"விளையாட்டில் இந்தியா பெரிய சக்தியாக மாறும்": பிபிசி விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கிரண் ரிஜிஜூ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரண் ரிஜிஜூ

விளையாட்டில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக வருங்காலத்தில் உருவெடுக்கும் என்று இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பிபிசியின் 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் பேசினார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 'பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பி.வி சிந்து, இதுவரை ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் சிந்துதான்.

பிபிசி விருது வழங்கும் விழா புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அதில், பிரபல விளையாட்டு பிரமுகர்கள், விளையாட்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றார்கள்.

இந்திய விளையாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும், விளையாட்டில் இளம் தலைமுறையினருக்கு ஊக்க சக்தியாக விளங்கி வருவதற்காகவும், மூத்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்ப உள்ளோம் என்பதில் தான் உற்சாகமாக உள்ளதாக கூறினார்.

"2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குள் இந்தியா பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய குறிக்கோளை முதலாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்திய பிரதமரின் ஆசைப்படி, இந்தியாவை விளையாட்டில் மிகப்பெரிய சக்தியாக உருவாக்குவோம். அனைத்து வீரர்களுக்காகவும், என் முகவரியின் கதவுகள் திறந்தே இருக்கும்" என்று கூறுகிறார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

படக்குறிப்பு,

பிபிசியின் தலைமை இயக்குநர் டோனி ஹாலுடன் இந்தியாவின் மூத்த தடகள வீராங்கனை பி.டி.உஷா

இந்தியாவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய கிரண், "நம் நாட்டில் பல ஆண்டுகளாக விளையாட்டிற்கான பாரம்பரியம் இருந்தாலும், அதை ஒரு கலாசாரமாக இந்தியாவில் இன்னும் நம்மால் கொண்டுவர முடியவில்லை. கடந்த 3 மாதங்களில், கேலோ இந்தியா விளையாட்டுகளை நாங்கள் ஒருங்கிணைத்தோம். முதன்முறையாக காஷ்மீரில் கேலோ இந்தியா நிகழ்ச்சிகள் குல்மர்கில் நடந்து வருகிறது. எங்களிடம் திறமையானவர்கள் இருக்கிறார்கள். விளையாட்டை ஒரு வேலை வாய்ப்பாக உருவாக்க வேண்டும். எந்த ஒரு இந்தியர், இந்தியாவிற்கு விளையாடி இருந்தாலும், அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கான தேவைகளை அரசு பார்த்துக்கொள்ளும்" அவர் மேலும் கூறினார்.

குடும்பம் மற்றும் பிபிசிக்கு அடுத்து தனக்கு விளையாட்டில்தான் பேரார்வம் என்று கூறிய பிபிசி உலக சேவையின் இயக்குநர் ஜெமி ஆங்கஸ், பிபிசியின் இந்திய மொழி சேவைகளின் செயல்பாடு சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிபிசியின் தலைமை இயக்குநர் டோனி ஹால், இந்தியாவின் விளையாட்டுத்துறையில் பெண்களின் செயல்பாடு குறித்து பிபிசி தொடர்ந்து பதிவு செய்யும் என்று உறுதியளித்தார்.

"இன்றிரவு நான் சத்தியம் ஒன்றை செய்கிறேன். இனி பிபிசி இந்தியாவில் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை பற்றி நிறைய பேசும். இன்றிரவு விளையாட்டில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் மற்றும் உத்வேகத்தை கொடுக்கும் ஒரு பாரம்பரியத்தை நாம் விட்டு வைக்க உள்ளோம்" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :