டெல்லி வன்முறை: கலவரத்தின்போது தாக்கப்பட்ட காவல் துறையினர் - வைரலாகும் காணொளி

டெல்லி வன்முறை : காணொளியில் உள்ள காவல் துறையினருக்கு என்ன ஆனது ?

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி இறுதியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த மதக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் ரத்தன் லால் என்ற காவல் துறை அதிகாரியும் உயிரிழந்தார்.

ஆனால் இதுவரை யாருக்கும் ரத்தன் லால் எப்படி உயிரிழந்தார் என்ற விவரம் தெரியவில்லை. காவல் துறையினரும், அவரது குடும்பத்தினரும் நடந்த கலவரத்தில் ரத்தன் லால் பலியானதாக மட்டுமே கூறுகின்றனர். ஆனால் எப்போது, எப்படி உயிரிழந்தார் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் புதன்கிழமை மாலையில் இருந்து, டெல்லியில் நடந்த வன்முறையின்போது பதிவு செய்யப்பட்ட இரண்டு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

அந்த காணொளிகளில் வன்முறையாளர்கள் காவல் துறையினரை தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஏ.என்.ஐ செய்தி முகமையும் இதே காணொளியை வியாழக்கிழமை அன்று வெளியிட்டது இருப்பினும் இந்த காணொளியின் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

பட மூலாதாரம், EPA

ஆனால் காணொளியில் காணப்படும் இடத்தில்தான் ரத்தன்லால் காயம் அடைந்ததாக டெல்லி கோகுல்புரியின் உதவி காவல் ஆணையர் அனுஜ் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில் இருப்பது என்ன ?

1 நிமிடம் 31 வினாடிகள் உள்ள இந்த காணொளி ஒரு வீட்டின் மாடியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியில் மக்கள் சிலர் ஓடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த சமயத்தில் காவல் துறை சீருடை அணிந்த சிலரும் காணப்பட்டனர்.

இந்த காணொளில் காவல்துறையினர் மீது பொது மக்கள் சிலர் கல் எரியும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஒரு கட்டத்தில் வன்முறையில் இருந்து தப்பிக்க காவல்துறையினர் சாலையின் நடுவே மொத்தமாக கூடி நிற்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

காவல்துறையினர் தாக்கப்படுவதைப் பார்த்து, சில போலீசார் சாலையைக் கடந்து மறுபுறம் செல்வதையும் இந்த காணொளியில் காணலாம். இந்த காணொளியில் புர்கா அணிந்த ஒரு பெண்ணையும் காணலாம்.

இந்த காணொளியை பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் காவல் துறை அதிகாரி ரத்தன் லால் இங்குதான் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு காணொளியும் வெளியாகி உள்ளது. அதே இடத்தை மற்றொரு இடத்தில் இருந்து பதிவு செய்துள்ளனர். இதில் காயம் அடைந்த காவல் துணை ஆணையரை ஐந்து அல்லது ஆறு போலீசார் தூக்கிச்செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

வன்முறையாளர்கள் புதருக்கு பின்புறம் உள்ள காவல்துறையினரை கல்லால் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இடையிடையே துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது.

இந்த காணொளியை பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஷ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவில் ''காயம் அடைந்த காவல் துணை ஆணையர் அமித் ஷர்மாவை காவல்துறையினர் காப்பற்ற தூக்கி செல்கின்றனர். ஏழை மக்கள் தடுமாறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, இதே வன்முறையாளர்களால்தான் காவல் அதிகாரி ரத்தன் லால் கொல்லப்பட்டார்,'' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த காணொளி குறித்து டெல்லி காவல்துறையினர் கூறுவது என்ன ?

ஏ.என்.ஐ செய்தி முகமை இந்த காணொளியை காயம் அடைந்த டெல்லி காவல் துறை உதவி ஆணையர் அனுஜ் குமாரிடம் காண்பித்து, காணொளி குறித்து கேட்டது.

காணொளி குறித்து அனுஜ் குமார் கூறுகையில், ''இந்த காணொளியின் காட்சிகள் பிப்ரவரி 24ம் தேதி நடந்தது. வாசிராபாத் சாலையில் பெரும் கூட்டம் திரண்டிருந்தது. வன்முறையாளர்கள் கூடி இருந்தனர். நாங்கள் டி.சி.பி சாரை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் யமுனா விஹார் அழைத்து சென்றோம்,'' என்று தெரிவித்துள்ளார்.

ரத்தன்லால் குறித்து கேட்டபோது, ''ஏற்கனவே இந்த இடத்தில்தான் ரத்தன் லால் காயம் அடைந்திருந்தார். எங்கள் ஊழியர்கள் ஏற்கனவே ரத்தன் லாலை மோகன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் எங்கள் துணை காவல் ஆணையரை கொல்லும் நோக்கத்துடன் பலர் அவரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது'' என்கிறார்.

துணை ஆணையர் எப்படி காயம் அடைந்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ''சாலையின் நடுவே அவர் விழுந்து கிடந்தார். அவர் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த சமயம் யமுனா விஹார் பகுதி மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. எனவே வேறு வழி இன்றி எங்கள் அதிகாரியை நாங்கள் அங்கு அழைத்து சென்றோம். மருத்துவமனையை சுற்றிலும் கூட்டம் இருந்தது,'' என்கிறார் அனுஜ் குமார்.

காவல் துறையினர் பிபிசியிடம் கூறியது என்ன ?

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல் துறை அதிகாரியிடம் பிபிசி பேசியது. இந்த காணொளி குறித்து அவர் கூறுகையில், ''இந்த காணொளியில் உள்ள இடம் சாந்த் பாக் சாலை, இந்த இடத்தில்தான் கோகுல்பூரி காவல் நிலையத்தை சேர்ந்த ரத்தன் லால் தாக்கப்பட்டார்," என்றார்.

பட மூலாதாரம், AFP

காவல் துறையினர் அளித்த தகவலின்படி ஷாதரா பகுதி காவல் துணை ஆணையரை அனைவரும் முற்றுகையிட்டுள்ளனர். உதவி காவல் ஆணையரும் தாக்கப்பட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஐந்து காணொளிகள் கிடைத்துள்ளன. அனைத்து காணொளிகளும் தடயவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையை டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு டெல்லி வன்முறை - எங்கு எப்போது என்ன நடந்தது ?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் போராட்டங்கள் நடை பெற்று வந்தன. இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் பிப்ரவரி 23 - 24 ஆகிய நாட்களில் மிகவும் கடுமையானது.

24ம் தேதி போராட்டங்கள் மிகவும் தீவிரமானது. இந்த வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் பல காவல் துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காவல் துறையினரை வன்முறை நடந்த இடங்களில் அதிகமாக பார்க்க முடியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: