கர்நாடகா பா.ஜ.க அமைச்சர் ஸ்ரீராமலு: 1 லட்சம் பத்திரிகைகள், 40 ஏக்கர் திடல், 500 கோடி செலவு - 'ஒஹோ' திருமணம்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி இந்திக்காக
கர்நாடகா பா.ஜ.க அமைச்சர்: 1 லட்சம் பத்திரிகைகள், 40 ஏக்கர் திடல், 500 கோடி செலவு - 'ஒஹோ' திருமணம்

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் பல்லாரி ஸ்ரீராமலு மகள் ரக்‌ஷிதாவின் திருமணம் இன்று (மார்ச் 5) நடைபெற உள்ளது.

ரக்‌ஷிதா ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவி குமாரை மணக்கிறார்.

அமைச்சரின் மகளுக்கு திருமணம் என்பதெல்லாம் ஒரு செய்தியா? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. திருமணம் என்பது செய்தியல்ல... இந்த திருமணத்துக்காக செலவு செய்யப்படும் தொகைதான் விஷயம்.

ஏறத்தாழ 500 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் திருமணம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஏன் 500 கோடி? எதற்கெல்லாம் இவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது? என்று அறியத் தகவல்களைத் திரட்டினோம். கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் மலைக்க வைப்பதாய் உள்ளன. ஆனால், அதே நேரம் 500 கோடியெல்லாம் செலவு செய்யப்படவில்லை என்கிறார் அமைச்சர் ஸ்ரீராமலு.

ஒன்பது நாள் திருமண விழா

திருமணம் மார்ச் 5 தான் என்றாலும் பாரம்பரிய முறைப்படி கடந்த 8 நாட்களாகத் திருமண விழா தொடங்கிவிட்டது. இந்த திருமணத்திற்காக மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

அழைப்பிதழ் என்றால் வெறும் காகிதங்களால் ஆன பத்திரிகை அல்ல. குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம், மஞ்சள் மற்றும் அட்சதை ஆகியவை அடங்கிய பெட்டி அது.

சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் அந்த அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ரெட்டியின் திருமணத்தை விஞ்சுமா?

இதற்கு முன்பு கர்நாடகா மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவரையும் ஈர்த்தது முன்னாள் பா.ஜ.க அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்தான்,

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

இந்த திருமணத்திற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 500 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் 40 - 45 கோடி ரூபாய்தான் செலவாகியதாக அப்போது அமைச்சர் குடும்பம் செய்தியாளர்களிடம் கூறியது.

கர்நாடக அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு ஸ்ரீராமுலுவை தனது சகோதரர் போல ஜனார்த்தன ரெட்டி நடத்தி வருவது தெரியும். ஸ்ரீராமுலு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். இருந்தபோதிலும் தமது சொந்த தம்பிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஸ்ரீராமுலுவுக்கும் அளித்து வருகிறார். இதில் அரசியல் காரணங்களும் இல்லாமல் இல்லை.

சரி மீண்டும் திருமண விஷயத்திற்கே வருவோம்.

இந்த திருமணத்திற்காக எது எதற்கெல்லாம் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பார்ப்போம்.

40 ஏக்கர் நிலம், 300 கலைஞர்கள், 1000 சமையற் கலைஞர்கள்

இந்த திருமணத்திற்காகப் பெங்களூரில் 40 ஏக்கர் நிலம் செப்பனிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வருபவர்களை மகிழ்விக்க 300 கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார்கள். திருமணத்திற்காக செட்டுகள் மட்டுமே 4 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

பெங்களூரில் திருமணம் முடிந்தவுடன் பல்லாரிக்கு வரவேற்பிற்காகச் செல்கிறார்கள்.

அங்குதான் ஒரு லட்சம் பேர் மணமக்கள வாழ்த்த வருகிறார்கள்.

தீபிகா படுகோனேவுக்கு ஒப்பனை செய்யும் கலைஞர்கள்தான் மணமகளுக்கு மேக்-அப் போடுகிறார்கள். முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தினை ஒளிப்பதிவு செய்த புகைப்பட கலைஞர்கள்தான் இந்த திருமணத்தை ஒளிப்பதிவு செய்ய பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

ஒரே நேரத்தில் 7000 பேர் அமர்ந்து உண்ணும் படி இருக்கைகள் போடப்பட்டுள்ளன. உணவு தயாரிக்க மட்டும் 1000 சமையற் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், OFFICE B. SREERAMULU

பட மூலாதாரம், Sreeramalu

விருந்தினர்களுக்காக ஏறத்தாழ அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீராமலு என்ன சொல்கிறார்?

பிபிசியிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீராமலு ஊடகங்கள் மிகையாக எழுதுகின்றன. உண்மையில் 500 கோடியெல்லாம் செலவாகவில்லை என்கிறார்.

பட மூலாதாரம், Sreeramalu

அவர், "எளிமையான முறையில், எங்கள் பாரம்பரிய முறைப்படிதான் திருமணம் நடைபெறுகிறது. ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மையில்லை. அதுமட்டுமல்ல திருமணத்துக்காக நான் செலவு செய்யவில்லை. என் நண்பர்கள்தான் செலவு செய்தனர்," என்கிறார்.

அடுத்த மாதம் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் திருமணம் 54 ஏக்கர் பண்ணையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

காணொளிக் குறிப்பு,

பெண் புரோகிதர் செய்து வைத்த திருமணம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: