கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவரை தாக்கியது: இந்தியாவில் எண்ணிக்கை 34 ஆனது

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த அமெரிக்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை 34 ஆகியுள்ளது.

தமிழகத்தில் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிய நபர் ஓமனில் இருந்து சமீபத்தில் வந்தவர். இது தவிர லடாக்கில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 34 ஆகியுள்ளது என்று இந்திய அரசின் சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

மூவரின் உடல் நிலையும் ஸ்திரமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் தனிமை வார்டில்

இது குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தபோதும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது. பொது மக்கள் யாரும் அஞ்சவேண்டாம்" என தெரிவித்தார். 45 வயதான அந்த நபர் ஓமனில் இருந்து சென்னை வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை தொடங்கிய பிறகு இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1077 பேர். தமிழகம் முழுவதும் தத்தமது வீடுகளிலேயே வைத்து அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

சிக்கிம், சிக்கிம் பூட்டானில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை

மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலம் மற்றும் பூட்டானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தடை உத்தரவு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சிக்கிம் மற்றும் பூட்டானிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிக அளவில் இருக்கும். எனவே இந்த தடையால் சுற்றுலா துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் சீனாவே எல்லையாக இருப்பதும் இந்த தடைக்கு முக்கிய காரணம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பூட்டானிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்கப் பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதால், இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமெரிக்க பயணி, பூட்டானின் திம்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் பூட்டானிற்கு வரும் முன்பு அசாம் மாநிலத்தில் சில நாட்கள் தங்கியுள்ளார்.

இந்திய அரசின் இந்த தடை உத்தரவால், 78 வெளிநாட்டு பயணிகள் ராங்போ மற்றும் நேபாளத்தின் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மணிப்பூருக்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால், கொரோனா குறித்து பரிசோதனை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என மணிப்பூர் சுகாதாரத் துறை இயக்குனர் ரஜோ சிங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பயன்படுத்துவதற்கும் மணிப்பூர் மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஹோலியை ரத்து செய்த உ.பி. ஆளுநர்

உத்தரப் பிரதேச ஆளுநர் அனந்திபென் படேல் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மார்ச் 9ம் தேதி கொண்டாடப்படவிருந்த ஹோலி பண்டிகையை ரத்து செய்துள்ளார், என பி.டி.ஐ செய்தி முகமை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தையும், பெரும் திரளாக மக்கள் கூடும் விழாக்களையும் தவிர்ப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது எனவே சிகிச்சை மேற்கொள்வதை விட நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்திருந்தார்.

மேலும் சமூக கூட்டங்களில் கலந்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அவரவர் தங்கள் குடும்பத்தினரை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் முதல்வர் கூறினார். ஆனால் மார்ச் 10ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: