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது தேசத்துரோகச் சட்டம். அதன் நோக்கம் மக்கள் அரசாங்கத்தைப் பற்றி நல்ல விஷயங்களையே பேச வேண்டும் என்பதே. அதே நோக்கில் இதே சட்டம் 1870 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1897 இல் பால கங்காதர திலகருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தினர். சத்ரபதி சிவாஜி தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் திலகர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அரசாங்கத்தை புறக்கணித்தோ அல்லது அதை தூக்கியெறிய வேண்டும் என்பது போன்ற எதையுமோ அவர் பேசவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இந்த சட்டமானது "வெறுப்பு, வன்முறை, பகைமை, அரசைப் புறக்கணிப்பதுல் மற்றும் தேசத்துரோகத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று விளக்கியது.

பட மூலாதாரம், Getty Images

நேரு-படேல் மற்றும் ஷியாம பிரசாத் முகர்ஜி

அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 17 மாதங்களுக்குப் பிறகு, கருத்துச் சுதந்திரம் எந்த அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதம் தொடங்கியது. இறுதியாக, 1951 இல், அரசியலமைப்பில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. பொது ஒழுங்கு, பிற நாடுகளுடன் நட்புறவு மற்றும் குற்றங்களைத் தூண்டுதல் ஆகிய மூன்று புதிய சொற்கள் இந்தத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டன. பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும், பிற நாடுகளுடனான நட்பு உறவுகளை மோசமாக்கும் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் எதையும் யாரும் பேசவோ எழுதவோ முடியாது.

'Republic of Rhetoric, Free Speech and the Constitution of India' (சொல்லங்கார குடியரசு - பேச்சுரிமை மற்றும் இந்திய அரசியலமைப்பு) என்ற தனது புத்தகத்தில், புகழ்பெற்ற வழக்கறிஞர் அபிநவ் சந்திரசூட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "அரசியலமைப்பின் முதல் திருத்தம், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடுவதைத் தடுத்து நிறுத்தியது. பிற நாடுகளுடனான நட்புறவை மேற்கோள் காட்டி அவரை நேரு மற்றும் படேல் தடுத்து நிறுத்தினார்கள்."

படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதிய நேரு, "ஷியாமா பிரசாத் முகர்ஜியின் இந்து மகாசபை, ஐக்கிய இந்தியாவைப் பற்றி பேசுகிறது என்றும், அது போருக்கான உணர்ச்சிகளை தூண்டுவதைப் போன்றது" என்றும் குறிப்பிட்டிருந்ததாக அபிநவ் சந்திரசூட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். பாகிஸ்தானுடனான போரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது தொடர்பாக நேரு கவலை கொண்டிருந்தார். இதற்கான முடிவை அரசமைப்புச் சட்டத்தில் இருந்தே காணலாம் என்று படேல், நேருவுக்கு பதிலளித்தார்.

ஏப்ரல் 1950 இல், நேரு-லியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்து நேருவின் அமைச்சரவையில் இருந்து விலகினார் முகர்ஜி. நேருவிடம் பேசிய முகர்ஜி, 'நீங்கள் பின்பற்றும் கொள்கை வெற்றிபெறாது, என்பதை நீங்கள் எதிர்காலத்தில் தன் தெரிந்துக் கொள்வீர்கள்' என்றுக் கூறினார். இதன் பின்னர், முகர்ஜி இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றி பகிரங்கமாக பேசினார்.

"இந்து மகாசபை, கல்கத்தா பிரஸ் மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பிரச்சாரத்தின் காரணமாக பாகிஸ்தானுடனானஒப்பந்தம் சரியாக செயல்படவில்லை" என்று 1950 ஜூன் மாதம் படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு. இதற்கு பதிலளிக்கும் வகையில், படேல் 1950 ஜூலை மாதம் நேருவுக்கு இரண்டு கடிதங்களை எழுதினார். அவற்றில், "குறுக்கு வழிகள் மற்றும் அமைப்பாளர்களுக்கான தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விரைவில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாம் பரிசீலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று படேல் குறிப்பிட்டிருந்தார்.

அதுவரை, பிரிவு 19 (2) இல் முக்கியமாக நான்கு விதிவிலக்குகள் இருந்தன. அவதூறு, ஆபாசம், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு வழக்குகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.

முதல் திருத்தம்

1951 ஜூன் மாதத்தில், நாடாளுமன்றத்தில் முதல் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், மேலும் மூன்று புதிய நிபந்தனைகளும் பிரிவு 19 (2) இல் சேர்க்கப்பட்டன. இந்த நிபந்தனைகள் -

1. பொது அமைதியை குலைப்பது

2. குற்றங்களைச் செய்ய ஒருவரைத் தூண்டுவது

3. பிற நாடுகளுடனான நட்புறவின் வெளிப்பாட்டைத் தடுப்பது.

"ஷியாமா பிரசாத் முகர்ஜியைத் தடுப்பதற்காக பிற நாடுகளுடனான நட்புறவின் நிலை என்ற அம்சம் சேர்க்கப்பட்டது. போரைத் தூண்டும் விதமாக ஒரு நபர் ஏதாவது செய்தால் அது மிகவும் தீவிரமானது என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது நேரு தெரிவித்தார். வெளிப்பாடு என்ற பெயரில் எந்த நாடும் போரை எதிர்கொள்ள முடியாது என்றும் நேரு கூறினார்.

மறுபுறம், நேருவுக்கு பதிலளிக்கும் விதமாக, முதல் அரசியலமைப்பு திருத்தம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய ஷியாமா பிரசாத் முகர்ஜி, "நாட்டின் பிரிவினை ஒரு தவறு, பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும் கூட, அது என்றாவது ஒரு நள் அது முடிவுக்கு கொண்டுவரப்படும்" என்று கூறினார்.

"தேசத்துரோக சட்டத்தின் கீழ், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் பேசியது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுத்தது. வன்முறையைத் தூண்டும் நோக்கம் கொண்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்று கூறுகிறார் துஷ்யந்த் தவே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: