திருச்சி கோவிலில் கிடைத்த தங்கக் காசுகள் எந்தக் காலத்தை சேர்ந்தவை?

  • முரளிதரன் காசிவிஸ்வாதன்
  • பிபிசி தமிழ்
தங்க நாணயம்

பட மூலாதாரம், ANI

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் வளாகத்தில் நந்தவனம் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்தபோது, அங்கு பெரும் எண்ணிக்கையில் கிடைத்த தங்கக் காசுகள் ஹைதர் அலி காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

திருவானைக்காவலில் உள்ள புகழ்பெற்ற ஜம்புகேஸ்வரர் கோவிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் பூச்செடிகள் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்யும் வேலைகள் நடைபெற்றபோது, இரண்டு அடி ஆழத்தில் தாமிரத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்தது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்தன.

அந்தக் காசுகளை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 505 காசுகள் இருந்தன. இவற்றில் 504 காசுகள் 3 கிராம் முதல் 3.5 கிராம் வரையிலான எடையும் ஒரே ஒரு காசு மட்டும் சுமார் பத்து கிராம் எடையும் கொண்டிருந்தன. மொத்தமாக இந்தக் காசுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கிலோ 716 கிராம் அளவுக்கு இருந்தன.

மாவட்டக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தக் காசுகளை மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பட மூலாதாரம், IndiaPictures/getty Images

அதன்படி இந்தக் காசுகள், 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. மைசூர் அரசனான ஹைதர் அலியின் காலத்தில் இந்தக் காசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு வகையிலான காசுகள் அந்தக் குடுவையில் இருந்ததாக மாநிலத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரியான டி. தங்கதுரை பிபிசியிடம் தெரிவித்தார்.

அங்கு கிடைத்த 505 காசுகளில் 493 காசுகளின் ஒரு பக்கம் விஷ்ணுவின் உருவமும் மற்றொரு பக்கம் புள்ளிகளும் இடம்பெற்றுள்ளன. இவை டச்சுக்காரர்களாலோ, பிரிட்டிஷ்காரர்களாலோ வெளியிடப்பட்டிருக்கலாம்.

மேலும் 10 காசுகள், ஸ்டார் பகோடா எனப்படும் பிரிட்டிஷ் பகோடா காசுகளாகும். இவற்றில் ஒரு பக்கம் பாதி விஷ்ணு உருவமும் மற்றொரு பக்கம் புள்ளிகளுக்கு நடுவில் நட்சத்திரமும் இடம்பெற்றிருக்கின்றன. இவை பிரிட்டிஷாரால் வெளியிடப்பட்டவை.

ஹைதர் அலி 4 பகோடா காசு ஒன்றும் அந்தக் குடுவையில் கிடைத்தது. இதில் ஹைதர் அலியின் பெயர் பெர்ஷிய மொழியில் நாணயத்தின் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. இது மிக அரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், ANI

ஹைதர் அலி 1 பகோடா காசும் இந்தக் குடுவையில் கிடைத்துள்ளது. இதில் ஒரு பக்கத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். சிவனின் கையில் திரிசூலம் இருக்கிறது. மற்றொரு பக்கம் ஹைதர் அலி பெயரின் முதல் எழுத்தான 'ஹை' என்பது பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த செப்புக் கலயத்தை வைத்து துவக்கத்தில் பலரும் இது சோழர் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் எனத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டதாகக் கூறுகிறார் தங்கதுரை.

"இந்தக் காசுகள்ஹைதர் அலியின் காலத்தை சேர்ந்தவை. ஆனால், இவை சமீபத்தில்கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அந்தக் கலயம் சமீபத்திய கலயம்தான்" என்கிறார் தங்கதுரை.

ஹைதர் அலியின் பெயர் பொறிக்கப்பட்ட காசுகளைத் தவிர, பிற காசுகள் அந்த காலகட்டத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் அவை பிரிட்டிஷ்காரர்களாலோ, டச்சுகாரர்களாலோ அடிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் நாணயவியல் ஆய்வாளரான மன்னர் மன்னன்.

பட மூலாதாரம், Ani

முன்பு புழக்கத்தில் இருந்த காசுகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் இருந்ததால், பெரும்பாலான அரசர்கள், ஆட்சியாளர்கள் இந்துக் கடவுள்களின் உருவங்களுடனேயே காசுகளைப் பதிப்பித்தனர் என்கிறார் அவர். இந்தக் காரணத்தினாலேயே ஹைதர் அலி காலத்துக் காசில் ஒரு பக்கம் சிவனின் உருவும் இடம்பெற்றுள்ளது. ஆற்காடு நவாப் அடித்த காசுகளில் விநாயகரின் உருவம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

இப்போது இது தொடர்பான அறிக்கை தொல்லியல் துறையின் செயலர் டி. உதயச்சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய புதையல் சட்டம் 1878இன் கீழ் இந்த நாணயங்கள் தொல்லியல் துறையில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவை சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுமெனத் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: