ஜம்மு காஷ்மீரில் சமூக வலைத் தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றம்

  • அமீர் பீர்ஜாதா
  • பிபிசி
காஷ்மீர் சமூக ஊடகத் தடை.

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இணையத்தின் வேகம் 2ஜி அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை மத்திய அரசால் அகற்றப்பட்டது முதல் அங்கு சுமார் 6 மாதங்களுக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 25ம் தேதி பல நிபந்தனைகளுடன் 2ஜி இணைய இணைப்புகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன. சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டிருக்கும், வெள்ளைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட இணைய தளங்களை மட்டுமே திறக்க முடியும் என்பது போன்றவை அந்த நிபந்தனைகள்.

இன்று புதன்கிழமை வெளியான உத்தரவில் சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டது காஷ்மீரிகளுக்கு பெரிய ஆசுவாசத்தை அளித்துள்ளது. ஆனால், வெள்ளைப்பட்டியல் இணைய தளங்கள் பற்றி அதில் எந்தக் குறிப்பும் இல்லை.

முந்தைய உத்தரவின்படி 1,600 இணைய தளங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலைத்தான் அதிகாரிகள் வெள்ளைப் பட்டியல் என்கிறார்கள்.

சமூக ஊடகத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதும் நிபந்தனையுடன்தான் நடந்துள்ளது. இணைய வேகம் 2ஜி அளவில்தான் இருக்கும், போஸ்ட் பெய்ட் மொபைல் சந்தாததாரர்களுக்கு தொடர்ந்து இணைய சேவை கிடைக்கும். ஆனால், போஸ்ட் பெய்ட் சந்தாதாரர்களுக்கு உரிய வகையில் சரிபார்ப்புகள் செய்யப்பட்ட போஸ்ட் பெய்ட் இணைப்புகளுக்கு மட்டுமே இணைய வசதி அளிக்கப்படும்.

மார்ச் 17 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதற்குள் இது மாற்றியமைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

2ஜி இணைய சேவைகள் கிடைத்த பிறகு பெரும்பான்மை காஷ்மீரிகள் விபிஎன் சேவை மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.

இணைய வேகம் மிகக் குறைவாக இருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் பெரிய பயன் அளிக்காது என்று பல காஷ்மீரிகள் நினைக்கிறார்கள். ஆனால், பலர் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: