இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல், பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு - கோவையில் பதற்றம்

பதற்றமான சூழலில் கோவை நகரம்

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் புதன்கிழமை நள்ளிரவு அடையாளம் அறியப்படாத நபர்களால் தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கணபதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பதற்றமான இந்த சூழலில் கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் உக்கடம் பகுதியை அடுத்துள்ள ஆத்துப்பாலத்தில், பிப்ரவரி 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் ஒருங்கிணைந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரி‌ஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கடந்த திங்கட்கிழமை முதல் மக்கள் நெரிசல் மிகுந்த காந்திபுரம் பகுதியில் மாலை நேரத் தொடர் போராட்டத்தைத் துவங்கினர்.

முதல் நாளில், போராட்டத்திற்காக ஷெட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அவரை விசாரித்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர் இஸ்லாமியர் எனத் தெரிந்ததும் வாக்குவாதம் செய்யத் துவங்கினர்.

இதற்கிடையில், பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களாக காவல் துறையினரின் பாதுகாப்போடு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம் காந்திபுரத்தில் நடைபெற்று வந்தது.

புதன்கிழமை நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தன், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒலிபெருக்கியில் கோஷமிட்டார். போராட்டம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆனந்தனை, நஞ்சுண்டாபுரம் அருகே மர்ம நபர்கள் பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

ஆனந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து நூற்றுக்கும்மேற்பட்ட இந்து முன்னணியினர் மருத்துவமனையில் கூடினர். மேலும், மருத்துவமனைக்கு வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் வாகனத்தை உடைத்து நொறுக்கினர். இரு மதத்தினரின் தரப்பிலும் அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்கள், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணா, ஆனந்தன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவில்லை என்றால் கோவை அமைதி பூங்காவாக இருக்காது எனவும், இந்து முன்னணி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்று அதிகாலை காவல்துறையினரின் பாதுகாப்பு நகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வந்த சூழலில், கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அனைத்து ஜமா-அத் இயக்கங்கள் சார்பில் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர் சங்கத்தினரும் புகார் மனு அளிித்தனர்.

இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாநகரம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

அதேநாளில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இந்து அமைப்பினரை கண்டித்து கடையடைப்பு நடத்தப்படும் என அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

நாளை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் சார்பில் ஒரே நாளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதையடுத்து, கோவையில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி மற்றும் கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் சென்னையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர்.

மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் கோவை காந்திபுரத்தில் நடைபெற்று வரும் சிஏஏ ஆதரவுப் போராட்டத்தை இன்றோடு நிறுத்திக்கொள்வதாக இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: