கொரோனோ வைரஸை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாரா?

கொரோனோ வைரஸ்: தமிழ்நாடு எதிர்கொள்ள தயாரா ?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் சுமார் 30 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்நோயை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்களுடன் கூட்டங்களை நடத்தி, நோயை அடையாளம் காண்பது,கட்டுப்படுத்துவது, நோயாளிகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வது, நோய் பரவாமல் தடுப்பது ஆகியவை குறித்து விளக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

எல்லா மாவட்டங்களிலும் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப் படுத்திவைப்பதற்கான வார்டுகளை உருவாக்க வேண்டும் என்றும் மருத்துவமனைக்குள் நுழையும் அனைவரது கைகளும் சானிடைசர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, வெளியேறுபவர்களும் தங்கள் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அந்த சானிடைசர்களில் 70 சதவீதம் ஆல்கஹால் இருக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

எல்லா மாவட்டங்களிலும் காவல்துறை, கல்வித் துறை, உள்ளூராட்சிகள், வருவாய்த் துறை, ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறதா என கண்காணிக்கவும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தவும் பொது இடங்கள் அனைத்திலும் கையைச் சுத்தம் செய்யும் சானிடைசர்கள் இருப்பதை உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும் நோய் தடுப்பு முறைகள், சுகாதாரத்துடன் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் தாக்குதல் 77 நாடுகளில் ஏற்பட்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், இரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்துவரும் பயணிகள் அனைவரும் உடல் சூட்டைக் கண்டறியும் ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

இதற்கென தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையங்களாக உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் தெர்மல் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மார்ச் நான்காம் தேதிவரை, லேசான காய்ச்சலுடன் வந்த 1292 பயணிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 5 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இதுவரை 54 பேருக்கு தமிழ்நாட்டில் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்குதல் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென தமிழக அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. சீனாவுக்குச் சென்று வந்தவர்கள், கண்டிப்பாக 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: