டெல்லி மத கலவரம்: உளவுத் துறை ஊழியர் கொலை வழக்கில் தாஹிர் ஹுசேன் கைது

தாஹிர் ஹுசேன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

தாஹிர் ஹுசேன்

பிப்ரவரி மாத இறுதியில் டெல்லியில் நடந்த மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தாஹிர் ஹுசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் சரணடைய வந்திருந்தார்.

எனினும் அவர் சரணடைவதற்கான கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதன் பின் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு டெல்லி மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த இவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டபின், அவர் இருந்த ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உளவுத் துறையில் பணியாற்றிய 26 வயதான அங்கித் சர்மா என்பவர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜாஃப்ராபாத் எனும் இடத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் தாக்குதல் மற்றும் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

இது தொடர்பாக தாஹிர் ஹுசேன் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கித் சர்மாவின் தந்தை ரவீந்தர் சர்மாவும் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். தாஹிர் ஹுசேன் ஆதரவாளர்களே தனது மகனை கொலை செய்ததாக ரவீந்தர் சர்மா அளித்த புகாரின் அடிப்படையிலேயே டெல்லி காவல்துறை தாஹிர் ஹுசேன் மீது வழக்குப்பதிவு செய்தது.

அவர் தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் கும்பல் ஒன்றுடன் செல்வதாக கூறப்படும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவலானது.

"அந்த காணொளியில் பார்ப்பதை சரியாக புரிந்துக் கொள்ளுங்கள். நான் வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அனைவரையும் தடுக்கிறேன். நான் போனில் பேசிக் கொண்டிருப்பதையும் அந்த காணொளியில் பார்க்கலாம்," என்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

படக்குறிப்பு,

தாஹிர் ஹுசேன் (இடது) மற்றும் கொலை செய்யப்பட்ட அங்கித் சர்மா (வலது)

"போலீசை வரச் சொல்லி நான் போனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வாருங்கள், வந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று நானே அவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தேன்," என்றும் தாஹிர் ஹுசேன் தெரிவித்தார்.

தாம் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தாமே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறிய தாஹிர் ஹுசேன், கலவரத்தில் இருந்து காவல்துறையினர் தன்னை மீட்டனர் என்று கூறியிருந்தார். தாங்கள் அவரை மீட்கவில்லை என்று டெல்லி காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்து - முஸ்லிம் மோதல்

பிப்ரவரி 24ஆம் தேதி மாலை ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதல் வடகிழக்கு டெல்லியின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் இந்து - முஸ்லிம் தரப்பினரிடையே மதக் கலவரம் உண்டானது.

வன்முறை தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் "ஜாஃபராபாத் மற்றும் சந்த்பாக் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்ப செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்," என்று தாம் பேசிய காணொளியை பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

""ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்," என்றும் அவர் கூறியிருந்தார்.

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா, கட்சியுடனான மோதலால் 2019இல் பாஜகவில் இணைந்தார்.

2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: