பிரதமர் நரேந்திர மோதியின் 5 ஆண்டுகால வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோதியின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு பயணச் செலவு இதுதான்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: பிரதமர் நரேந்திர மோதியின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு பயணச் செலவு

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 446. 52 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2015-16 ஆம் ஆண்டில் பிரதமர் மோதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 121. 85 கோடி செலவிடப்பட்டது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பிரதமர் மோதி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 78.52 கோடி செலவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 99.90 கோடியும், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 100 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 46.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோதியின் வெளிநாட்டு பயணங்களுக்கான விமானச் செலவையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 446 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் கூறப்பட்டிருந்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன், அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறை

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

வங்கியில் ரூ.17.28 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் மற்றும் அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1.11 கோடி அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்வி நிறுவனத்துக்காக வாங்கிய ரூ.17.28 கோடி கடனை முறையாக செலவிடாமல் மோசடி செய்துவிட்டதாக ராமச்சந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் தியாகராஜன், கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜசேகரன், அறக்கட்டளை அறங்காவலரும் முன்னாள் எம்பியுமான ராமச்சந்திரன் ஆகியோர் மீது சிபிஐ 2015-ல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார்.

தினத்தந்தி: "ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைப்பு"

பட மூலாதாரம், ISRO

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஏவும் பணி திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 என்ற ராக்கெட் மூலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தனர்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-

பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஜிசாட்-1 என்ற அதிநவீன சக்தி கொண்ட செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தோம். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 3.43 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கவுண்ட்டவுன் தொடங்குவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. போர்க்கால அடிப்படையில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். மீண்டும் ஏவப்படும் தேதி, நேரம் முறையாக பின்னர் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்து தமிழ் திசை: உன்னாவ் சிறுமி தந்தை கொலை வழக்கில் உ.பி. எம்எல்ஏ குல்தீப் குற்றவாளி

உன்னாவ் சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, சசிபிரதாப் சிங் என்பவரிடம் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று கிராமத்தில் விடுமாறு கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சசி பிரதாப் சிங் தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்தார். இதனால், அங்கு வந்த குல்தீப் செங்காரின் சகோதரர் அதுல் சிங் செங்கார் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணின் தந்தையை தாக்கியதுடன் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். பின்னர், அவர் இறந்தார்.

இது தொடர்பான வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவத்தின்போது காவல் நிலைய போலீஸாரிடமும் பெண்ணின் தந்தைக்கு சிகிச்சையளித்த டாக்டரிடமும் குல்தீப் செங்கார் பேசிய தாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா நேற்று தீர்ப்பளித்தார். கடுமையாக தாக்கப்பட்டதால் பெண்ணின் தந்தை உயிரிழந்தார் என்றும் எனினும் கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை என்றும் கூறிய நீதிபதி, வழக்கில் குல்தீப் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: