ரஜினிகாந்த்: ‘எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அது என்ன?

'எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அது என்ன? - ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை இன்று (வியாழக்கிழமை) சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தியது, அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

சென்னையில் இன்று தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ''எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அது என்ன என்பது குறித்து பிறகு தெரிவிப்பேன்'' என்று கூறினார்.

அரசியல் வெற்றிடத்தை கமலுடன் இணைந்து நிரப்புவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு காலம்தான் பதில் கூறும் என்று குறிப்பிட்டார்.

ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரம் குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் பேசுமாறு தன்னை சந்தித்த இஸ்லாமிய அமைப்பினரிடம் தான் கூறியதாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து செய்தியார்கள் கேட்டதற்கு ரஜினி பதில் கூறவில்லை

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு ஜமா அத்துஉல் உலமா சபை தலைவர் காஜா மொகைதீன் பாகவி, துணைச்செயலாளர் அப்துல் அஜீஸ் பாகவி,இலியாஸ் ரியாஜி உள்ளிட்டோர் நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை எடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குறுதி கொடுத்தார் என ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த இஸ்லாமிய மதகுருமார்கள் தெரிவித்தனர்.

ரஜினியிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கம் தந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: