கொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா? வெயில் அவசியமா? - மருத்துவர் விளக்கம்

கொரோனா வைரஸ் : சிக்கன் சாப்பிடலாமா ? வெய்யில் அவசியமா ?

பட மூலாதாரம், AFP

கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதிப்படுத்தினார்.

கேரளா, தெலங்கானா, ஜெய்ப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ளதும் தெரியவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000. அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சீனா என்றே கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்திய அரசாங்கம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு வைரஸ் பாதிப்பு குறித்து பல கேள்விகள் உள்ளன.

எனவே கொரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள பிபிசி செய்தியாளர் சல்மான் ரவி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ராஜன் ஷர்மாவிடம் பேசினார்.

பட மூலாதாரம், Reuters

கொரோனா வைரஸ் குறித்து இந்திய மருத்துவர் ராஜன் ஷர்மா கூறியவை :

 • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் ஒருவரையொருவர் தொடுவதன் மூலம் பரவுகிறது.
 • ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தவுடன், நோயாளிகள் முதலில் தனிமைபடுத்தப்படுகிறார்கள்.
 • பொதுவாக குழந்தைகளை கொரோனா நோய் பாதிப்பதில்லை.
 • 58 வயதை கடந்த முதியவர்களை தான் கொரோனா நோய் எளிதாக தாக்குகிறது.
 • கொரோனா வைரஸ் பாதிப்பு கிராமப்புரங்களில் பரவுவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது. இது குறிப்பாக நகரத்தில் பரவும் நோய். இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
 • வானிலை மாற்றம் ஏற்படும்போது ​​கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.
 • கொரோனா பாதிப்பை உடனடியாக சரி செய்ய முடியாது. கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரின் உதவியை பெறுங்கள்.

பட மூலாதாரம், AFP

 • எந்த வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் அதை இந்தியாவில் சமைக்கப்படும் உணவு வகைகள் கடுமையாக எதிர்கொள்ளும். கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை.
 • வெயில் காலம் வந்து, வெப்பம் அதிகரித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும்.
 • கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அரசாங்கம் அமைத்திருக்கும் கொரோனா மையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
 • இந்தியாவில் நிறைய மக்கள் கூடும் மத கூட்டங்கள், திருவிழாக்கள் நடைபெறும். ஆனால் இதுவரை எந்த வைரசும் பரவியது இல்லை.
 • கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க மூன்று அடுக்கு முக கவசம் பயன்படுத்தலாம். N51 என்று அழைக்கப்படும் ஒரு வகையான முக கவசமும் அணியலாம். மேலும் சிலர் அணியும் சாதாரண வகை முக கவசமும் பயன்படுத்தலாம்.

கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது ?

கொரோனா வைரஸ் பாதிப்பால் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று மார்ச் 3ம் தேதி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பட மூலாதாரம், Getty Images

இவ்வாறான சூழலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து நொய்டாவின் தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பார்கவாவிடம் பிபிசி செய்தியாளர் குர்பிரித் சைனி கேட்டறிந்தார்.

நொய்டாவின் தலைமை மருத்துவ அதிகாரி அளித்த கூடுதல் தகவல்கள் :

 • சில பள்ளிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 • கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நபருடன் தொடர்பில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்களை பரிசோதித்து பார்த்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
 • பள்ளிகளை எப்படி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சில வழிகாட்டு நடைமுறைகளை சொல்லிக்கொடுத்து வருகிறோம்.
 • இருமல், காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்.
 • இருமல் அல்லது சுவாசப் பிரச்சனைகள் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கண், அல்லது முகத்தில் கை வைத்தால், உடனடியாக கை கழுவ வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: