குடியுரிமை திருத்த சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மனு செய்த ஐநா, இந்தியா எதிர்ப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்

பட மூலாதாரம், EPA

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஐ.நா. மனித உரிமை அமைப்பு.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக (அமிகஸ் கியூரி) பங்கேற்க தம்மை அனுமதிக்குமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட் ஜெரியா தலையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ன் நோக்கம் உயர்வானது என்று பாராட்டியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர், ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப அமைந்துள்ளதா என்று ஆராயும்படி தொடரப்பட்டுள்ள வழக்கு, சர்வதேச மனித உரிமை சட்டம் தொடர்பாகவும், குடியேறிகள், குறிப்பாக, அகதிகளுக்கு அந்தச் சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச மனித உரிமை கடமைகளை அமல்படுத்துவது, விளக்கம் கொடுப்பது ஆகியவற்றின் மீது இந்த சட்டம் செலுத்த உள்ள தாக்கத்தின் பின்னணியில் இந்த வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு ஆர்வம் இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனித உரிமைக் கடமைகளில் சட்டத்தின் முன் சமம், பாகுபாட்டுக்குத் தடை ஆகியவையும் அடங்கும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

"குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள் விவகாரம். சட்டங்களை இயற்றுவதற்கான இந்தியாவின் இறையாண்மை உரிமையோடு தொடர்புடையது இது. இந்தியாவின் இறையாண்மை தொடர்பான விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த வெளிநாட்டு அமைப்புக்கும் உரிமை இல்லை. இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகக்கூடியதுதான் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்தியா சட்டத்தால் ஆளப்படும் ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது எங்களுக்கு பெரிய மரியாதை உண்டு. எங்கள் சட்டப்படியான நிலைப்பாடு மதிக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: