அக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
அக்ஷய பாத்ராவின் காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் மாநகராட்சியால் நடத்தப்படும் பல பள்ளிக்கூடங்களில் அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கத் துவங்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. ஏன்?

சென்னை திருவான்மியூரில் இருக்கிறது அக்ஷய பாத்ராவின் உணவு தயாரிக்கும்கூடம். அதிகாலை 3 மணி அளவிலேயே மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த சமையலறை. 'ப்ராட் பான்' எனப்படும் மிகப் பெரிய பாத்திரம் ஒன்றில் ரவா பொங்கலும் மற்றொன்றில் சாம்பாரும் பெரிய அளவில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

காலை ஆறரை மணிக்குள் சமையல் முடிந்துவிடுகிறது. தயாரான பொங்கல், இட்லி, சாம்பார் ஆகியவை வாகனங்களில் ஏற்றப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களை நோக்கிப் புறப்படுகின்றன. "இந்த உணவு சூடு குறையாத பாத்திரங்களில் கொண்டுசெல்லப்படுகின்றன. பரிமாறுவதற்காக திறக்கும்வரை சூடு குறையாது" என்கிறார் அங்கிருக்கும் பணியாளர் ஒருவர்.

திருவான்மியூர் பகுதியில் உள்ள 16 பள்ளிக்கூடங்களிலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த உணவு சென்று சேர்ந்துவிடுகிறது. காலை 8 மணி முதல் 9.15 மணிக்குள் சுமார் 5,100 மாணவர்களுக்கு இந்த உணவுகள் அங்கிருக்கும் சத்துணவுப் பணியாளர்கள், மாணவர்களுக்கு பரிமாறப்பட்டுவிடுகின்றன.

2000வது ஆண்டில் பெங்களூரில் 1,500 குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தின் மூலம் துவங்கப்பட்ட அக்ஷய பாத்ரா என்ற இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் சுமார் பதினெட்டு லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்கிறது. பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, 'இஸ்கான்' எனப்படும் 'இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னஸ்' என்ற வைணவ இந்து அமைப்பின் ஒரு அங்கம்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 4,14,496 மாணவர்களுக்கு இந்த அமைப்பு மதிய உணவை அளிக்கிறது. இந்த மதிய உணவை அளிப்பதற்காக மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியையும் இந்த அமைப்பு பெறுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவளிக்க ஏதுவாக, சென்னை க்ரீம்ஸ் சாலையில் ஒரு பிரம்மாண்டமான சமையலறை கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

அந்த சமையலறையைக் கட்டுவதற்காக ஆளுநரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பணமும் அக்ஷய பாத்ரா அமைப்புக்கு அளிக்கப்பட்டது. க்ரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி நிலத்தில் அமைக்கப்படவிருக்கும் இந்த பிரம்மாண்டமான சமையலறையில் இருந்து, 35 பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த இடம் தவிர, பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் இதேபோல 35,000 சதுர அடியில் மிகப் பெரிய சமையலறை கட்டுவதற்காக மாநகராட்சி ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இந்த அக்ஷய பாத்ரா அமைப்புடன் இதற்கென ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சென்னை மாநகராட்சி கையெழுத்திட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் சமையலறைகள் தயாராகிவிடும்பட்சத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 32 ஆயிரம் மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவை அக்ஷய பாத்ரா வழங்கும்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், மாநகராட்சிப் பள்ளிகளில் தனியார் அமைப்பு ஒன்றை இலவச உணவு வழங்க அனுமதித்தது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்திவரும் மாநிலத்தில் எதற்காக மதம் சார்ந்த ஒரு அமைப்பு இம்மாதிரி உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமெனக் கேள்வியெழுப்பினார்கள்.

பொதுவாக பலரும் இப்போதுதான் அக்ஷய பாத்ரா தமிழ்நாட்டில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்திருப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதியன்று சுமார் 2500 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதன் மூலம் தன் பணிகளை தமிழ்நாட்டில் துவங்கியது அக்ஷய பாத்ரா. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உணவு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 5,090 ஆக உயர்ந்தது.

மதிய உணவுத் திட்டத்திற்கென தமிழ்நாட்டின் சமூக நலத்துறை பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில், அக்ஷய பாத்ரா அமைப்பும் இதேபோல இலவச உணவு வழங்கும் திட்டத்தில் இறங்கியிருப்பது மாநிலத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்தது.

இந்த விவகாரத்தில் குறிப்பாக இரண்டு கேள்விகள் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க வேண்டுமென நினைத்தால், அதனை மாநில அரசாலேயே வழங்க முடியாதா?, அதற்கனெ ஏன் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் கையேந்த வேண்டும் என்று கேட்டார்கள் விமர்சகர்கள்.

அக்ஷய பாத்ரா "சாத்விக" உணவை வழங்குவதால், அதில் வெங்காயம், பூண்டு ஆகியவை இருக்காது. அரசு நடத்தும் பள்ளிகளில் காலை உணவை வழங்க விரும்பும் நிறுவனம், தங்கள் மத அடிப்படையிலான உணவை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கலாமா என்பது இரண்டாவது கேள்வி.

மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்குவதற்கு அக்ஷயபாத்ரா அமைப்புக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷிடம் பிபிசி கேட்டபோது, "இதுவரை எந்த அமைப்பும் மாநகராட்சிப் பள்ளிக்கூட குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்குவதாகக் கூறி முன்வரவில்லை. இந்த அமைப்பு முன்வந்ததால், அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டோம்" என்று தெரிவித்தார்.

காலை உணவு இல்லாமல், உண்ணாமல் வரும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்; இதன் மூலம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய பலன் இருக்கும் என்கிறார் பிரகாஷ்.

நிதி வழங்குகிறதா மாநகராட்சி?

இந்தத் திட்டத்திற்கென மாநகராட்சி எதாவது நிதி அளிக்கிறதா எனக் கேட்டபோது, "இதற்கென மாநகராட்சியிலிருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை" என்கிறார் ஆணையர். ஆனால், சமையலறைகளை அமைத்துக்கொள்வதற்கு ஏதுவாக க்ரீம்ஸ் சாலையிலும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் இரண்டு இடங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

அந்த இடங்களுக்கு அக்ஷய பாத்ராவிடமிருந்து வாடகை வசூலிக்கப்படுகிறதா என்று கேட்டபோது, "ஒரு நல்ல காரியம் செய்பவர்களுக்கு உதவும்விதமாக இதனைச் செய்திருக்கிறது மாநகராட்சி. அவர்கள் சுத்தமான, தரமான காலை உணவை சுமார் 5,100 குழந்தைகளுக்குத் தற்போது தந்துவருகிறார்கள். இது 35,000 குழந்தைகளுக்குத் தருமளவுக்கு விரைவில் விரைவுபடுத்தப்படவிருக்கிறது. அதற்காகவே மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் 10 ஆண்டுக்கு குத்தகை அடிப்படையில் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது" என்கிறார் பிரகாஷ்.

தற்போது ஐந்தாயிரம் - ஆறாயிரம் குழந்தைகளுக்கு உணவளித்துவரும் அக்ஷயபாத்ரா அமைப்பு, இந்த இரு இடங்களிலும் மிகப் பெரிய சமையற்கூடங்களைக் கட்டிய பிறகு, 32 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும் என்கிறார் பிரகாஷ்.

பள்ளிக்கூடங்களில் இந்த உணவை அளிப்பதற்கு முன்பாக, எந்தவிதமான மத சம்பந்தமான நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை, எந்த மத நடவடிக்கைகளும் திணிக்கப்படுவதில்லை என்கிறார் அவர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், அதனை அரசிடம் கேட்கலாமே என்று கேட்டபோது, அதெல்லாம் மாநில அரசு முடிவுசெய்ய வேண்டிய விஷயம். அதைப் பற்றி நான் பேச முடியாது என்றார் பிரகாஷ். அக்ஷய பாத்ரா அமைப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தங்களை உணவளிக்க அனுமதிக்கும்படி கோரிவந்ததாகவும் பிறகு அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, ஏற்றுக்கொண்டதாகவும் மாநகராட்சி தெரிவிக்கிறது.

ஆனால், இந்தத் திட்டத்தின் விமர்சகர்கள் இதனை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அரசு செய்ய வேண்டிய பணியை தனியார் செய்வது சரியல்ல என்கிறார்கள் அவர்கள். "ஒரு மாநிலத்தால் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாதபோது, அதனை மற்றவர்களிடம் கேட்டு செய்யலாம். தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம். மாநிலம் செலவழிக்கும் தொகையில் 63 சதவீதத்தை தாங்களே உருவாக்குகிறார்கள். இம்மாதிரி சூழலில், மாநில அரசு தற்போது காலை உணவு வழங்கவில்லை என்றால், வழங்கச் சொல்லி கோர வேண்டும். அது மக்களின் உரிமை. அதைவிடுத்து, ஒரு மத ரீதியான அமைப்பை வைத்து, உணவை வழங்கச் சொல்வது, அதற்கு ஆளுநர் ஐந்து கோடி ரூபாயை வழங்குவது சரியானதில்லை" என்கிறார் உணவு பாதுகாப்பு குறித்த ஆய்வாளரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன்.

இந்தத் திட்டத்தில் சமூக நீதி அடிபடுகிறது என்கிறார் அவர். அரசிடமிருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு உணவைப் பெறுவது என்பது மக்களின் உரிமை. இப்போது அது தர்ம காரியமாக மாறுகிறது என்கிறார் அவர்.

மாநில அரசு உணவு வழங்காத நிலையில், வேறு ஒரு அமைப்பு உணவை வழங்கினால் அதை ஏற்பதில் என்ன தவறு என்ற கேள்வியே மத்தியதர வார்க்கப் பார்வையிலிருந்து வருகிறது என்கிறார் அவர். "இது முழுக்க முழுக்க மத்தியதர வார்க்கப் பார்வை. பொருளாதரத்தில் உரிமை சார்ந்து அணுகும் விஷயங்கள் இருக்கிறதா இல்லையா? வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பதென்பது போதவில்லை என்பதால் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். அம்மாதிரியான சூழலில் காலை உணவை அரசே வழங்கவேண்டும். மாநில அரசு செய்யவில்லையென்றால் அதைக் கேள்வி கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, யாரோ கொடுக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்வது சரியல்ல. இப்படிச் சொல்பவர்கள் தங்கள் குழந்தையை இந்தத் திட்டத்தில் உணவு பெற அனுப்புவார்களா?" என்கிறார் அவர்.

அக்ஷய பாத்ராவைப் பொறுத்தவரை, பல மாநிலங்களில் உணவு அளிப்பதைப் போலவே தமிழகத்திலும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திவரும் ஒரு மாநிலத்தில், எதற்காக இதனைச் செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, "தமிழக அரசு சிறப்பாக மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதைப் பார்த்துத்தான் நாங்களே ஆரம்பித்தோம். தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்பது எங்கள் விருப்பம். ஆனால், ஏற்கனவே மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருவதால், காலை உணவை வழங்க முடிவுசெய்தோம். இதனை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து துவங்குவதுதான் எளிதாக இருக்குமென்பதால் அதைச் செய்கிறோம். மதிய சத்துணவுத் திட்டத்திற்குள் நாங்கள் தலையிடுவதேயில்லை. அதற்கும் இதற்கும் தொடர்பே இல்லை. கூடுதலாக நாங்கள் காலை உணவு அளிக்கிறோம். அவ்வளவுதான்" என்கிறார் அக்ஷய பாத்ரா அமைப்பின் துணைத் தலைவர் கோதண்டராம தாஸ.

இந்தத் திட்டத்திற்காக அரசு எந்த நிதியையும் அளிக்கவில்லை; சமையல் செய்வதற்கான இடத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்றும் நன்கொடை மூலமாகவே இந்தத் திட்டத்தை செயல்படுத்திவருவதாகவும் கூறுகிறார் கோதண்டராம தாஸ.

அக்ஷய பாத்ரா திட்டம் செயல்பாட்டில் உள்ள பல மாநிலங்களில் குழந்தைகள் இந்த உணவை விரும்பவில்லை என கடந்த ஆண்டு செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், இந்த அமைப்பு வழங்கும் உணவு குழந்தைகளுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை உறுதி செய்வது மிக முக்கியம்.

"குழந்தைகள் வாங்கிய உணவை எந்த அளவுக்கு வீணாக்குகிறார்கள் என்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கிறோம். பிறகு, அவ்வப்போது குழந்தைகளிடமும் கேட்கிறோம். இதனை மனதில் வைத்து குழந்தைகளுக்கான உணவுப் பட்டியலைத் தயாரிக்கிறோம்" என்கிறார்கள் அக்ஷய பாத்ராவைச் சேர்ந்தவர்கள்.

"வெங்காயம் - பூண்டு இல்லாத சாத்வீக உணவு"

அக்ஷய பாத்ரா அமைப்பு இந்தியா முழுவதுமே தனது உணவுத் திட்டத்தில் வெங்காயம் - பூண்டு ஆகியவை இல்லாமல் சமைத்தே வழங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தபோது, கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரபூர்மாக அதற்கு அனுமதியளித்தது அம்மாநில அரசு.

சென்னையில் வழங்கப்படும் உணவிலும் வெங்காயம் - பூண்டு ஆகியவை இல்லாமல்தான் உணவு வழங்கப்படுகிறது.

"உணவில் வெங்காயம் - பூண்டு இருப்பதைவிட சத்துள்ள, சிறப்பான உணவு வழங்குவதுதான் முக்கியம். குழந்தைகளுக்கு சிறப்பான, சத்துணவு வழங்குவதற்கு மத்திய மனித வளத் துறையின் விதிகள் இருக்கின்றன. அந்த விதிப்படிதான் உணவை வழங்குகிறோம். சத்தான உணவு வழங்கவேண்டும் என்பதுதான் முக்கியம். வெங்காயம் - பூண்டு இருப்பது முக்கியமல்ல" என்கிறார் கோதண்டராம தாஸ.

ஜெயரஞ்சனைப் பொறுத்தவரை, வெங்காயம் - பூண்டு உணவில் இருக்கிறதா என விவாதிப்பதே தவறு என்கிறார். "வேறு ஒரு அமைப்பு, வெங்காயம் - பூண்டுடன் உணவை அளிக்கிறது என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாமா? பள்ளிக் குழந்தைகளுக்கு அரசுதான் உணவை வழங்க வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அப்படித்தான் யோசித்தனர். அதுதான் தொடர வேண்டும்" என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில், பூண்டு - வெங்காயம் ஆகியவை சேர்க்கப்பட மாட்டாது என்ற அக்ஷய பாத்ராவின் உணவுக் கட்டுப்பாடு குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, "இது பதில் சொல்வதற்கு தகுதியான கேள்வியல்ல" என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம்

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சத்துணவுத் திட்டம் எம்.ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருக்கும்போது, 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் என துவங்கப்பட்டது. பிறகு இந்தத் திட்டம் அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியன்று நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 செப்டம்பர் 15 முதல் பதினைந்து வயது வரையுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

1989ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூன் 3ஆம் தேதியிலிருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகமானது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து, மதிய உணவுத் திட்டமானது பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து வழங்கப்பட்டது.

2019-20ஆம் ஆண்டில் 43,283 சத்துணவுக் கூடங்களின் மூலம் 49,85,335 குழந்தைகளுக்கு மதிய உணவை தமிழக அரசு வழங்கிவருகிறது. வருடத்தில் 220 நாட்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படுகிறது. தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் வருடத்திற்கு 312 நாட்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் துவங்கி பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை துவங்கியது. அந்தத் திட்டத்தின் கீழ் 1997-98ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில் 8ஆம் வகுப்புவரை இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், 8ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. 9-10ஆம் வகுப்புகளுக்கு மாநில அரசே முழுச் செலவையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த சத்துணவுத் திட்டத்திற்காக மாநில அரசு `1,794.10 கோடி ரூபாயை 2019-20ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்தது.

அக்ஷய பாத்ரா அமைப்பு தனது மதிய உணவுத் திட்டத்தை அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டச் செலவில் மாநில அரசுகள் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கின்றன. வேறு சில பொதுத் துறை நிறுவனங்களும் இந்தத் திட்டத்திற்கென நிதியுதவி செய்கின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், இந்த அமைப்புக்கு நிதி வழங்குகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: