“நான் ஒரு இந்து”: ஏன் இப்படி உறுதிமொழி எடுக்க கூறியது சென்னை உயர் நீதிமன்றம்? - விரிவான தகவல்கள்

"நான் ஒரு இந்து" - ஏன் இப்படி உறுதிமொழி எடுக்க கூறியது சென்னை உயர் நீதிமன்றம்?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: "நான் இந்து என உறுதிமொழி எடுங்கள்"

இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் 8 வாரத்தில் சுவாமி சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற செய்தியை இந்து தமிழ் திசை நாளேடு வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ''இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, இந்து சமய அற நிலையத்துறை மற்றும் கோயில்களில் பணிபுரிபவர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையில் பணிக்கு சேரும்போதே செயல் அதிகாரி மற்றும் 2 சாட்சிகள் முன்னிலையில் கோயிலில் உள்ள சுவாமி சிலை முன்பாக நின்று இந்து மதத்தைச் சார்ந்தவன் என்றோ அல்லது இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்றோ உறுதிமொழி எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இந்து சமய அற நிலையத் துறையில் பணியாற்றும் எந்த அதிகாரியும் இதுபோல உறுதிமொழி எடுக்கவில்லை. இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 10-ன்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள் என்றால் அவர்கள் அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர்களாகி விடுவர்.

எனவே இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்," என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, "கோயில் அறங்காவலர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் இந்து எனக் கூறி ஏற்கெனவே உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் அவ்வாறு உறுதிமொழி எடுக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதிமொழி எடுக்க தயாராக உள்ளனர்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி அறநிலையத்துறை யில் பணியாற்றும் அனைவரும் 8 வாரத்தில் இதுதொடர்பான உறுதி மொழியை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களிலும் இந்த உறுதி மொழியை விதிப்படி இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிபவர்கள் மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

டைம்ஸ் ஆஃ ப் இந்தியா - வெறுப்புணர்வு உருவாக்கும் தகவல்கள் பற்றி புகார் அளித்தால் 10,000 ரூபாய் வெகுமதி

பட மூலாதாரம், Reuters

வன்முறையை தூண்டுவதற்கு காரணமாக அமையும் போலி செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் தகவல்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கப் பரிசாக அளிக்க டெல்லி அரசு முடிவு செய்திருப்பதாக 'டைம்ஸ் ஆஃ ப் இந்தியா' நாளேடு செய்தி தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற டெல்லி கலவரத்தின்போது அதிக அளவில் போலி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் தகவல்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதாக பல செய்தி ஊடகங்களும் குறிப்பிட்டன.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதி மற்றும் நல்லிணக்க கமிட்டி, வன்முறையை தூண்டுவதற்கு காரணமாக அமையும் போலி செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் தகவல்கள் குறித்து புகார் அளிக்க ஒரு புதிய வாட்ஸ்அப் எண் மற்றும் இ-மெயில் ஐடியை உருவாக்கியுள்ளது.

இது குறித்து இந்த கமிட்டியின் தலைவர் பரத்வாஜ் கூறுகையில், 8950000946 என்ற வாட்ஸ்அப் எண் எண்ணுக்கும் 'dvscommittee@delhi.gov.in' என்ற இ-மெயில் ஐடிக்கும் புகார் அளிப்பவர்கள் தகவல் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

''இந்தியாவில் முதல்முறையாக வன்முறையை தூண்டுவதற்கு காரணமாக அமையும் வெறுப்புணர்வு செய்திகளை பரப்பும் செய்திகள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு, அவ்வாறு சரியான மற்றும் ஆதாரபூர்வமான வகையில் புகார் தெரிவிப்பவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி: "கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் நாட்டுப்படகுகள்"

படக்குறிப்பு,

கோப்புப் படம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்கு, பாம்பன் பகுதியில் இருந்து செல்லும் நாட்டுப்படகுகளின் தரம் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநா் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் மாா்ச் மாதம் நடைபெறுகிறது. இதில் இலங்கை மற்றும் இந்திய பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வரும் மாா்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7 ஆம் தேதி காலை இந்திய, இலங்கை பக்தா்கள் பங்கேற்கும் கூட்டு பிராா்த்தனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்திய பக்தா்களுக்கு இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட பேராயா் அழைப்பு விடுத்தாா்.

இந்த அழைப்பை ஏற்று ராமேசுவரத்தில் இருந்து செல்ல 3004 பக்தா்கள் பதிவு செய்துள்ளனா். இதில் 75 விசைப்படகுகளில் 2,615 பேரும், 25 நாட்டுப்படகுகளில் 389 பேரும் பயணம் மேற்கொள்கின்றனா்.

இத்திருவிழாவுக்காக பக்தா்களை ஏற்றிச் செல்வதற்காக, பாம்பன் பகுதியில் 25 நாட்டுப்படகுகள் தயாா் நிலையில் உள்ளன. இந்த படகுகளின் தரம் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநா் எம்.வி.பிரபாவதி தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஒவ்வொரு படகிலும் 15 பக்தா்கள் மற்றும் ஒரு படகோட்டி மற்றும் 2 பராமரிப்பாளா்கள் என 18 போ் பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகின் தரம், நீளம், அகலம், உறுதித் தன்மை குறித்து செவ்வாய்க்கிழமை மீன்வளத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். மேலும் விசைப்படகுகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் டி.யுவராஜ், திண்டுக்கல் மீன்வளத்துறை உதவி இயக்குநா் எம்.என்.வேல்முருகன், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா ஏற்பாடுகளை பயணக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் சின்னத்தம்பி, அருள் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினத்தந்தி: "மாவட்ட செயலாளர்களுடன் நாளை ரஜினிகாந்த் சந்திப்பு"

பட மூலாதாரம், Getty Images

நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நாளை (வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்' என்று அறிவித்தார்.

இதையடுத்து அவருடைய ரசிகர் மன்றம், 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.

அதே நேரத்தில் அவர் '2.0.' 'காலா', 'பேட்ட', தர்பார்' என்று வரிசையாக திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது 'அண்ணாத்த' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா பணிகளுக்கிடையே தனது மக்கள் மன்ற பணியையும் அவர் கவனித்து வந்தார். இந்தநிலையில் "ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார்" என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா சமீபத்தில் அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் அவரது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. கோடம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தனித்தனியாக தகவல் அனுப்பி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியை எப்போது தொடங்குவது? கட்சி பெயர், கொடி போன்றவை முடிவு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து களம் இறங்கலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூறும் ஆலோசனைகள், கருத்துகளையும் ரஜினிகாந்த் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதால் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருப்பதால் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்றும், கட்சியின் முதல் மாநாட்டை ஆகஸ்டு மாதம் நடத்துவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: