'கொரோனா வைரஸ் இல்லை' - சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி - Coronavirus Latest Update

கொரோனா வைரஸ்: "28,529 பேர் கண்காணிப்பில்" இந்தியாவில் நடப்பது என்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் இருந்து, கோவிட்-19 தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை என சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளால் பரவலாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதிலும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாளையில் இருந்து மார்ச் 31 வரை டெல்லியில் 5ம் வகுப்பு வரை பயலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோதியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், அதன் உதவி எண்களைப் பகிர்ந்தார் (011 - 23978046).

இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமூடி அணிந்தே வந்தனர்.

இந்தியாவில் மார்ச் 4ஆம் தேதி வரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த சில தகவல்களை தொகுத்துள்ளோம் .

பட மூலாதாரம், Getty Images

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 'கோமிய பார்ட்டி' நடத்த இருப்பதாக இந்து மகா சபையின் தலைவர் சக்கரபாணி மகராஜ் கூறி உள்ளார். அவர், "டீ பார்ட்டிகளைப் போல கோமியம் பார்ட்டி நடத்த இருக்கிறோம். இதில், கொரோனா எப்படி பரவுகிறது என்பதை எடுத்துச் சொல்லப்படும்." என்றார்.
  • நாடாளுமன்றத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியாவில் வைராலஜி லேப் புனேவில் மட்டும் உள்ளதென்றும், இது போன்ற லேபுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
  • மதுராவில் உள்ள இஸ்கான் மையத்திற்கு வெளிநாட்டவர்கள் யாரும் 2 மாதங்கள் வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. வர விரும்புவோர் மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • டெல்லியில் மார்ச் 12 ,13 நடைபெற இருந்த ஆசிய பாதுகாப்பு மன்ற கூட்டம், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

  • பாதி சமைக்கப்பட்ட மீன் மற்றும் கறி உணவுகளுக்குத் தடை விதிப்பதாக லக்னோ மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பிரகாஷ் கூறி உள்ளார்.
  • மேற்கு வங்கத்தில் மோதியின் பெயர் அச்சிடப்பட்ட முகமூடிகளை பா.ஜ.கவினர் மக்களுக்கு வழங்கினர்.
  • இரானில் சிக்கி உள்ள இந்தியத் தொழிலாளர்களை மீட்க இரான் சென்றுள்ளது இந்திய மருத்துவக் குழு. அவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே இந்திய அழைத்து வரப்படுவர் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
  • கொரோனா பாதிப்பிற்கு ஆளானாலும், 2 சதவீதம் மட்டுமே உயிரிழக்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: