டெல்லி கலவரம்: மருத்துவமனையில் நடந்த திருமணம்; குடும்பத்துக்காக காத்திருக்கும் நாய்
- சிங்கி சின்ஹா
- பிபிசி

அன்றிரவு கனமழை பெய்தது. அந்த இரவு முஸ்தஃபாபாத்தில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து புதுமணப்பெண் ருக்சரை விடுவிக்கும் இரவாக இருந்தது.
வன்முறை காரணமாக அருகில் வசிப்பவர்களால் பிப்ரவரி 26ஆம் தேதி கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துக் கொண்டு, புதிய மணமகள் அந்த மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து வெளியே வந்தார்.
இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கோவிந்த் விஹாரில், மோட்டி என்ற ஒரு நாய் பூட்டியிருந்த வீட்டுக்கு வெளியே காத்திருந்தது.
அவர்களுடைய செல்ல நாய் மோட்டியை அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அந்தக் குடும்பம் திரும்பி வரும் என்று அந்த நாய் இன்னும் காத்திருக்கிறது. அந்த வீட்டை தாங்கள் பாதுகாத்து வருவதாக, அவர்கள் அருகில் வசிக்கும் இந்து ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
தாமும், ருக்சரின் சகோதரர் அம்ஜத்தும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நண்பர்கள் என்று பங்கஜ் தெரிவித்தார். ஆனால், அவர் இப்போது எதிர் தரப்பில் இருக்கிறார். அங்கிருந்து இங்கு வருவதற்கு நேரமாகும். ஆனால் மோட்டிக்கு அவர் உணவளித்து வருகிறார். அவரும் அந்தக் குடும்பம் திரும்பி வருவதற்காக காத்திருக்கிறார்.
"புகலிடம் தந்ததற்காக அவர்கள் என்னையும் மிரட்டினார்கள். அவர்கள் யாரென்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது'' என்று அவர் தெரிவித்தார். "ஆனால் எனக்கு அந்தப் பெண்ணின் அன்பும் மகிழ்ச்சியும் தேவை'' என்றார் அவர்.
மார்ச் 1ஆம் தேதி அறிவிப்பு செய்து, மார்ச் 3 ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வுகளுக்கு, முதலாவது தளத்தில் மணமகன் இன்னும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். 20 வயதான ருக்சருக்கு, இவருடன் திருமணம் செய்வதாக முதலில் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் விநோதமான நேரங்களில் வித்தியாசமான விஷயங்கள் நடக்கின்றன.
வியாழக்கிழமை மாலையில், எப்படியோ சூழ்நிலைகள் மாறின. வானம் வழி விடும்போது இதுபோல மழை கொட்டும், எங்காவது சிங்கத்துக்கும் நரிக்கும் திருமணம் நடக்கும் என்று சொல்வார்கள். அப்போதெல்லாம், நாம் அதுபோன்ற கதைகளை நம்பினோம்.
அந்தப் பெண் சிவப்பு நிற ஷராரா அணிந்திருந்தார். திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த பிங்க் நிற ஆடை அல்ல. அவருக்காக மருத்துவமனை டாக்டர் வாங்கி வந்த ஆடை அது.
பிப்ரவரி 24ஆம் தேதி ஷிவ் விகார் அருகே கோவிந் விஹாரில், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களை கைகளில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியவாறு அவர்களுடைய வீட்டின் கதவை சிலர் தட்டியபோது, அலமாரியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர்.
23 வயதான ஃபெரோஸ், இளம் நீல நிறத்தில் சூட் அணிந்து கருப்பு சாட்டின் சட்டை அணிந்து, அதற்கேற்ற நிறத்தில் டை கட்டியிருந்தார். தனது திருமணத்தை எப்படி கொண்டாடுவது என்று அவருக்குத் தெரியவில்லை. வெகு சீக்கிரமாக அதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். முதலாவது தளத்தில் ஹாலில் இருவரும் அருகருகே நின்றிருக்க, மற்றவர்கள் படங்கள் எடுத்துக் கொண்டனர்.
"அவர்கள் நேசிப்பார்கள். நல்ல ஜோடியாக தெரிகிறார்கள்'' என்று ஒரு பெண் கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரே நல்ல தகவல் என்ற வகையில் அந்தத் திருமணத்தில் பங்கேற்க அந்தப் பெண் வந்திருந்தார்.
ருக்சருக்கு அந்த மணமகனுடன் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. அவருடைய திருமணப் பத்திரிகையில் வேறு பெயர் உள்ளது. மார்ச் 3ஆம் தேதி அவர் மணந்து கொள்ளவிருந்த மணமகன் பிப்ரவரி 29 ஆம் தேதி திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.
வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட போது ஏற்பட்ட வன்முறையில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஒரு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருப்பதாக, காஜியாபாத்தில் உள்ள மணமகனின் குடும்பத்தினரை, பெண்ணின் தந்தை 61 வயதான பான்னே கான் தொடர்பு கொண்டு கூறியதை அடுத்து, திருமணத்தில் இருந்து அவர் பின்வாங்கிவிட்டார்.
தள்ளுவண்டி வியாபாரியான பான்னே கான் மன்னாட் திருமண மண்டபத்துக்கு பதிவு செய்து, ஐந்தாயிரம் ரூபாய் முன்பணமும் செலுத்தியுள்ளார். இனிப்புகளுக்காக ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தியுள்ளார். திருமணத்துக்காக பிங்க் நிறத்தில் லோனியில் இருந்து ஆறாயிரம் ரூபாய்க்கு ஆடைகளை ருக்சரின் தாயார் வாங்கி வைத்துள்ளார்.
ஷிவ் விஹாரில் 9ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட ருக்சர், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகனின் புகைப்படத்தைகூட பார்த்தது இல்லை. அவருக்காக வாங்கப்பட்ட ஆடைகளைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்திருந்தார். எம்ப்ராய்டிங் செய்த இரண்டு சூட்கள் உள்ளிட்டவை அதில் உள்ளன.
ஆனால் வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்த நாளன்று இரவு, 30 ஆண்டுகளுக்கு முன்பு பான்னே கான் கட்டிய அந்த சிறிய வீட்டுக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த வீட்டில் நான்கு அறைகள் உள்ளதாக பான்னே கான் தெரிவித்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் ஒரு நாள் இரவை அவர்கள் கழித்துள்ளனர். இந்துவான அவர்களுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, ருக்சரின் அத்தை உள்பட 16 பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் வேறொரு வீட்டில் மறுநாள் இரவைக் கழித்தனர்.
காவல் துறையினர் வந்து அழைத்துச் செல்லும் வரை அங்கு தான் இருந்துள்ளனர். பிப்ரவரி 26ஆம் தேதி அல் ஹிந்த் மருத்துவமனைக்கு அவர்கள் வந்தனர். வெறும் கால்களுடன் அவர்கள் வந்தனர்.
திருமண ஆடைகளையோ அல்லது விட்டுச் சென்ற மற்ற பொருட்களையோ எடுத்து வருவதற்கு அவர்களால் திரும்பிச் செல்ல முடியவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்துக்கு அது கௌரவம் பற்றிய விஷயமாக இருந்தது. தங்கள் மகளின் திருமணம் நின்று போய்விட்டது.
"அது கௌரவக் குறைச்சலானது. எனவே என் மகளை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று என் சகோதரன் சுட்டானை கேட்டேன்'' என்று பான்னே கான் தெரிவித்தார்.
தன் தந்தையின் வார்த்தையை ஃபெரோஸ் மறுக்க முடியவில்லை. ஆனால் சிறிது கால அவகாசம் தேவை என்று கூறினார். புதிய ஆடைகள், நடனம், நண்பர்கள் என்று ஆடம்பரமாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். Zomato -வில் வீடுகளுக்குச் சென்று உணவை ஒப்படைக்கும் வேலை செய்கிறார் ஃபெரோஸ். குடும்பத்தின் வறுமை காரணமாக 8ஆம் வகுப்புக்குப் பிறகு அவரால் படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது.
அவருடைய குடும்பத்தினர் கிருஷ்ணா நகரில் ஒரு அறை கொண்ட வீட்டில் வாடகைக்குத் தங்கியுள்ளனர். கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் தனக்கும், மனைவிக்கும் இன்னொரு அறையை கட்டியிருப்பார்.
ஆனால், கிடைத்த இரண்டு நாள் அவகாசம், திருமணத்துக்கான சூட் தைத்துக் கொள்வதற்கே போதுமானதாக இல்லை. குடும்பத்தில் நான்கு சகோதரர்களில் மூத்தவர் ஃபெரோஸ். ருக்சரை ஒரு முறை அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டார். அன்றிரவு ருக்சர், ஃபெரோஸுடன் வீட்டுக்குச் செல்வார்.
அல் ஹிந்த் மருத்துவமனையில் ருக்சரின் திருமணம் நடக்கவிருந்த நாளன்று இரவு, மெட்டிகள் மற்றும் மூக்குத்தி வாங்குவதற்கு ஒரு பெண் செவ்வாய்க்கிழமை மார்க்கெட்டுக்கு விரைந்தார். இருபது ரூபாய்க்கு 2 கால் மெட்டிகள், 10 ரூபாய்க்கு ஒரு மூக்குத்தி வாங்கினார்.
எல்லாவற்றையும் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்ட இளம் பெண்ணுக்கு திருமண நேரத்தில், அவளுடைய உடலில் துளி கூட வெள்ளியோ அல்லது தங்கமோ இல்லாமல் இருந்தது 45 வயதான அப்ரோஸ் பானுவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
அருகில் பழகியவர்களை அழைக்க அந்தப் பெண் முடிவு செய்தார். வன்முறையின் போது வீட்டை விட்டு வெளியேறிய ஒரு பெண்ணுக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவுவதற்காக பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து அவர் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்.
ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, காயமுற்றிருந்த ஆண் ஒருவருக்கு அருகில் தடுப்புக்கு அடுத்த பக்கத்தில், கீழ்தளத்தில் அந்தப் பெண் இருந்தார். அவருக்காக வேக வைத்த ஆறு முட்டைகளும், கொஞ்சம் டீயும் கொண்டு வந்திருந்தார். அப்போதுதான் இந்தத் திருமணம் பற்றி கேள்விப்பட்டார்.
நயீம் என்ற ஒரு நகை வியாபாரி கால் மெட்டிகளை அனுப்பி வைத்தார். அவர் பணம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. முஸ்தஃபாபாத்தைச் சேர்ந்த ஷாஹினா ரியாஸ் என்ற பெண் தன்னுடைய தங்க மூக்குத்தியைக் கொடுத்தார்.
இன்னொருவர் வெள்ளி வளையல்கள் வாங்கி வந்தார். இரவு 10 மணிக்கு இவற்றையெல்லாம் பெண்ணிடம் கொடுத்து, இன்னும் இரண்டு நாள் அவகாசம் கேட்டார். சிறிய நிகழ்ச்சி, பெண்ணுக்கு சில பரிசுகள் மற்றும் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.
மார்ச் 3ஆம் தேதி இரவு ருக்சார் பழைய துணிகளை - கிரீம் நிற குர்தாவும், கருப்பு நிற லெக்கின்ஸும் அணிந்து கொண்டார். அப்ரோஸின் கணவர் பழைய இரும்பு வியாபாரம் செய்கிறார். முஸ்தஃபாபாத்தில் வசிக்கிறார்.
"நாங்கள் பணக்காரர்கள் கிடையாது. ஆனால் அந்தப் பெண் எங்கள் பகுதிக்கு வந்திருக்கிறார். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி, நினைவுகளின் புதையல். எனவே அதற்காக சிலவற்றை செய்து தர விரும்பினோம்'' என்று அவர் கூறினார். "இது கஷ்டமான நாட்கள் என்றாலும், எங்களால் முடிந்ததை செய்கிறோம். வாழ்க்கை போய்க் கொண்டே இருக்கும்'' என்றார் அவர்.
அவரால் முடிந்த வரையில் பொருட்களை அவர் சேகரித்தார். மணப் பெண்ணுக்குத் தங்கத் தோடுகள், கொலுசுகள், வளையல்களும், மண மகனுக்கு ஒரு சூட், ஒரு ஜீன்ஸ், டி-சர்ட், பை, பெல்ட், ஒரு துண்டு மற்றும் சென்ட் ஆகிவற்றையும், சில இனிப்புகளையும் வாங்கினார். அதற்கு அதிகம் செலவாகவில்லை.
"அதற்கு எட்டாயிரம் ரூபாய் செலவானது. எங்களால் அதற்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. சந்தோஷமாக அவருக்கு எங்களால் விடை கொடுக்க முடிந்தது'' என்று அவர் கூறினார். "அந்தக் குடும்பத்தை கவனித்துக் கொண்டோம். அவர்கள் அழுது கொண்டே இருந்தார்கள். நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று கூறினோம்.''
தன் சகோதரர் டாக்டர் எம்.ஏ. அன்வருடன் சேர்ந்து மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் மெராஜ் அன்வர், சிறிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மணமகளுக்கு சிவப்பு நிற உடை ஒன்றையும் அவர் பரிசளித்தார்.
அஃப்ரோஸ் பானு
அருகில் இருந்த பெண்கள், செயற்கை கற்கள் பதித்த சில நகைகளுக்கு ஏற்பாடு செய்தனர். சிலர் தங்களுடையதைக் கொடுத்தனர், சிலர் வெளியில் வாங்கிக் கொடுத்தனர். சில பரிசுகள் பழையன, சில புதியனவாக இருந்தன. அருகில் வசிக்கும் ஷாமா அழகுநிலையம் நடத்தி வருகிறார். வன்முறை தொடங்கியதில் இருந்து அது மூடப்பட்டுள்ளது. ருக்சாருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் அவர் இலவசமாக மேக்கப் செய்து கொடுத்தார்.
தனது மூத்த மகளின் திருமணத்துக்கு தன் மகள்கள் அணிந்திருந்த துணிகளை அஃப்ரோஸ் பானு கொண்டு வந்து கொடுத்து, மணப்பெண்ணின் சகோதரிகள் அதை அணிந்து கொள்ளும்படி கூறினார்.
மணமகளின் இளைய சகோதரி ருக்சனா, பச்சை நிற ஷராரா அணிந்து கொண்டார். அது அப்ரோஸின் மகளுடையது. அதில் தங்க நூல் வேலைப்பாடும் சில கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அது நன்றாக இருந்தது என்று அவர் கூறினார். மணமகளின் சகோதரிகள் ஒன்றாகவே அமர்ந்திருந்தனர்.
"அவளுக்கு ஃபிரோஸை பிடித்துள்ளது'' என்று 18 வயதான ருக்சனா கூறினார்.
மணப் பெண் லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு, திருமணத்தில் வித்தியாசமாக உணர்வதாகக் கூறினார். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக திருமணத்தை குடும்பத்தினர் நடத்துவது பிடிக்கவில்லை என்றார்.
"அவர்கள் எங்களிடம் இருந்து பலவற்றை எதிர்பார்த்தனர். இதுபோன்ற சூழ்நிலையிலும், ஆடம்பர திருமணம் நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள்'' என்று அந்தப் பெண் தெரிவித்தார்.
பெண்ணின் தாயார் 60 வயதான ஷாமா பர்வீண், திருமண நாளில் ஆடம்பர உடை எதுவும் அணியவில்லை. அனைத்து பாத்திரங்கள், அலமாரி, படுக்கை மற்றும் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்க கொஞ்சநஞ்ச நகைகள் அனைத்தையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டது குறித்து அவர் சோகமாக இருந்தார்.
"அவள் என்னுடைய 3வது மகள். நாங்கள் திட்டமிட்டிருந்த அதே நாளில் அவளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்று விரும்பினேன்'' என்று அவர் கூறினார். "நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இப்போது போவது இன்னும் ஆபத்தாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.''
கீழ்தளத்தில் டாக்டர் மெராஜ் இக்ரம் மருந்துகளை பிரித்துக் கொண்டிருந்தார்.
"வேறு யாரும் செய்யக் கூடியதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.
ஒருவர் வந்து, அதிக வெளிச்சம் தரும் பல்பை பொருத்திவிட்டுச் சென்றார். புதிதாகத் திருமணமானவர்களை செல்போனில் படம் பிடிக்க அது வசதியாக இருந்தது. ஒரு புறத்தில் சில பாத்திரங்கள், ஒரு காஸ் ஸ்டவ், சில துணிகள் திருமண பரிசுகளாக வைக்கப்பட்டிருந்தன.
விருந்தினர்களுக்கு ரொட்டி மற்றும் குருமா தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பிறகு சீக்கிரமே அனைவரும் சென்றுவிட்டனர்.
வன்முறையால் சூறையாடப்பட்ட இந்தப் பகுதியில் இதுவரை நான் இரண்டு இறுதிச் சடங்குகள், ஒரு திருமணத்தில் பங்கேற்றிருக்கிறேன். எல்லா நாட்களிலும் இங்கு மழை பெய்துள்ளது.
மோட்டியை கண்டுபிடித்து தட்டிக் கொடுக்க நான் விரும்பினேன். ஆனால் அதற்குள் இருட்டாகிவிட்டது. வியாழக்கிழமை அவர்கள் வீட்டுக்கு ஒரு பெண் சென்றார். அது தாமதமான நேரம் என்பதால் மிரட்டல்கள் காரணமாக அவர் திரும்பி வர வேண்டியதாயிற்று.
"இப்போது போக வேண்டாம்'' என்று அந்தப் பெண் கூறினார்.
மோட்டி அங்கேயே காத்திருக்கும். அவர்களின் வீடு பாதுகாப்பாக இருப்பதாக பான்னே கானிடம் நான் கூறினேன். விரைவில் திரும்பிச் செல்லப் போவதாக அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: