டெல்லி கலவரம்: பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் இணைந்த 2 வயது பெண் குழந்தை

டெல்லி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

டெல்லியில் சமீபத்தில் நடந்த மதக் கலவரத்தில் தனது குடும்பத்திடம் இருந்து பிரிந்த இரண்டு வயதாகும் பெண் குழந்தையை, டெல்லி மகளிர் ஆணையம் அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளது.

மதக் கலவரத்தின்போது இந்தக் குழந்தை தனது பெற்றோரிடம் இருந்து பிரிந்ததை ஊடகச் செய்திகள் மூலம் மகளிர் ஆணையம் அறிந்தது.

ஒருவேளை குழந்தையின் பெற்றோரை கண்டறிய முடியாவிட்டால், தாம் அக்குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாக டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் தனிச் செயலர் சவிதா ஆனந்த் விருப்பம் தெரிவித்திருந்தார்.

பின்னர் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் மற்றும் உறுப்பினர் ஃபிர்தௌஸ் கான் ஆகியோர் அக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க ஆணையத்தின் 'மகிளா பஞ்சாயத்து' குழுவினரை அறிவுறுத்தினர்.

அந்தக் குழந்தை கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான முஸ்தஃபாபாத் பகுதியில், கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களின் முகாமில் வசிக்கும் சுகானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்ணுடன் வசித்து வந்தது.

குழந்தையை சரியாக பராமரிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தால் அதிகாரிகளிடம் பெண் குழந்தையதை ஒப்படைக்க மறுத்த சுகானியிடம், மகளிர் ஆணைய உறுப்பினர் ஃபிர்தௌஸ் கான் தாங்கள் குழந்தையின் குடும்பத்தை கண்டுபிடிக்க மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து விளக்கினார்.

கலவரத்தின்போது அந்த குழந்தை மசூதி ஒன்றின் அருகே அமர்ந்துகொண்டு, அதிர்ச்சியான மனநிலையுடன் அழுது கொண்டிருந்தது என்று சுகானி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

காவல் துறையினரை அணுக அச்சமாக இருந்ததால் அவர்களிடம் குழந்தை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர் மகளிர் ஆணையத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சுகானி குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

காவல் துறையினருடன் இணைந்து, முஸ்தஃபாபாத் பகுதியில் வீடு வீடாக சென்ற மகளிர் ஆணையத்தினர் அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.

குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட மசூதியில் இருந்தும் குழந்தை அவர்களிடம் இருப்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் வசிப்பவர்கள் மூலம் இதைக் கேள்விப்பட்ட பெண் குழந்தையின் தந்தை காவல் நிலையத்தை அணுகி தனது குழந்தையுடன் மீண்டும் இணைந்தார்.

கலவரத்தின்போது கூட்டத்தில் பலரும் சிதறி ஓடிய சமயத்தில் குழந்தை அவரிடம் இருந்து பிரிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை தத்தெடுக்க முன்வந்த சவிதா ஆனந்த், பாதுகாத்து பராமரித்த சுகானி ஆகிய இருவருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: