''தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் 'ஏசிம்ப்டமாட்டிக்' நிலையில் இருக்கிறார்''

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
''தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் 'ஏசிம்ப்டமாட்டிக்' நிலையில் இருக்கிறார்''

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர் 'ஏசிம்ப்டமாட்டிக்' (Asymptomatic) நிலையில் இருக்கிறார் என தமிழக சுகாதார துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன வகையான உணவு வழங்கப்படுகிறது என்றும் சிகிச்சைகளுக்கு அவரது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம்.

''பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் நலமாக உள்ளார். அவர் 'ஏசிம்ப்டமாட்டிக்' நிலையில் இருக்கிறார்,'' என அமைச்சர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஏசிம்ப்டமாட்டிக் நிலை என்றால் என்ன என நாம் மருத்துவர்களிடம் கேட்டோம். மருத்துவர் ரவீந்திரநாத் கூறியதாவது: பாதிக்கப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்டடத்தில் முழுமையான அறிகுறிகள் தென்படாது. ஆனால் நோய் தொற்று கிருமி அவரது உடலில் இருக்கும். பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தி அவரை ஒரு சில நாட்கள் வரை காப்பாற்றும்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் நோய் கிருமி அவரது உடலில் இருப்பதால், அவரால் பிறருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் அவரோடு, தொடர்பில் இருந்தால், அவரது கைகள், சளி அல்லது எச்சில் படுவது போன்ற சூழலில் இருந்திருந்தால், மக்கள் நோயாளியாகும் வாய்ப்புள்ளது.

ஏசிம்ப்டமாட்டிக் நபரிடம் தெளிவான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கிருமி இருப்பதை கண்டறியமுடியும் என்பதால்தான் தற்போது ஒரு நபர் கண்டறியப்பட்டுள்ளார்.

ஒரு சிலசமயம், ஏசிம்ப்டமாட்டிக் நபரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து, அதேநேரம், அவரது மரபணுவில் நோய் தொற்றை எதிர்க்கும் வீரியம் இருந்தால், அந்த நபருக்கு பாதிப்பு குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

எடுத்துக்காட்டாக, வௌவ்வால் போன்ற உயிரினங்கள் பலவகையான வைரஸ் கிருமிகளை தன்னகத்தே வைத்திருந்ததாலும், அவை பாதிப்படையாமல், கிருமியை மட்டும் பரப்பும். தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர் ஏசிம்ப்டமாட்டிக் நபர் என்பதால், அவரிடம் மற்றவர்கள் அதீத பாதுகாப்போடு இருக்கவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: