நித்யானந்தா ஆசிரமம்: சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை: போலீஸ் மீது வழக்கு பதிவு

காய்ச்சல் இருக்கிறதா? - "திருமலைக்கு வராதீர்கள்": திருப்பதி தேவஸ்தான அதிகாரி

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "நித்யானந்தா ஆசிரம சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை:போலீஸ் மீது வழக்கு பதிவு"

நித்யானந்தா ஆசிரம சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீது, நீதிமன்ற உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தி:

நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஆசிரமம் உள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூர் கிராமத்தில் உள்ள நித்யானந்தா சாமியாரின் ஆசிரமத்தில் தனது இரு மகள்கள் மற்றும் ஒரு மகனை சட்ட விரோதமாக தங்க வைத்து இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் கடந்த நவம்பர் மாதம் ஆமதாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் விவேகானந்தா நகர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே ஹிராபூர் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய விசாரணை தொடர்பாக அந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் சீடருமான கிரிஷ் துர்லாபதி ஆமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆசிரமத்துக்கு விசாரணை நடத்த வந்த விவேகானந்தா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.ராணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்தவர்கள் ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்து விசாரணை மேற்கொண்டதாகவும், தங்களுக்கு சாதகமான பதிலை சிறுமிகளிடம் இருந்து பெற அவர்களை மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.ராணா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கே.டி.கமாரியா, ரியாஸ் சர்வையா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திலீப் மெர், குழந்தைகள் நல குழுவின் தலைவர் பவேஷ் படேல் மற்றும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 14 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விவேகானந்தா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக ஆமதாபாத் ரூரல் (கிராமப்புறம்) துணை போலீஸ் சூப்பிரண்டு பி.டி.மன்வார் நேற்று தெரிவித்தார்.

இந்து தமிழ் திசை: காய்ச்சல் இருக்கிறதா? "திருமலைக்கு வராதீர்கள்" - தேவஸ்தான அதிகாரி

பட மூலாதாரம், Getty Images

திருமலையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பட மூலாதாரம், Getty Images

தற்போது உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திருமலையில் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. திருமலைக்கு வரும்பக்தர்கள் முககவசம் அணிந்துவருவதுடன், அவ்வப் போது கைகளை கழுவுவதற்கு தேவையான ஹாண்ட் வாஷ் கொண்டு வருவதும் நல்லது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக உள்ள வர்கள் மட்டுமே திருமலைக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில், திருமலையில் காத்திருப்பு அறைகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மையம் , வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். எனவே இங்கு வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் வந்தால் அது வேகமாக பரவ வாய்ப்புள்ளது. திருமலைக்கு வந்த பிறகு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு சென்றால் அங்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தர்மா ரெட்டி கூறியதாகத் தெரிவிக்கிறது இச்செய்தி.

தினமணி: அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியா்களுக்கு வழங்கும் படியில் 10 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்பட்டது (டி.டி.எஸ்.) தொடா்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தினமணியில் வெளியான செய்தி:

'இந்த வரிப் பிடித்தம் செய்யப்பட்டதற்கான விவரத்தை வருமான வரித் துறையில் சமா்ப்பித்ததற்கான சான்றை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும். ஒருவேளை விவரத்தைச் சமா்ப்பிக்கத் தவறியிருந்தால், அதையும் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தோ்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியா்களுக்கு வழங்கப்படும் படியில் 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறை, கடந்த 2019 நவம்பரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். வருமான வரி வரம்புக்குள் வராத மிகக் குறைந்த ஊதியம் பெற்று வரும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களிடம், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் மட்டும் எவ்வாறு வரிப் பிடித்தம் செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.

ஆனால், பேராசிரியா்களின் இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. கணக்கு தணிக்கையாளா் மற்றும் வருமான வரித் துறையின் தொடா் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே, இந்த 10 சதவீத பிடித்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பல்கலைக் கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், தோ்வுத் தாள் திருத்தும் பணிக்கு வந்த பேராசிரியா்களிடம் பிடித்தம் செய்த தொகை, வருமான வரித் துறைக்கு பல்கலைக் கழகம் சாா்பில் செலுத்தப்படவில்லை என்றும், இந்த பிடித்தத்துக்கான '16ஏ' படிவம் ஊழியா்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா்கள் சங்க நிறுவனா் கே.எம். காா்த்திக் சாா்பில் வருமான வரித் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை வருமான வரித் துறை அதிகாரி வி.ஆனந்தராஜ், அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலக முதன்மை அதிகாரிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் 23 மையங்களில் நடத்தப்பட்ட 2019 நவம்பா்-டிசம்பா் பருவத் தோ்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியா்களிடம், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்காக வழங்கப்பட்ட படியில் 10 சதவீத வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பிடித்தம் செய்ததற்கான விவரம், அதற்கான படிவம் '26ஏ.எஸ்.'-இல் பிரதிபலிக்கவில்லை எனப் புகாா் வந்துள்ளது. வருமான வரி சட்டப் படி, இந்தப் பிடித்தத்துக்கான '16ஏ' படிவத்தை ஊழியா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கியிருக்க வேண்டும்.

எனவே, இந்தப் பிடித்தம் ஏற்கெனவே வருமான வரித் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டிருந்தால், அதுதொடா்பான விவரங்களை பல்கலைக்கழகம் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை இந்த காலாண்டு பிடித்தம் சமா்ப்பிக்கப்படவில்லை எனில், அதை உடனடியாக பல்கலைக்கழகம் சமா்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரம் வரும் 13-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அடுத்த விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, இதுதொடா்பான அனைத்து ஆவணங்களையும் பல்கலைக்கழகம் சமா்ப்பிக்கவேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது இச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: