கொரோனா வைரஸ்: இரானில் சிக்கிய 58 இந்தியர்கள் நாடு திரும்பினர் - விரிவான தகவல்கள்

இரானில் சிக்கிய 58 இந்தியர்கள்

இரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த விமானம் டெல்லி காஜியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.

இரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. இரானில் மட்டும் கொரோனா தொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து மீன்பிடி தொழில் புரிய சென்ற மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பல நூறு பேர் இரானில் சிக்கி இருந்தனர். அவர்களைப் பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து இருந்தார்.

'சி-17 குளோப்மாஸ்டா்'

இந்த சூழலில் இரானிலிருந்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக, இந்திய விமானப் படையைச் சோ்ந்த 'சி-17 குளோப்மாஸ்டா்' போக்குவரத்து ரக விமானம் தில்லியில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்திய விமானப் படையின் 'சி-17 குளோப்மாஸ்டா்' விமானம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கடந்த 2 வாரங்களில் இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், கடந்த மாதம் 2ஆம் தேதி சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து ஏறத்தாழ 100 பேரை இதே விமானம் மீட்டு வந்திருந்தது.

இரானில் சிக்கியிருக்கும் இந்தியா்களை பரிசோதனை செய்த பிறகே அழைத்து வருவதாக தெரிகிறது.

கொரோனா சர்வதேச நிலை என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் இப்போது வரை 3,890 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து பதினோராயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலி. இந்நாட்டில் 20 பகுதிகளில் கொரொனா வைரஸ் பரவி உள்ளது.

இத்தாலியில் சில பகுதிகளில் மட்டும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையானது, இப்போது நாடு முழுவதற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. பயணங்கள், பொதுக் கூட்டங்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: