கொரோனா குறித்த வதந்திகள், கதைகள் எந்த அளவுக்கு உண்மை? - டாக்டர் குழந்தைசாமி விளக்கம்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
கொரோனா குறித்த வதந்திகள், கதைகள் எந்த அளவுக்கு உண்மை

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் 80 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் தாக்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த வைரஸ் குறித்த வதந்திகள் குறித்தும் தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

அதிலிருந்து:

கே. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எப்படிச் செய்யப்பட்டுள்ளன?

ப. சீனாவின் வுஹானில் கொரோனா பரவ ஆரம்பித்தவுடனேயே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, எல்லா மாநில அரசுகளுமே அந்நோயை அவரவர் மாநிலத்தில் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக செய்ய ஆரம்பித்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜனவரி மாதம் முதலே அந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வரக்கூடிய வெளிநாட்டுப் பயணிகளில் யாராவது சீனாவுக்குச் சென்றுவந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

சீனாவுக்குப் பயணம் செய்தவர்களாக இருந்தால், அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை பெறப்படுகிறது. அவர்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதோ, இல்லையோ அடுத்த 28 நாட்களுக்கு அவர்களை கண்காணிக்கிறோம். யாருக்காவது இருமல், காய்ச்சல் வந்தால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனிமையறையில் சிகிச்சையளிக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

இன்று 80க்கும் மேற்பட்ட நாடுகளில், கடுமையான நடவடிக்கைகளையும் தாண்டி இந்த நோய் பரவியிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் தமிழ்நாடு உட்பட சிலருக்கு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் இருப்பதைக் கண்டறிவதற்கான வசதி சென்னையில் உள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டிட்டியூட்டில் இருக்கிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் இந்நோய் தாக்கியவர்கள் இருந்தாலும் தடுப்பு முறைகள் கடுமையாக இருப்பதால்தான் இந்நோய் பரவாமல் இருக்கிறது.

கே. இந்த நோய் பரவுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ப. இதற்கு சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் வாயை மறைத்துக்கொள்ள வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் வெளியாகும் நோய்க் கிருமிகள் எளிதில் எதிரிலிருப்போரைத் தொற்றும்.

அடுத்ததாக கைகளின் சுகாதாரம். பல சமயங்களில் மற்றவர்களின் மூச்சு நம் கைகளில் படுகிறது. நாம் பல இடங்களைத் தொடுகிறோம். ஒருவர் இந்த வைரஸால் தாக்கப்பட்டிருந்தால், அவர் கைவைத்த இடத்தில் நாமும் கையை வைத்து, அவற்றை வாய், மூக்கு, கண் ஆகியவற்றைத் தொடும்போது நமக்கும் அந்த நோய் பரவுகிறது. இதனால், பள்ளிக் கல்வித் துறை, கல்லூரி கல்வித் துறை ஆகியவற்றின் மூலம் கை கழுவுவது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவதாக, தேவையில்லாத வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. வயதானவர்கள், வேறு நோய்கள் - சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் - உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இந்நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும்.

இறந்தவர்களின் பின்னணியை எடுத்துப் பார்த்தால், இம்மாதிரி மிகச் சிக்கலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்கனவே இருப்பவர்கள்தான் கொரோனா தாக்கி இறந்திருக்கிறார்கள். ஆனாலும்கூட சீனாவில் இறப்பு விகிதம் 2 சதவீதம்தான். சீனாவுக்கு வெளியில் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 0.2 சதவீதம்தான். இது எபோலா வைரசைப் போல மிகக் கொடிய வைரஸ் கிடையாது. சார்ஸ், மெர்ஸ் நோய்கள் தாக்கியபோது, இறப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆனால், இறப்புகள் அந்த அளவுக்கு இல்லை.

இதனால், தேவையில்லாமல் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதே நேரம் கவனக்குறைவாகவும் இருக்கக்கூடாது. வீடுகளில், பொது இடங்களில் கைகள் படும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஹைட்ரோ குளோரிக் கரைசல், லைசால் கரைசல் ஆகியவற்றை வைத்து, துடைக்கும் பழக்கம் வரவேண்டும்.

பட மூலாதாரம், iStock

தவிர, குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக்கூடாது. கைகுலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்துவிட்டு, வணக்கம் சொல்லலாம். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதையும் தாண்டி சந்தேகம் இருந்தால், தமிழக பொது சுகாதாரத் துறை 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்றை இயக்கிவருகிறது. 104 என்று எண்ணுக்கு அழைத்து பேசலாம்.

கே. இந்த நோய் சீனாவைத் தவிர உலகின் பல நாடுகளுக்கும் பரவிவிட்ட நிலையில், சீனாவுக்குச் சென்றுவந்தவர்களை மட்டும் பரிசோதித்தால் போதுமா?

ப. சீனா உட்பட மொத்தமாக நாடுகளுக்குச் சென்றுவந்த பயணிகள் இப்போது கண்காணிக்கப்படுகிறார்கள். சீனா, ஜப்பான், ஈரான், தென் கொரியா, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு சென்றுவந்தவர்கள் வீடுகளில் வைக்கப்பட்டே கண்காணிக்கப்படுகிறார்கள். இப்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எந்தப் பயணியாக இருந்தாலும் கைகளைச் சுத்தம் செய்யச் சொல்கிறோம்.

தெர்மல் ஸ்கேன் செய்கிறோம். நோய்க் குறிகள் இருந்தால் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கிறோம். மேலே சொன்ன ஐந்து நாடுகளில் இருந்து வந்தவர்களை, நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்காணிக்கிறோம்.

கே. இந்தியாவிலும் பல மாநிலங்களிலும் நோய் பரவிவிட்ட நிலையில், விமான நிலையங்களை மட்டும் கண்காணிப்பது போதுமானதா?

ப. ரயில்கள் எல்லாமே கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும்படி கூறப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இரவில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும்படி கூறப்படுகின்றன. தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

கே. கொரோனொ நோயை பரிசோதனை செய்யக்கூடிய வசதி தற்போது தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது. பிற நகரங்களில் இல்லாதது ஏன்?

ப. தற்போது இந்த வசதி சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் ரத்த மாதிரிகளை எடுத்து, அதனை இதற்கென உள்ள பாதுகாப்பான பெட்டியில் வைத்து கிங் இன்ஸ்ட்டிடியூட்டிற்கோ பூனேவுக்கோ அனுப்பி பரிசோதிக்கும் வசதி எல்லா ஊரிலும் உண்டு.

தவிர, எல்லா ஊரிலும் இம்மாதிரி ஆய்வகங்களை வைக்கக்கூடாது. இவையெல்லாம் அபாயகரமான கிருமிகள். அவற்றை எல்லா ஊரிலும் வைப்பது பாதுகாப்பானது அல்ல.

கே. இந்த நோய் அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் செல்ல வேண்டுமா அல்லது தனியார் மருத்துவமனைகளையும் நாடலாமா?

ப. இப்போதைக்கு, அரசு மருத்துவமனைகளைத்தான் நாட வேண்டுமென சொல்லியிருக்கிறோம். ஆனால், பெரிய தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென சொல்லியிருக்கிறோம். ஆனால், தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் இதுவரை ஏற்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இது ஒரு புதுவகையான நோய்த் தாக்குதல் என்பதால் அரசு மருத்துவர்களுக்கும் தனியார் மருத்துவர்களுக்கும் இது தொடர்பாக விளக்கங்களும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. எவ்வித சூழல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க முடியும்.

கே. தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருப்பதால், இந்நோய் இங்கு தாக்குப்பிடிக்க முடியாது என செய்திகள் பரப்பப்படுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை.

ப. வெயில் இருக்கும் இடத்தில் அந்த கிருமி உயிர்வாழும் கால அளவு குறையும். இயற்கையான வெளிச்சம் இருக்கக்கூடிய இடங்களில் கால அளவு குறையும். குளிர்ச்சியான இடங்களில், மூடப்பட்ட இடங்களில் இந்தக் கிருமி உயிர் வாழக்கூடிய கால அளவு அதிகம். ஆனால், அதற்காக வெயில் காலத்தில், வெயில் அடிக்கும் நாட்டில் இந்தக் கிருமி பரவாது என நாம் இருந்துவிட முடியாது.

வெயில் காலத்திலும் ஜலதோஷம் பிடிக்கிறது. மொத்தம் 28 வகையான கிருமிகள் சாதாரண சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. இதில் நான்கு வகைகள் கொரோனா பிரிவைச் சேர்ந்தவை. வெயில் அதிகம் அடிக்கும் நாட்டில் இந்தக் கிருமி செயல்படாது என்றால், சாதாரண சளி, இருமல் வராமல் இருக்க வேண்டுமே? அதனால், நாம் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.

கே. இந்த நோய்க்கு நாட்டு மருந்தாக, பலவற்றைச் சொல்லி, அவற்றைச் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்கிறார்களே.. அது சரியா?

ப. இது மாதிரியான நேரத்தில் இப்படி பலரும் கூறுவது வழக்கம்தான். ஆனால், அரசு ஊடகங்களின் மூலமும் அறிக்கைகள் மூலமும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதனால், இந்த போலிச் செய்திகள் பெரிதாக எடுபடவில்லை. அதனால், இம்மாதிரியான செய்திகளை பிறருக்கு பரப்பக்கூடாது.

பட மூலாதாரம், Getty Images

இன்னொரு தகவலையும் இந்தத் தருணத்தில் சொல்ல வேண்டும். 1920-30களில் மெக்ஸிகோ நாட்டில் பன்றியிலிருந்து மனிதர்களுக்கு பரவிய ஒரு கிருமி மூலம் எச்1என்1 காய்ச்சல் ஏற்பட்டது. பிறகு, இது மனிதர்களுக்கு நடுவில் பரவ ஆரம்பித்தது. ஆனால், இப்போதும் அந்த நோயை பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கிறோம். அதேபோல, இந்த கொரோனா நோய், மீன்களில் இருந்து, வூஹானில் வேறு மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் வேறு மிருகங்களுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இல்லை. மனிதர்களுக்கு நடுவில், இருமல், தும்மல்,கைகள் மூலம்தான் இப்போது பரவுகிறது.

அதனால், கோழிக்கறி, ஆட்டுக்கறி சாப்பிட்டால் கொரோனா வந்துவிடும் என சொல்வது தவறு. இப்படி வதந்திகளை பரப்புபவர்கள் மீது அரசு தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கும்.

கே. இந்த நோயைத் தடுப்பதில், முகத்தில் அணியும் 'மாஸ்க்' எந்த அளவுக்கு உதவியாக இருக்கும்? எம்மாதிரி மாஸ்க் தேவை?

ப. முதலில் மாஸ்க் யாருக்குத் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க மாஸ்க் அணியலாம். மருத்துவர்களைப் பொறுத்தவரை, சளி, இருமல், காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா, டியூபர்குளோசிஸ் நோய் தாக்கியவர்களைப் பரிசோதிக்கும்போது மாஸ்க் அணியலாம். அங்குள்ள செவிலியர்கள், சுகாதாரப் பணியார்களும் மாஸ்க் அணியலாம். அதுவும், மூன்று அடுக்குகளைக் கொண்ட மாஸ்க் போதுமானது.

சார்ஸ், மெர்ஸ், கொரோனா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அந்த நோயாளி ஆகியோர் மட்டும் என்-95 மாஸ்க் அணிந்தால் போதுமானது. எல்லோரும் என்-95 மாஸ்க்கை தேடி அலைவது தேவையற்றது.

பட மூலாதாரம், Getty Images

மாஸ்க் அணிவதில் காட்டும் கவனத்தை, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதிலும் காட்ட வேண்டும். இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த மாஸ்க் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமில்லை. அப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. இதற்கு நடுவில், மாக்ஸ், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை சிலர் பதுக்கிவைப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால், மருத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி மூலம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கே. இந்த கொரோனொ தாக்குதலுக்கு அல்லோபதி எனப்படும் நவீன மருத்துவத்தில்தான் வைத்தியம் இருக்கிறதா அல்லது மாற்று மருத்துவமுறைகளில் ஏதாவது சிகிச்சை உண்டா?

ப. மாற்று மருத்துவத்தில் இதைக் குணப்படுத்த முடியுமா என்பதை இப்போது ஆய்வுசெய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் மாற்று மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆங்கில மருத்துவத்தைப் பொருத்தவரை, இதைக் காய்ச்சலுக்கான மருந்துகளைக் கொண்டு சரி செய்ய முயல்வோம். மேலும், அந்தத் தருணத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அன்டி - பயோடிக் மருந்துகள் அளிக்கப்படும். நீர் இழப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்ததாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் கொடுக்கப்படும். அதற்கும் மேலே சென்றால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்படும். இவற்றை வைத்து ஒருவாரம் வரை சமாளித்தால், உடல் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும். கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும். நோய் பாதித்தவர்களில் நூற்றில் 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டியவர்கள். அதில் 2 பேருக்கு மட்டுமே நிலைமை மோசமாகும். ஆகவே பொதுமக்கள் தேவையில்லாத பீதியடைய வேண்டாம்.

Fake news about Corona virus ; கொரோனா வதந்திகளும், விளக்கமும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: