கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு - இந்தியாவில் எண்ணிக்கை 39ஆக உயர்வு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, "தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் தனித்தனி அறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் மூவர் சமீபத்தில் இத்தாலியில் இருந்து கேரளா வந்தவர்கள், மற்ற இருவர் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் மொத்தம் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிய நபர் ஓமனில் இருந்து சமீபத்தில் வந்தவர். இது தவிர லடாக்கை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் தனிமை வார்டில்…

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தபோதும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது. பொது மக்கள் யாரும் அஞ்சவேண்டாம்" என தெரிவித்தார். 45 வயதான அந்த நபர் ஓமனில் இருந்து சென்னை வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை தொடங்கிய பிறகு இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1077 பேர். தமிழகம் முழுவதும் தத்தமது வீடுகளிலேயே வைத்து அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

சிக்கிம், பூட்டானில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலம் மற்றும் பூட்டானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தடை உத்தரவு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சிக்கிம் மற்றும் பூட்டானிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிக அளவில் இருக்கும். எனவே இந்த தடையால் சுற்றுலா துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் சீனாவே எல்லையாக இருப்பதும் இந்த தடைக்கு முக்கிய காரணம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பூட்டானிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்கப் பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதால், இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :