கொரோனா வைரஸ்: மங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தலைமறைவு?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தப்பித்ததையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவுடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர் உடனடியாக விமானநிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகளை பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

''எங்கள் கண்காணிப்பு குழு அவரது வீட்டுக்கு போலீசாருடன் சென்று மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது'' என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அதிகாரியொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே, கேரளாவில் 3 வயது சிறுவனை கொரோனா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

இந்த மூன்று வயது குழந்தை பெற்றோர்களுடன் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு, கடந்த மார்ச் 7 ஆம் தேதி கொச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்ததால், குழந்தை மற்றும் பெற்றோர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி குட்டப்பன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், மூவர் சமீபத்தில் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டவர்கள் என்று கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா கூறுகிறார். மார்ச் 3ம் தேதி இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் இரானில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டது.

''தமிழகம் வந்த அமெரிக்க சிறுவனுக்கு கொரோனா இல்லை''

அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்த 15 வயது சிறுவன் மற்றும் அவனது உறவினர் ஒருவருக்கு கொரோனா உள்ளதா என சோதனை செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இருநபர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது, இது ஒரு நல்லசெய்தி என தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று இல்லை என்ற போதும், அவர்கள் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஓமான் நாட்டில் இருந்து வந்த ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 60 நபர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 நபர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என முன்னர் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாளில் சுமார் 57 விமானங்கள் மூலமாக 8,500 பயணிகள் தமிழகம் வருகிறார்கள் என்பதால் விமான நிலையங்களில் தொடர்ந்து மருத்துவ குழுவினர் செயல்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 63 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இவர் மட்டும்தான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சில நாட்களுக்கு முன்பு இரானுக்கு பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பயணம் மேற்கொண்ட இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பி டி ஐ செய்தி முகமை கூறுகிறது.

புவனேஷ்வரில் பரிசோதனை கூடம்

ஒடிசா மாநில அரசாங்கம் புதிதாக கொரோனா வைரஸ் பரிசோதனை கூடம் ஒன்றை துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருந்து அனுப்பப்படும் பரிசோதனை மாதிரிகள் என அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இதுவரை ஒடிசாவில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரிசோதனை வசதிக்காக இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது என ஒடிசாவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: